மார்ச் 19 அன்று பாசிஸ்ட் நெதன்யாகுவிற்கு எதிராக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் நெதன்யாகுவிற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
காசா மீது தொடர் தாக்குதல் நடத்தி வந்த இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை வீழ்த்த முடியாமல் ஒரு கட்டத்திற்கு மேல் நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டது. ஜனவரி 19 ஆம் தேதி போர் நிறுத்த ஒப்பந்தம் அமல்படுத்தப்பட்டது. இரு தரப்பிலிருந்தும் பணயக் கைதிகள் விடுவிக்கப்பட்டு வந்தனர். மார்ச் 2 ஆம் தேதி அன்று ஆறு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் முடிந்த உடனே இரண்டாம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் மறுத்து வந்தது. ஆனால் சிறையில் உள்ள அனைத்து இஸ்ரேலிய கைதிகளையும் விடுவிக்க வேண்டும் என்று நயவஞ்சக முறையில் ஹமாசை வலியுறுத்தியது. ஆனால் ஹமாஸ் முற்றிலுமாக அதனை நிராகரித்து விட்டது.
அதன் காரணமாக காசாவிற்குள் செல்லக்கூடிய நிவாரணப் பொருட்களைத் தடுத்து நிறுத்துவது, சுகாதாரப் பணியாளர்களைப் படுகொலை செய்வது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தது. அதன் தொடர்ச்சியாக மார்ச் 18 ஆம் தேதியன்று அதிகாலை முன்னறிவிப்பின்றி காசா மீது கொடூர தாக்குதலை நடத்தி 400-க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்களைப் படுகொலை செய்துள்ளது. இத்தாக்குதல் அமெரிக்காவின் ஒப்புதலுடன்தான் நடந்தது என்பதை அதிபர் மாளிகையும் ஒப்புக்கொண்டுள்ளது.
இத்தாக்குதலைத் தொடர்ந்து நெதன்யாகுவின் லிகுட் கட்சி தீவிர வலதுசாரி கட்சியான யூத சக்தி கட்சி அமைச்சர் இடார் பென் க்விரின் ஆதரவையும் பெற்றுள்ளது. அக்கட்சி நெதன்யாகுவின் கூட்டணியில் இணைவதாகவும் அறிவித்திருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
***
மார்ச் 19 ஆம் தேதி அன்று 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் டெல் அவிவ் நகரிலிருந்து ஜெருசலேம் நோக்கிச் செல்லும் சாலையை மறித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். அங்கு அமைந்திருந்த நாடகக் கட்டிடத்தில் ”மிஸ்டர் அபாண்டன்மென்ட்“ என்கிற வார்த்தைகளை வரைந்து “சர்வாதிகாரியை வீழ்த்துவதற்கான நேரம் வந்துவிட்டது” என்று இஸ்ரேலிய மக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எதிர்க்கட்சி தலைவர் யாயர் லாபிட் “அரசாங்கம் தாங்கள் விரும்புவதையெல்லாம் செய்ய முடியாது என்பதை உறுதி செய்வதே போராட்டத்தின் நோக்கம்” என்றும் “ஜனநாயகத்தைப் பறிக்கும்போது இஸ்ரேல் அமைதியாக இருக்கப் போவதில்லை என்பதை இஸ்ரேல் மக்கள் உலகிற்குச் சொல்ல முயல்கிறார்கள்“ என்று மக்களின் போராட்டம் குறித்துப் பேசினார்.
போராட்டத்தில் கலந்து கொண்ட ஜெருசலேம் கலை பள்ளியின் முன்னாள் இயக்குநர் யுவல் யாய்ரி “மார்ச் 31 அன்று நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்திற்கு முன்பாக நெதன்யாகு தன்னுடைய வலதுசாரி கூட்டணிக் கட்சிகளின் பக்கம் இருக்க விரும்பினார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் “ஒரு உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கான சாத்தியக் கூறு குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். சில நேரங்களில் வெளியேற வழி இல்லை என்று தோன்றுகிறது. மக்கள் இனி ஜனநாயகத்தை நம்பப் போவதில்லை” என்றும் கூறியுள்ளார்.
மார்ச் 18 அன்று தனக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டின் விசாரணையில் சாட்சியமளிக்க நெதன்யாகு திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு காசாவில் இராணுவ நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கியதால் விசாரணை ரத்து செய்யப்பட்டது.
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்படவிருந்த காசாவில் உள்ள பணயக் கைதிகளைப் பற்றி நெதன்யாகு கவலைப்படவில்லை என்று போராடும் இஸ்ரேல் மக்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகுவிற்கு எதிரான போராட்டங்களின் மூலம் தங்களது கோபத்தினை வெளிப்படுத்தி வருகின்றனர். ”இஸ்ரேலிய மக்கள் போரைத் தொடர விரும்பவில்லை; அமைதியை மட்டுமே விரும்புகின்றனர். காசாவில் உயிருடன் உள்ள 24 பணையக் கைதிகளையும், 30-க்கு மேற்பட்டவர்களின் உடல்களையும் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று ஜெருசலேமை தளமாகக் கொண்ட இஸ்ரேலிய ஜனநாயக நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.
அந்நிறுவனம் தன்னுடைய கருத்துக்கணிப்பில் 79 சதவீதத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காசா உடனான போரை முடிவுக்குக் கொண்டுவரவும், காசாவிலிருந்து இஸ்ரேல் தன்னுடைய படைகளைத் திரும்பப் பெறுவதற்கும் வலியுறுத்தியுள்ளனர். லிகுட் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்களில் 61.5 சதவீதம் பேர் போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் தொடர வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram