பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகள்!

பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின கயிறுகளை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மார்ச் 17 ஆம் தேதி அன்று அலகாபாத் உயர்நீதிமன்றம் பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பதும் பைஜாமாவை கழற்றுவதும் பாலியல் வன்கொடுமைக்கான முயற்சியாகாது என்று மிகவும் மோசமான தீர்ப்பை வழங்கியுள்ளது. இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி அன்று உறவினர் வீட்டிற்குச் சென்றுவிட்டு அம்மாவும் மகளும் தங்களது கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். வழியில் இடைமறித்த அவர்களது கிராமத்தைச் சேர்ந்த பவன் மற்றும் ஆகாஷ் ஆகிய இரண்டு இளைஞர்கள் மகளை தாங்கள் வீட்டில் இறக்கிவிடுவதாகத் தெரிவித்துள்ளனர். அம்மாவும் தனது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்ற நம்பிக்கையில் தன் மகளை அவர்களுடன் அனுப்பி வைத்துள்ளார்.

பின்னர் இரண்டு இளைஞர்களும் ஒரு இடத்தில் பைக்கை நிறுத்தியுள்ளனர். பின்னர் பவன் சிறுமியின் கைகளைப் பிடித்துக் கொள்ள ஆகாஷ் சிறுமியின் மார்பகங்களைப் பிடித்தும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்த்தும் அருகிலிருந்த பாலத்திற்கு அடியில் இழுத்துச் சென்றுள்ளான். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அந்த வழியே டிராக்டரில் சென்று கொண்டிருந்த இரண்டு பேர் ஓடி வந்துள்ளனர். உடனே இரண்டு இளைஞர்களும் துப்பாக்கியைக் காட்டி இருவரையும் மிரட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

இளைஞர்கள் ஒருவனின் தந்தை போலீசில் புகார் அளித்தால் கொன்றுவிடுவதாகவும் மிரட்டியுள்ளான். மறுநாள் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் உள்ளூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த தாய் ஜனவரி 2022 இல் காஸ்கஞ்ச் போக்சோ நீதிமன்றத்தில் விண்ணப்பம் அளித்துள்ளார். அதில் தனது மகளுக்கு நடந்த கொடூர நிகழ்வைக் குறிப்பிட்டு மூன்று பேரின் மீதும் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மிரட்டலுக்காக முதல் தகவலறிக்கை பதிவு செய்ய போலீசுக்கு உத்தரவிடும்படி கோரியுள்ளார். அவரின் விண்ணப்பத்தைப் புகாராகப் பதிவு செய்த நீதிமன்றம் மார்ச் 21, 2022 அன்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள் மீதும் வழக்குப் பதிவு செய்யப் போலீசுக்கு உத்தரவிட்டது.


படிக்க: கணவன் செய்யும் பாலியல் வன்கொலை குற்றமாகாது – சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம்


நீதிமன்றம் 15 மாதங்கள் கழித்து 2023 ஆண்டு ஜூன் மாதத்தில் விசாரணைக்காக இரண்டு இளைஞர்களை ஆஜராகும்படி இ.பி.கோ பிரிவுகள் 376 (பாலியல் வன்புணர்வு) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 18 (குற்றம் செய்ய முயற்சித்தல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. குற்றம் சாட்டப்பட்ட இளைஞர்களில் ஒருவரின் தந்தைக்கு இ.பி.கோ பிரிவுகள் 504 (அமைதியை மீறும் வகையில் வேண்டுமென்றே அவமதிப்பு) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் சம்மன் அனுப்பியது. சம்மனை எதிர்த்து மூன்று குற்றவாளிகளும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை அலகாபாத் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் மார்ச் 17 ஆம் தேதி அன்று நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா அமர்வில் விசாரணைக்கு வந்தது. குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பகை காரணமாக பாலியல் வன்கொடுமை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தனிப்பட்ட குடும்ப தகராறு போன்று மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் பேசிய நீதிபதி ராம் மனோகர் நாராயண் மிஸ்ரா “குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்திருக்கிறார்கள் என்பதை ஊகிக்க இந்த தரவுகள் போதுமானதாக இல்லை” என்று கூறினார்.

பெண்ணின் மார்பகங்களைப் பிடித்து, அவரது பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது. ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல் என்ற பிரிவின் கீழ் வரும் என்று பெண்கள் மீதான தன்னுடைய ’சட்ட வியாக்கியானத்தை’ கூறியுள்ளார்.

மேலும் ”பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான சட்டப்பூர்வ வரம்பை இந்த வழக்கு பூர்த்தி செய்யவில்லை. தயாரிப்புக்கும் ஒரு குற்றத்தைச் செய்வதற்கான உண்மையான முயற்சிக்கும் இடையில் அதிக அளவிலான வேறுபாடு உள்ளது” என்று குற்றவாளிகளுக்கு ஆதரவான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

குற்றவாளிகள் பவன் மற்றும் ஆகாஷ் மீதான முந்தைய விசாரணை நீதிமன்றத்தின் சம்மனை நீக்கி இ.பி.கோ பிரிவு 354 (ஆடையைக் கழற்றும் நோக்கத்துடன் தாக்குதல்) மற்றும் போக்சோ சட்டத்தின் பிரிவு 9 மற்றும் 10 (மோசமான பாலியல் தாக்குதல்) ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .


படிக்க: இஸ்லாமிய மக்களை அகதிகளாக்கும் காவி பாசிஸ்டுகள்: கரசேவையில் நீதித்துறை


இந்த உத்தரவு பல தரப்பினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சில மணி நேரங்களுக்குப் பின்பு நீதிபதியின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஷோபா குப்தா, நீதிபதியை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு கடிதம் எழுதினார்.

கடிதத்தில் “இந்தியாவின் பெண்கள் என்ற அமைப்பின் சார்பாக மிகுந்த வேதனையுடனும் கவலையுடனும் எழுதுகிறேன். நீதிபதியின் விளக்கம் மிகவும் தவறானது” என்று வழக்கறிஞர் குப்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ”இந்த விஷயத்தில் நீதிபதியின் அணுகுமுறை உணர்ச்சியற்றது, பொறுப்பற்றது. அனைத்து வயது பெண்களுக்கும் எதிராக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் சமூகத்திற்கு மிகவும் மோசமான செய்தியை அனுப்புகிறது” என்று தெரிவித்துள்ளார்.

மார்ச் 21 அன்று மத்திய அமைச்சர் அன்னபூர்ணா தேவி, “இந்த முடிவை நான் ஆதரிக்கவில்லை. மேலும் உச்ச நீதிமன்றமும் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனெனில் இது ஒரு சிவில் சமூகத்தில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்வாதி மாலிவால் ”இத்தீர்ப்பு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. தீர்ப்பில் கூறப்பட்ட கருத்துகளால் நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். இது மிகவும் வெட்கக்கேடான சூழ்நிலை. அந்த ஆண்கள் செய்த செயலை எப்படி பாலியல் வன்கொடுமைக்குச் சமமான செயலாகக் கருத முடியாது? மார்பைப் பிடிப்பதும், பைஜாமாவின் கயிற்றை அவிழ்க்க முயல்வதும் பாலியல் வன்கொடுமை குற்றமல்ல என்ற கூற்று மிகவும் உணர்ச்சியற்றது; சமூகத்திற்கு மிகவும் ஆபத்தானது. உச்ச நீதிமன்றம் இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்” என்று நீதிமன்றத்தை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளார்.

”நாட்டில் பெண்கள் பெருமளவில் புறக்கணிக்கப்படுவது மிகவும் அருவருப்பானது. இதை நாம் போக்க வேண்டும்,” என்று திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஜூன் மாலியா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி மாதத்தில் சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் திருமணத்திற்குப் பின்பு மனைவியின் விருப்பமின்றி கட்டாய பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது குற்றமாகாது என்கிற மோசமான தீர்ப்பை வழங்கியது. அதனைத் தொடர்ந்து தற்போது பெண்களின் மார்பகங்களைப் பிடிப்பது, பைஜாமாவின் கயிற்றை அவிழ்ப்பது பாலியல் வன்கொடுமையாகாது என்று பெண்களுக்கு எதிரான மிகவும் மோசமான தீர்ப்பினை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ளது.

பாசிச கும்பல் ஆட்சிக்கு வந்த பிறகு பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிகரித்து வரும் பாலியல் வன்முறைகளை அங்கீகரிக்கும் விதத்தில் சமீபத்திய நீதிமன்றத் தீர்ப்புகள் அமைவதானது நீதித்துறையில் பாசிச சித்தாந்தம் ஆதிக்கம் பெறுவதைக் காட்டுகிறது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க