தமிழ்நாடு அரசின் பட்ஜெட் அறிக்கையில் தங்களது கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து மார்ச் 23 ஆம் தேதியன்று உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தப்போவதாக ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் அறிவித்தனர்.
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் நீண்ட காலமாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்திப் போராடி வருகின்றனர். தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாத தி.மு.க அரசைக் கண்டித்து அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ தற்போது மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு தி.மு.க அரசு தன்னுடைய தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்திருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளாகியும் எந்த கோரிக்கையையும் நிறைவேற்றாமல் தொடர்ந்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் வஞ்சித்து வருகிறது.
பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துதல், காலியாக உள்ள அரசுப் பணியிடங்களை நிரப்புதல், சரண் விடுப்பு தொகையை அமல்படுத்துதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஜாக்டோ ஜியோ (JACTTO-GEO) தொடர்ந்து போராடி வருகிறது.
போராட்டங்களின் தொடர்ச்சியாக கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் ஜாக்டோ ஜியோ அமைப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியது ஆர்ப்பாட்டத்தில் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து மறியல் போராட்டம் நடைபெறும் என்று ஜாக்டோ ஜியோ அறிவித்தது.
பின்னர் தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதன் காரணமாக மார்ச் 14 ஆம் தேதி நடைபெறுகின்ற சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொழில் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை நிறுத்தி வைத்தது.
படிக்க: சென்னை: புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் போராட்டம்
இந்நிலையில் கடந்த 14 ஆம் தேதி அன்று 2025 – 2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டமன்ற கூட்டத் தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சமர்ப்பித்தார். அந்த பட்ஜெட்டில் அரசு ஊழியர்கள் எதிர்பார்த்திருந்த கோரிக்கைகளை தி.மு.க அரசு முற்றிலுமாக புறக்கணித்திருந்தது. இந்த நடவடிக்கை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
அதனை வெளிப்படுத்தும் விதமாக தலைமைச் செயலக ஊழியர் சங்கம் ”அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து எந்த அறிவிப்பையும் தி.மு.க அரசு வெளியிடவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆட்சியாளர்களை அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்” என அறிக்கை வெளியிட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜாக்டோ ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் திருவல்லிக்கேணியில் உள்ள அரசு ஊழியர்கள் சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகிய ஒருங்கிணைப்பாளர்கள் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
முடிவுகள் குறித்துப் பேசிய ஒருங்கிணைப்பாளர் கா. காந்தி ராஜ் “ பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். அதன் பிறகும் அரசு மௌனம் காத்தால் 30 ஆம் தேதி அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவு செய்யப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
”மார்ச் 23 ஆம் தேதி அன்று அரசு ஊழியர்கள் ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், பட்ஜெட் கூட்டத்தொடரில் கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதற்கு தி.மு.க அரசைக் கண்டித்தும் சென்னை எழிலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இதனைப் போன்று அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்” என்று ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. ஜாக்டோ ஜியோ உடன் இணைந்து போராட தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்திருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
படிக்க: தமிழகம் தழுவிய அரசு ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் போராட்டம்!
ஜாக்டோ ஜியோ அமைப்பின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தைப் பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.
இவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் தி.மு.க அரசு ”அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், ஈட்டிய விடுப்பு நாட்களில் 15 நாட்கள் வரை, 01-04-2026 முதல் சரண் செய்து பணப்பலன் பெறுவதற்கான நடைமுறை மீண்டும் செயல்படுத்தப்படும்” என்று அறிவிப்பு ஒன்றை மட்டும் மார்ச் 14 அன்று வெளியிட்டுள்ளது.
ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்காக ஜாக்டோ ஜியோ முன்னெடுக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனைத்து கல்வியாளர்களும், பள்ளி, கல்லூரி மாணவர்களும், ஜனநாயக சக்திகளும் ஆதரவு அளிக்க வேண்டும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram