மேற்குவங்கம்: பெண் தொழிலாளர்களின் முன்னுதாரணமிக்க போராட்டம்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்துவிட முடியவில்லை.

கொல்கத்தா நகரத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் ராமச்சந்திரப்பூர் என்கிற ஊரில் இயங்கி வருகிறது எக்ஸோடஸ் ஃபியூச்சரா (Exodus Futura Knit Pvt. Ltd.) எனப்படும் ஆடை வடிவமைப்பு நிறுவனம். அந்த நிறுவனத்தின் வாயில் கதவுகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் அதன் வாசலில் மூங்கிலினாலும் நீல நிற பிளாஸ்டிக் காகிதத்தினாலும் உருவாக்கப்பட்டிருந்தது அந்த போராட்ட பந்தல். கடந்த பிப்ரவரி 18 அன்று பந்தலின் உள்ளே கூட்டமாகப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ரமலான் நோன்புக்கான இஃப்தார் உணவு தயாரிக்க குதூகலத்துடன் காய்கறி பழங்களை வெட்டிக்கொண்டு கொண்டாட்டமாக இருந்தனர். அவர்களின் முகங்களில் சிரிப்பும் மகிழ்ச்சியும் நிரம்பி வழிந்தது.

இந்த தற்காலிகப் பந்தல் 400க்கும் மேற்பட்ட பெண்களுக்கு கடந்த 25 நாட்களாக சொந்த வீடாகவே மாறிப் போயிருந்தது. மூடப்பட்டிருந்த கம்பெனி கேட்டின் முன்னாலேயே இரவும் பகலுமாக அங்கேயே இருந்து கொண்டு தங்களுக்கு நியாயப்படி சேர வேண்டிய ஐந்து ஆண்டுகளுக்கான சேமநல நிதி பாக்கிகளையும் ஊதிய உயர்வையும் உடனே வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் “தங்கியிருப்புப் போராட்டம்” நடத்தி வந்தனர். சிறிதும் தளர்ச்சி இல்லாமல் தொடர்ந்து 25 நாட்கள், அதாவது பிப்ரவரி 21 முதல் மார்ச் 17 வரை நடத்தப்பட்ட இப்போராட்டத்திற்கு இறுதியாக மார்ச் 18 அன்று உறுதியான வெற்றி கிடைத்தது. மூடப்பட்டிருந்த கம்பெனி வாயில்கள் விரியத் திறக்கப்பட்டு மீண்டும் உற்பத்தி தொடங்கப்பட்டிருக்கிறது.

உலகத்தை ஏமாற்றும் பிராண்ட் நிறுவனங்கள்:

இந்த எக்சோடஸ் பியூச்சரா ஆடை வடிவமைப்புக் கம்பெனி என்பது பெண்டலூன் (Pantaloon), டெக்கத்லான் (Decathlon), போலோ (Polo), ஃபர்ஸ்ட் கிரை (First Cry) மற்றும் த்ரீ ஆரோஸ் (Three Arrows), ஆதித்யா பிர்லா, ரிலையன்ஸ் போன்ற அனைத்து இந்திய மற்றும் சர்வதேச பிராண்ட் நிறுவனங்களுக்கும் ஆடை வடிவமைத்து விநியோகம் செய்கிறது. ரெடிமேட் ஆடை தயாரிக்கும் இந்த நிறுவனம் ஆறு ஏக்கர் நிலப்பரப்பில் 800 ஓரம் வெட்டும் இயந்திரங்கள் (Edge Cutting Machine) மற்றும் பல வகையான தனிச்சிறப்பான கலை வடிவமைப்பு இயந்திரங்களும் இயங்கக்கூடிய மிகப் பெரிய நிறுவனமாகும். ஒரு நாளைக்கு 30,000 என்ற எண்ணிக்கையில் பலவகையான ஆடைகளைத் தயாரித்துத் தள்ளி கொள்ளை இலாபம் அடிக்கின்றது. பிராண்ட் என்பதெல்லாம் வெறும் லேபல் மட்டுமே மற்றபடி உழைப்பெல்லாம் மேற்கு வங்கத்தின் ஏழைப் பெண்களுடையது.

இந்த கம்பெனியில் 900 பெண்கள் 6 ஷிப்ட்டுகளில் வேலை செய்கின்றனர். கம்பெனியின் இலக்கு பற்றிய வாசகமாக “பெண்களை அதிகார படுத்துவோம்”, ” சமூக சமத்துவம் படைப்போம்” என்று பெருமையுடன் பொறித்துக் கொண்டிருக்கிறது அந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம். ஆனாலும் தங்களுக்கு நீண்ட காலமாகத் தள்ளிப் போட்டுக் கொண்டு வந்த ஊதிய பாக்கிகளை உடனே பட்டுவாடா செய்யக் கேட்கத் தொடங்கியவுடன் தொழிலாளர்களைப் பட்டினி போட்டுப் பணிய வைக்கும் நோக்கத்துடன், நிர்வாகம் திடீரென்று உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்தி விட்டதாக அறிவிப்பு செய்துவிட்டு கம்பெனிக் கதவுகளை இழுத்து மூடிவிட்டது. அன்றிலிருந்து 400க்கும் மேற்பட்ட பெண்கள் (தங்களுக்குள் இரண்டு ஷிப்ட் அமைத்துக் கொண்டனர்) கம்பெனி வாயிலிலேயே பந்தல் அமைத்து அங்கேயே தங்கி விட்டனர். உள்ளிருந்து வெளியே போகவோ வெளியிலிருந்து உள்ளே வரவோ எந்த வாகன போக்குவரத்தையும் பெண் தொழிலாளர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே உற்பத்தி செய்து முடிக்கப்பட்ட பொருள்கள் அப்படி அப்படியே தேங்கிப் போயின.

2011 செப்டம்பரில் நிறுவப்பட்ட இந்த எக்ஸோடஸ் ஆடை வடிவமைப்பு நிறுவனம் தனது உற்பத்தியை மூன்றாகப் பிரித்து நடத்தி வருகிறது. பின்னலாடை தயாரிப்பு நிறுவனம் ஹவுராவில் இயங்குகிறது. சாயம் இடும் ஆலை விஷ்ணுப்பூரில் இயங்குகிறது. ஆடை வடிவமைப்பு நிறுவனம் ராமச்சந்திரப்பூரில் இயங்கி வருகிறது. இங்கு பணிபுரியும் 900 பெண்களில் 700 பேர் உள்ளூர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். 200 பேர் மோடி அரசின் ஸ்கில் இந்தியா திட்டத்தின் கீழ் பயிற்சி பெறுவதற்காக ஜார்க்கண்ட் மாநிலத்திலிருந்து வரவழைக்கப்பட்டிருந்த இளம் பெண்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு இவ்வளவு என்று மிகக் குறைந்த கூலி, கம்பெனி வளாகத்துக்குள்ளேயே உணவும் தங்குமிடமும் அமைத்துத் தரப்பட்டிருக்கிறது. உள்ளூர் பெண்களிடமிருந்து ஜார்க்கண்ட் மாநில பயிற்சி பெண்கள் பேசவோ பழகவோ விடாமல் பிரித்தே வைக்கப்பட்டிருந்தனர்.

கடுமையான, இடைவிடாத உழைப்புச் சுரண்டல்:

இந்நிறுவனத்தில் தொடர்ந்து 18 மாதம் வேலை செய்த பிறகுதான் அவர்கள் ஒரு தொழிலாளியாகக் கணக்கில் கொள்ளப்பட்டு வேலைக்கான உத்தரவு கொடுக்கப்பட்டு அதிலிருந்து அவர்களுக்கு முறையான மாதாந்திர ஊதியம் வழங்கப்படுவதுடன் சேமநல நிதி பிடித்தமும் அதற்குப் பிறகு தான் செய்யப்படுகிறது. வேலை நிலைமையோ மிகவும் மோசம். ஒரே வரியில் சொன்னால் ஓய்வில்லாத உழைப்பு; எந்த இடைவேளையும் கிடையாது. எல்லாமும் வேலையினூடாக என்ற முறையே பின்பற்றப்படுகிறது. அன்றாடம் காலை 9 மணிக்குள் கம்பெனி வாயிலுக்குள் நுழைந்து விட வேண்டும். அவர்களுக்குக் கொடுக்கப்படும் உற்பத்தி இலக்கு முடியும் வரை இருந்து வேலையை முடித்துவிட்டுத் தான் வெளியே செல்ல முடியும். தற்செயல் விடுப்பு எனப்படும் CL முற்றாக கிடையாது. ஊதியத்துடன் கூடிய விடுப்பு எனப்படும் EL இருக்கும்; ஆனால் எத்தனை நாள் எடுத்தார்கள் என்பதைப் பற்றி எந்த கணக்கு வழக்கும் இருக்காது. அதிகாரி பார்த்துக் கொடுப்பதுதான் என்ற முறையே பின்பற்றப்பட்டது.

மாதச் சம்பளத்தில் சேமநல நிதி பிடிக்கப்படும்; ஆனால் அதற்கு இணையாக நிர்வாகம் தர வேண்டிய தொகை இவர்களது சேமநல நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டிருக்காது. அது நீண்ட நாள் தொடர்ந்து பிறகு ஒரு கட்டத்தில் தான் தொழிலாளர்கள் அதைக் கவனித்தனர். 2022 இல் இந்த சேமநல நிதியை வழங்குமாறு ஒரு போராட்டம் நடத்தினர். உடனே வழங்கி விடுகிறோம் என்று நிர்வாகம் வாய்மொழி உத்தரவாதம் மட்டும் கொடுத்தது. அதை நம்பி போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால் நிர்வாகமோ வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டது. பெண்கள் தானே என்று ஏளனப்படுத்தும் வகையில் நடந்து கொண்டது. 2024 தொடக்கத்தில் மீண்டும் அதே கோரிக்கையை எழுப்பி நிர்வாகத்துடனான பேச்சு வார்த்தையில் உடனே தந்து விடுவதாக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனாலும் டிசம்பர் 24 முடிய சேம நல்ல நிதி வந்து சேரவில்லை.

ஆனால் இந்த கம்பெனி தன்னை மாடல் நிர்வாகம் என்று விளம்பரப்படுத்திக் கொண்டது அதன் தலைமை நிர்வாகி கயான் ருஹனாகே “இங்கே மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்ந்து கஷ்டப்படுகின்றனர். மக்கள் பெரும்பாலும் வேலைத் திறனற்றவர்களாக தங்களைத் தகுதிப்படுத்திக் கொள்ளாதவர்களாக இருக்கிறார்கள். நாங்கள் அவர்களை, குறிப்பாக வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்கள் என்று அரசு அடையாள அட்டை பெற்றிருப்பவர்களை, வேலைக்குச் சேர்த்து அவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டி வேலையில் பயிற்சியும் கொடுத்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி இருக்கிறோம்” என்று பெருமை பீற்றிக் கொண்டார். இது புதியதொன்றும் அல்ல. தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் நெசவாலைகளில் பேசப்பட்ட சுமங்கலித் திட்டம் போன்றது தான். பலவாறாக அடித்தட்டு மக்களை, குறிப்பாக இளம் பெண்களை, கேட்பாரற்ற முறையில் கசக்கிப் பிழியும் வேலை முறைகள் தான். இவை ஒன்றும் வறுமை ஒழிப்பு திட்டம் அல்ல; ஒரு முதலாளிக்கு எக்காலத்திலும் அது ஒரு நோக்கமாக இருக்கவே முடியாது என்பது யாவரும் அறிந்ததே.

சுரண்டலுக்கு அடித்தளமானது ஏழ்மை,
ஆனால் அதே சுரண்டல்தான் வர்க்க ஒற்றுமையையும் கட்டியமைத்தது:

இந்த நிர்வாகம் அடித்தட்டு பெண்களின் ஆணாதிக்கத்தின் கீழான வாழ்க்கை நிலைமைகளைப் புரிந்து வைத்துள்ளது. அதாவது இந்த பிரிவு பெண்கள் பொதுவில் எந்த உத்தரவுக்கும் உடனடியாகவும் முழுமையாகவும் கீழ்ப்படிபவர்களாகவும், எப்போதும் எதையாவது சார்ந்தே இருப்பவர்களாகவும், தங்களை அமைப்பாக்கிக் கொள்ளும் தேவையை உணர முடியாதவர்களாகவும் இருப்பதுதான் முதலாளிகளுக்கு விரும்பத் தகுந்ததாக அமைகிறது. மலிவான உழைப்பு சக்தி, அதாவது மிகக் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்யக் கூடியவர்களாக இப்பெண்கள் கிடைக்கிறார்கள். சொன்ன வேலையை எல்லாம் செய்யக் கூடியவர்களாகவும் இருக்கிறார்கள். எட்டு மணி நேர வேலை என்பது வெறுமனே காகிதத்தில் எழுதப்பட்டிருப்பதுதான். நடைமுறையுடன் அதற்கு எந்த சம்பந்தமும் இல்லை. இது ஊரறிந்த செய்தி தான் என்றாலும் இங்கே வேலை நாளின் ஒவ்வொரு 15 நிமிடத்திலும் இலக்கு நிறைவேறிய எண்ணிக்கை சோதிக்கப்படும். ஒவ்வொரு 15 நிமிடத்திலும் ஏற்படுகின்ற இலக்கு குறைவுகள் கணக்கிடப்படுகின்றது. அனைத்தையும் முடித்துவிட்டுத் தான் வேலையிலிருந்து வெளியேற வேண்டும்.

வேலை நேரம் முழுவதும் கைப்பேசிகளை அலுவலகத்தில் ஒப்படைத்து விட வேண்டும். எப்போதும் கண்காணிப்பு கேமரா மூலம் இவர்கள் நேரடி கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும். அடுத்தவரிடம் பேசுவது என்பது கூடாது. கூடிப் பேசுவது என்பது கூடவே கூடாது. வேலையில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும்; கவனம் சிதறக் கூடாது. நிர்வாகத்தைப் பொறுத்தவரை உழைப்பாளிகள் இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டு, இயந்திரங்களோடு சேர்ந்து இயங்கக்கூடிய இயந்திரத்தின் இன்னுமொரு பகுதியே. ஆடையாக மாற்றப்பட வேண்டிய துணி மார்க் செய்யவும், வெட்டவும், தைக்கவும், டிசைன்கள் அச்சிடவும், அயரன் செய்யவும், மடித்து பெட்டிகளில் அடைக்கவும் கைமாறிக் கொண்டே இருக்கும். அந்தக் கைகளின் உடைமையாளர்களோ தானியங்கி இயந்திரங்களோடு இணைக்கப்பட்ட இன்னொரு உதிரிப்பாகமாகவே கருதப்படுகின்றனர். அதற்கு மேல் எதுவும் இல்லை.

உற்பத்தி இலக்குடனான இந்த நெருக்கமான பிணைப்புதான் பெண்களுக்கு இயற்கை உபாதைகளுக்கும், டீ, காபி அருந்தும் எந்த இடைவேளைக்கும் தடையாய் நிற்பது. இப்படி எதற்குமே ஓய்வில்லாத இந்த உழைப்பு முறையே அப்பெண்களின் உடல் நலனைப் பெரிதும் பாதிக்கின்றது. கர்ப்பப் பை தொடர்பான நோய்கள், சிறுநீரகக் கல், நிரந்தர முதுகுத்தண்டு வலி ஆகியவை எல்லாம் இந்த தொழில் சார்ந்த நோய்களாக கட்டாயமாக ஒட்டிக் கொள்கின்றன. இவற்றுக்கும் பிறகு தரக்கட்டுப்பாட்டுச் சோதனையில் தரத்தில் ஏதும் தவறு நேர்ந்து விட்டால் அவர்களே இருந்து வேலையைத் திருத்தி முடித்துத் தர வேண்டும் என்பதுடன் தவறுகளுக்காக அனைவரின் முன்னிலையிலும் இழிவாகப் பேசுவார்கள். வார்த்தைகளில் எந்த கட்டுப்பாடும் இருக்காது. வேலையின் போது இப்படி பேச்சு வாங்க நேரக்கூடாது என்கிற அச்சம் அவர்களை உள்ளூர எச்சரித்துக் கொண்டே இருக்கும்.

உழைப்பைப் பிழிந்தெடுப்பதில் இலக்குடன் அக்கரை காட்டும் நிர்வாகம், ஊதியம் சேமநல நிதி என்று வரும் பொழுது அவர்களின் கண்கள் பஞ்சடைந்து விடுகின்றன. எதையுமே கேட்டிராதவர்கள் போல் நடந்து கொள்ளுகிறார்கள். தி ஒயர் இணையதள பத்திரிக்கையாளரிடம் பேசும்போது ஒரு பெண் கூறுகிறார் “அரிசிக் கஞ்சியைக் குடித்து உயிர் வாழும் பெண்களுக்கு, இவ்வளவு பெரிய கணக்கெல்லாம் போட வருகிறதா” என்று நமக்குச் சிரிப்புடன் கேட்பானாம் ஒரு அதிகாரி. இறுதியாக இவை குறித்துப் பேச கம்பெனி முதலாளியைச் சந்திக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கூட்டாகச் சேர்ந்து கடிதம் கொடுத்தபோது தொழிலாளர்களை மிரட்டுகின்ற வகையில் நிர்வாகத்தினரே தற்காலிகமாக கம்பெனியை மூடுவதாக அறிவித்து கம்பெனி கேட்டை மூடி சீல் வைத்துவிட்டனர்.

திடீரென போர்க்கோலம் பூண்ட பெண் தொழிலாளர்கள்:

ஆனால் தொழிலாளர்களான பெண்கள் வாயில் கதவு மூடிய அன்றிலிருந்து 25 நாட்களாக அங்கேயே, கம்பெனி வாசலிலேயே, உட்கார்ந்து விட்டார்கள். “முதலாளியை நேரில் சந்திக்க வேண்டும், பிரச்சனைகளைப் பேசுவோம், தீர்த்து வைப்போம் உற்பத்தியைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தது. ரம்ஜான் நோன்பு தொடங்கி விட்டதால் அதிகாலை 3 மணிக்கு இஸ்லாமியப் பெண்கள் இடத்தை விட்டு வெளியே செல்ல இந்து பெண்கள் அவ்விடத்தை நிரப்பினர். தங்களுக்குள் கூட்டம் நடத்தும் போது கூடும் வீட்டிலேயே அனைவருக்கும் ஒன்றாகச் சேர்ந்து சமைத்து உண்டனர். ஒவ்வொரு நாளும் பாதி பெண்கள் மட்டும் வீட்டுக்குச் சென்று உணவு சமைத்து கூடுதலாக எடுத்துக்கொண்டு பந்தலில் உள்ள மற்றவருக்கும் பகிர்ந்து உண்ணுவார்கள். இவையெல்லாம் தொழிலாளர்கள் இடையே வர்க்க ஒற்றுமையை மேலும் இறுக்கமடையச் செய்தது.

தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் பேசக்கூடாது சேரக்கூடாது என்று என்னதான் நிர்வாகம் கண்டிப்பு செய்தாலும் பெண்களிடத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்து கொண்டேதான் இருந்தது. கண்டிப்புகளை மீறி பெண்கள் தங்களுக்குள் பலவாறான குறிப்புகள், சைகைகளின் மூலம் தகவல்களைப் பரிமாறிக் கொள்ளவே செய்தனர். ”எங்கள் உடல் மொழியை அவர்கள் எப்படி தடை செய்து விட முடியும்?” என்று சிரிப்புடன் கேட்டார் ஒரு பெண். ”அந்த நட்புணர்வின் நீட்டிப்பாகத்தான் நாங்கள் இந்த 25 நாட்களை வெட்ட வெளியில் கொளுத்தும் வெயிலிலும் கொசுத்தொல்லையிலும் கழிக்க முடிந்தது. சுற்றிலும் உள்ள மக்கள் எங்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்தார்கள். எங்களுக்காக அவர்களது வீட்டுக் கழிப்பறைகளைக் கூடத் திறந்து விட்டார்கள்” என்று கண்ணீருடன் கூறினார் ஒரு பெண்.

போராட்டக் களத்தில் இஃப்தார் தயார் செய்த பெண் தொழிலாளர்கள்

போராட்டப் பந்தலில் பல வகையான கலைத்திறன்களை வெளிப்படுத்தி ஆடல் பாடல் மிமிக்ரி என்று கேலிச் சிரிப்பும் பேச்சுமாகப் பொழுதைக் கழித்ததுடன் பலர் புதுவகை பாடல்களை அங்கேயே உருவாக்கினர். கலந்துரையாடி போராட்ட உணர்வுகளை உயர்த்திக் கொண்டனர். இந்த 25 நாட்களிலும் நிர்வாகம் அவர்களைப் பயமுறுத்திப் பணிய வைத்து விட முடியவில்லை. மாவட்ட ஆட்சியரே வந்தபோதிலும் தங்களது கோரிக்கைகள் நியாயமானது என்றும் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால் உற்பத்தியைத் தொடர நாங்கள் எப்போதும் தயார் என்று ஒரே பதிலைத் திரும்பத் திரும்பக் கூறினர். அதற்கு யாரிடமும் பதில் இல்லை.

உறுதியான போராட்டத்தினால் வென்ற பெண் தொழிலாளர்கள்:

கடைசியாக 23வது நாளன்று தொழிலாளர் நல ஆணையர் முன்னிலையில் தொழிலாளர்களுடன் பேச நிர்வாகம் இறங்கி வந்தது. இருதரப்பு பேச்சுவார்த்தை என்று முடிவு செய்யப்பட்டது. தொழிலாளர் பிரதிநிதிகள் நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மற்ற தொழிலாளிகள் வாசலில் போராட்டப் பந்தலில் காத்திருந்தனர். இறுதியாக பேச்சுவார்த்தை முடிவில் அடிப்படைச் சம்பளமும் வருடாந்திர ஊதிய உயர்வும் முடிவு செய்யப்பட்டது. தற்செயல் மற்றும் ஊதியத்துடன் கூடிய விடுப்புகள் தொழிற்சாலை சட்டப்படி வழங்க ஏற்றுக்கொள்ளப்பட்டது. சேமநலநிதி பாக்கிகள் இந்த ஆண்டு இறுதிக்குள் முழுவதுமாக செலுத்தி முடிக்கப்படும் என்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனாலும் தொழிலாளர் பிரதிநிதிகள் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டு விடவில்லை. சக தொழிலாளர்களுடன் கலந்து பேசி ஒத்த கருத்துக்கு வர அவகாசம் பெற்று அவ்வாறே தொழிலாளர்கள் அனைவரிடமும் ஒப்புதலைப் பெற்று பின்னர் தான் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

நாடெங்கிலும் மதவெறி விசிறிவிடப்படும் இன்றைய நிலையில் தொழிலாளர்கள் சங்கமாவதைத் தடுக்கவும், குற்றமாக்கவும் புதுப்புது ஒழுங்குமுறை சட்டங்கள் வந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில், முதலாளிகள் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கவும் பிரித்தாளவும் இயன்றதனைத்தையும் செய்து கொண்டிருக்கின்ற இந்த காலத்தில், பெண் தொழிலாளர்கள் ஒரு தனியார் தொழிற்சாலையில் ஒன்று கூடி எதிர்த்து நின்று வெற்றியீட்டியது உலகத் தொழிலாளி வர்க்கத்துக்கே உற்சாகமூட்டும் சாதனையாகும்.

தங்களின் குடும்பப் பிரச்சினைகளை எல்லாம் தாண்டி கூட்டான உணவு முறை மற்றும் கூட்டான வாழ்க்கையைப் பின்பற்றி, மத நம்பிக்கைகள் குறுக்கிடாமல் மத நல்லிணக்கத்தை அங்கீகரித்து ஒற்றுமை உணர்வைக் கட்டியெழுப்பியது, போராட்ட பந்தலில் கூட்டாக வாழ்ந்தது என்பதெல்லாம் தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டமைக்க புதுப்புது வழிகளை வாய்ப்புகளைத் திறந்து காட்டியுள்ளது. இப்பெண் தொழிலாளர்களின் போராட்டம் எந்த ஒடுக்குமுறை நிலைமையிலும் தொழிலாளர் ஒற்றுமை பின்னப்பட முடியும் என்கிற நம்பிக்கையை ஊட்டுகிறது.

செய்தி ஆதாரம்: தி வயர்


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க