பார்ப்பன கும்பலிடமிருந்து புத்தர் கோயில்களை மீட்கப் போராட்டம்!

”புத்த கோயிலில் பார்ப்பன சடங்குகள் மற்றும் இந்து நடைமுறைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. மூடநம்பிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு நடைமுறையில் இருப்பது அதற்கு நேர் மாறானது”

காபோதி கோயில் மீதான பார்ப்பனர்களின் கட்டுப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் போராட்டம் மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களில் அதிகரித்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 24 வயதான விஷால் கதம் புத்தகயாவில் உள்ள மகாபோதி கோயிலில் புத்தர் ஞானம் பெற்றதாக நம்பப்படும் இடத்தைப் பார்க்க ஆர்வமாகச் சென்றுள்ளார். அங்கு, கோயில் வளாகத்தின் மூலைகளில் இந்து கடவுள்கள் மற்றும் தெய்வங்களின் சிலைகள் இருந்துள்ளன.

இது குறித்து அவர் கூறுகையில் “பௌத்த மதத்தின் அடையாளங்கள் மிகக் குறைவாகவே இருந்தது” எனவும் “பூஜைகள், சடங்குகள் செய்ய ஏராளமான பூசாரிகள் இருந்தனர்” எனவும் பார்ப்பனர் ஆதிக்கத்தை அம்பலப்படுத்தினார்.

இந்து மதத்தில் சடங்கு மற்றும் சாதியப் படிநிலைக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு மாற்றாக கி.மு 6 ஆம் நூற்றாண்டில் புத்த மதம் பிறந்தது. மகாபோதி கோயில் புத்தருடன் தொடர்புடைய நான்கு ஆலயங்களில் ஒன்றாகும்.

எனவே, கடந்த பிப்ரவரியில், மகாபோதி கோயிலின் முழு கட்டுப்பாட்டையும் கோரி, பல புத்த பிக்குகள் புத்த கயாவில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளனர்.

ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வக தொழில்நுட்ப வல்லுநராகப் பணியாற்றும் கதம், 1949 ஆம் ஆண்டு புத்தகயா கோயில் சட்டத்தை ரத்து செய்யக் கோரி, மும்பையின் செம்பூர் மற்றும் பாந்த்ரா பகுதிகளில் நடைபெற்ற பேரணிகளில் கலந்து கொண்டுள்ளார். “எங்களுடையது முழுவதுமாக எங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்” என்கிறார்.

மகாபோதி கோயிலை “மீட்பதற்கான” இயக்கம் மகாராஷ்டிராவில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் இந்தியாவிலேயே அதிக பௌத்த மக்கள் தொகை (65.3 லட்சம்) இங்கு தான் உள்ளனர். இதுவரை கோயிலை பௌத்த மக்களின் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஆதரிக்கும் வகையில் மாநிலத்தில் குறைந்தது 62 பேரணிகள் நடைபெற்றுள்ளன. தலித், பௌத்த சமூகங்களின் ஆதரவாளர்களைக் கொண்ட வஞ்சித் பகுஜன் அகாதி மற்றும் இந்தியக் குடியரசுக் கட்சி போன்ற அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்தியுள்ளன.


படிக்க: முருகனைப் பற்றிய  பார்ப்பனப் புரட்டு: களவாடும் பார்ப்பனக் கும்பலை விரட்டு!


ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாடு முழுவதும் இதேபோன்ற பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. மார்ச் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் புத்தகயாவில் ஒரு பெரிய பேரணிக்குத் திட்டமிட்டிருந்தனர்.

இது குறித்துக் கூறுகையில், “முதன்முறையாக, எங்கள் போராட்டம் இந்தியா முழுவதும் ஒரு வடிவத்தை எடுக்கிறது” என்கிறார் இந்திய புத்த சங்கத்தின் தேசிய செயலாளர் பிகாஜி காம்ளே.

***

1949 ஆம் ஆண்டு புத்த கயா கோயில் சட்டம், பீகார் மாநில அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழு, மகாபோதி கோயில் மற்றும் அதன் சொத்துக்களின் “மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டை” கவனிக்கும் என்று கூறுகிறது.

சட்ட விதிகளின்படி, குழுவில் மாநில அரசால் பரிந்துரைக்கப்பட்ட எட்டு உறுப்பினர்கள் இருக்க வேண்டும். அவர்களில் நான்கு பேர் இந்துக்களாக இருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் ஒரு இந்துவாக இருந்தால், அவரே குழுவின் தலைவராகவும் பதவி வகிப்பார்.

இந்தச் சட்ட விதிகளுக்குப் பின்னால் உள்ள பார்ப்பன கும்பலின் சூழ்ச்சி குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வஞ்சித் பகுஜன் அகாதியின் மும்பை துணைத் தலைவர் சேதன் அஹிரே கூறுகையில், “சாய்பாபா கோயிலின் குழு உறுப்பினர்களாகவோ அல்லது இஸ்லாமிய அறக்கட்டளையின் குழு உறுப்பினர்களாகவோ புத்த துறவிகள் இல்லை” என்கிறார். “அப்படியானால் எங்கள் கோவிலில் ஏன் இந்து உறுப்பினர்கள் இருக்கிறார்கள்?” என்று பார்ப்பன மேலாதிக்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புகிறார்.

மகாபோதி கோயில் வளாகத்தில் ராமர் மற்றும் லட்சுமணன் சிலைகள் இருப்பதாக அஹிரே அம்பலப்படுத்துகிறார். “ஒரு அனுமன் சிலையும் உள்ளது. ஆனால் அங்கு புத்த மதம் பற்றிய எழுத்துகள் மிகக் குறைவாகவே உள்ளன,” என்று பார்ப்பன கும்பலின் பிடியில் புத்தர் கோயில் சிக்குண்டதையும், அதனை மீட்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறார்.

புத்த மதத்தைப் பற்றி மேலும் அறிய கோயிலுக்கு வரும் பல சர்வதேச சுற்றுலாப் பயணிகள், பாண்டவர்கள் அல்லது ராமாயணத்தின் புராணக் கதைகளால் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள்.


படிக்க: திருப்பரங்குன்றம்: தமிழ்நாட்டின் அயோத்தியல்ல, பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் தொடர்ச்சி!


இந்திய புத்த சங்கத்தை (Buddhist Society of India) சேர்ந்த தொடர்புடைய தேவானந்த் லோகண்டே (Devanand Lokhande), கோயிலின் இந்து உறுப்பினர்களின் ஆதிக்கத்தால், ”புத்த கோயிலில் பார்ப்பன சடங்குகள் மற்றும் இந்து நடைமுறைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. மூடநம்பிக்கைகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ள புத்தர் நமக்குக் கற்றுக் கொடுத்தார். ஆனால், அங்கு நடைமுறையில் இருப்பது அதற்கு நேர் மாறானது” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார்.

போராட்டங்கள் குறித்து முக்கிய அரசியல் கட்சிகள் அமைதியாக இருந்துகொண்டு பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளுக்கு ஆதரவாகச் செயல்படுவதும் அம்பலமாகியுள்ளது. கோயில் மேலாண்மை குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்தபோது இந்திய தேசிய காங்கிரஸ் ஆட்சியிலிருந்தது. தற்போது பாரதிய ஜனதா கட்சி ஆட்சியில் உள்ளது. ஆனால் இரு கட்சிகளும் பார்ப்பன ஆதரவு கண்ணோட்டத்தைக் கொண்டுள்ளன என்றும், இரண்டு கட்சிகளும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை எதிரான நிலைப்பாட்டில் இணைகின்றன என்றும் கூறுகிறார்.

மேலும், வஞ்சித் பகுஜன் அகாதி, இந்தியக் குடியரசுக் கட்சி மற்றும் ஆசாத் சமாஜ் கட்சி போன்ற தலித் மற்றும் பகுஜன் அரசியல் கட்சிகள் மட்டுமே இந்தக் கோரிக்கையை ஆதரித்து வந்துள்ளன என்று அவர் கூறுகிறார்.

மகாராஷ்டிராவில் 1956 இல், பீம்ராவ் அம்பேத்கரால் தலித்-பௌத்த இயக்கத்தைத் தொடங்கியபோது, புத்த மதம் ஒரு ஊக்கத்தைப் பெற்றது. இந்த இயக்கம் இந்து மதத்திற்குச் சவால் விடுத்ததோடு, சாதி படிநிலையை நிராகரித்தது. மேலும் பார்ப்பனர்களால் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்ட பல தலித்துகளை புத்த மதத்திற்கு மாற வழிவகுத்தது.

மும்பை மாநகராட்சியில் ஓய்வு பெற்ற ஊழியரான 66 வயதான காம்ளே, “பௌத்தத்தை ஏற்றுக்கொள்வது சாதி அமைப்பை நிராகரிப்பதற்கான எங்கள் வழியாகும். இப்போது பார்ப்பனர்கள் எங்கள் கோயிலையும் கட்டுப்படுத்த முயல்கின்றனர்” என்கிறார்.

மும்பையில் உள்ள இந்திய புத்த சங்கத்தின் ஒரு கிளையின் தலைவரான அனந்த் ஜாதவ், “கோயிலில் பூசாரிகள் திணிக்கும் மூடநம்பிக்கைகளை எதிர்க்க போராட்டங்களில் இணைந்ததாகவும், பல யாத்திரிகர்களுக்கு வரலாறு தெரியாது, அவர்கள் எளிதில் முட்டாளாக்கப்படுகிறார்கள்” எனவும், ”பூசாரிகள் பணம் சம்பாதிக்கிறார்கள்” எனவும் கூறுகிறார்.


படிக்க: பார்ப்பனிய எதிர்ப்பு புரட்சி நடக்காமல் போனதற்கான காரணம் || அம்பேத்கர்


போராட்டங்களில் கலந்து கொண்ட பலர், “நாங்கள் எந்த மதத்திற்கும் எதிரானவர்கள் அல்ல. ஆனால், எங்களுக்கு மிகவும் புனிதமான ஒரு இடத்தை வணிகமயமாக்குவதை நாங்கள் விரும்பவில்லை” என்கின்றனர்.

வஞ்சித் பகுஜன் அகாடியின் (Vanchit Bahujan Aghadi) பொதுச் செயலாளரான பிரியதர்ஷி தெலங், “மகாபோதி கோயில் உலகெங்கிலும் உள்ள பௌத்தர்களுக்குப் புனிதமானது. இது இந்திய அரசாங்கத்திடமிருந்தும் மியான்மார், வியட்நாம், தாய்லாந்து மற்றும் பிற நாடுகளில் உள்ள சர்வதேச பௌத்த குழுக்களிடமிருந்தும் நிதியைப் பெறுகிறது. ஆனால், அதன் நிர்வாகத்தில் மட்டும் புத்தர்களை ஏன் ஈடுபடுத்தக்கூடாது?” எனக் கேள்வி எழுப்புகிறார்.

வாட்டிகனை கத்தோலிக்கர்களும், மெக்காவை முஸ்லிம்களும் நிர்வகிக்கிறார்கள் என்றால், மகாபோதி கோயிலை பௌத்தர்கள் நிர்வகிக்க வேண்டும் என்று கோருவதும் நியாயமானதுதான். “ஏன் பார்ப்பனர்கள் இதில் ஈடுபட வேண்டும்?” என புத்த மக்களின் போராட்ட குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இந்தியா முழுவதும் உள்ள பல இந்து கோயில்களில் புத்த மத தோற்றம் பற்றிய தொல்பொருள் சான்றுகள் இருப்பதாகவும், பௌத்தர்கள் இந்த கோயில்களின் உரிமைகளைக் கோரத் தொடங்கினால், பெரும் அதிர்வலைகள் ஏற்படும் என்றும் பார்ப்பன கும்பலுக்கும், பாசிச மோடி அரசிற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேற்கு வங்கத்தைச் சுற்றியுள்ள தலித் மக்கள் கோயில் கருவறை நுழைவு போராட்டங்களை முன்னெடுப்பதும், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்கள் புத்த கோயில் மீட்புக்கான போராட்டங்களை முன்னெடுப்பதும் வரவேற்கத்தக்கதாகும். வட மாநிலங்களில் பார்ப்பன கும்பலின் மேலாதிக்கத்திற்கு எதிராக நடைபெறும் அனைத்து போராட்டங்களும் ஒருங்கிணைக்கப்பட்டு பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலுக்கு எதிராகக் கட்டியமைக்கப்பட வேண்டும்.

நன்றி: Scroll.in


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க