விவசாயிகளின் முதுகில் குத்திய பஞ்சாப் ஆம் ஆத்மி அரசு!

ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், ”நீண்டகால சாலை முற்றுகை பஞ்சாபின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மார்ச் 19 ஆம் தேதியன்று ஆம் ஆத்மி அரசு விவசாயிகளின் தற்காலிக போராட்டக் கூடாரங்களை புல்டோசர் மூலம் அகற்றியுள்ளது. இது நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி முதல் கிசான் மஸ்தூர் மோர்ச்சா, சம்யுக்த கிசான் மோர்ச்சா (அரசியல் சார்பற்றது) ஆகிய விவசாய சங்கங்களின் கீழ் விவசாயிகள் போராடி வருகின்றனர். பயிர்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் – ஹரியானா எல்லையில் ஒரு வருடத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர். போராட்டம் தொடங்கியது முதல் நெடுஞ்சாலைகள் தடுக்கப்பட்டன.

இந்நிலையில் பஞ்சாப் தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்கள் ஆம் ஆத்மி அரசின் உயர்மட்ட தலைமையைச் சந்தித்துள்ளனர். தலைமையிடம் விவசாயிகளின் முற்றுகைப் போராட்டம் காரணமாக தாங்கள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருவதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து ஷம்பு, கனௌரி எல்லையில் உள்ள தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்துக்காகச் சாலைகள் திறக்கப்படும் என்று ஆம் ஆத்மி அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பு மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதியன்று சண்டிகரில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் உடனான விவசாயிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக்குவதற்குத் தேவையான நிதி குறித்து மே 4 ஆம் தேதிக்குள் ஆய்வு செய்து முடிக்கக் குழு அமைக்கப்பட்டது.

ஆனால் விவசாயிகளின் கூட்டம் முடிந்து அங்கிருந்து வெளியேறியபோது, எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விவசாய சங்கத் தலைவர் சர்வான் சிங் பாந்தர், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஜக்ஜீத் சிங் தல்லேவால் உட்பட 28 விவசாயிகளை ஆம் ஆத்மி அரசு கைது செய்துள்ளது. பின்னர் போலீசின் துணையுடன் விவசாயிகளின் தற்காலிக போராட்டக் கூடாரங்களை புல்டோசர் மூலம் இடித்துள்ளது.


படிக்க: தல்லேவாலுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கிய விவசாயிகள்


விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துள்ள கிசான் மஸ்தூர் மோர்ச்சா “பஞ்சாபில் உள்ள ஆம் ஆத்மி அரசு, விவசாயத்தில் கார்ப்பரேட் மற்றும் பன்னாட்டு நிறுவன கூட்டமைப்புகளுக்கு ஏற்ற சட்டதிட்டங்களை அமல்படுத்துவதில் உறுதியாக உள்ளது என்பதைக் காட்டியுள்ளது. இதற்காகவே அது ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க-வுடன் இணைந்து செயல்படுகிறது. செவ்வாய் அன்று (மார்ச் 18) உயர் மட்ட தலைவர்கள் தொழிலதிபர்களைச் சந்தித்த பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது மிகவும் மோசமானது” என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கிசான் மஸ்தூர் மோர்ச்சா தலைவர் லக்விந்தர் சிங் கூறுகையில் “எங்களுக்கு எதிரான பா.ஜ.க-வின் நடவடிக்கையை உலகமே பார்த்தது. பா.ஜ.க எங்களை டெல்லி பேரணிக்காக ஹரியானாவைக் கடக்க அனுமதிக்கவில்லை. அதனால் நாங்கள் பஞ்சாப் – ஹரியானா நெடுஞ்சாலைகளில் அமர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானோம். ஆனால் ஆம் ஆத்மி கட்சி எங்களை முதுகில் குத்தியுள்ளது. இதுபோன்ற கோழைத்தனமான செயலுக்காகப் பஞ்சாப் மக்கள் அவர்களை மன்னிக்கமாட்டார்கள்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்மூலம் ஆம் ஆத்மி கட்சியின் கார்ப்பரேட் சார்பு முகம் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்த விவசாய சங்கத்தலைவர் சுவீந்தர் சிங் “எங்கள் கோரிக்கைகளுக்காக நாங்கள் தொடர்ந்து போராடுவோம். விவசாயிகளின் பிரச்சினைக்காக எங்களின் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம்” என்று விவசாயிகளுக்கே உரிய போராட்ட உணர்வை வெளிப்படுத்தியுள்ளார்.

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பார்த்தப் சிங் பஜ்வா விவசாயிகள் கைது செய்யப்பட்டதை கோழைத்தனமான செயல் என்று விமர்சித்துள்ளார். காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்ட விவசாயிகளை விடுவிக்கக் கோரி நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட விவசாயிகள் சங்ரூர், பாட்டியாலா மற்றும் மொஹாலி போலீசு நிலையங்களில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பாசிச பா.ஜ.க ஹரியானாவில் உள்ள விவசாய சங்கத் தலைவர்களின் வீட்டிற்கு வெளியே நோட்டீஸ் ஒட்டியுள்ளது. அதில் நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்துள்ளது. 10 – 12 விவசாயத் தலைவர்களையும் கைது செய்துள்ளது.


படிக்க: தமிழ்நாடு: தல்லேவாலுக்கு ஆதரவாகப் போராட்டம் அறிவித்த விவசாயிகள்


விவசாயிகளின் போராட்டங்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருப்பதாகக் கூறிவந்தது ஆம் ஆத்மி கட்சி. அதன் மூத்த தலைவரும், பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகருமான குல்தார் சிங் சந்த்வான், ”நீண்டகால சாலை முற்றுகை பஞ்சாபின் பொருளாதாரம், தொழில்துறை மற்றும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது” என்று கூறியுள்ளார்.

மேலும்,”குறைந்தபட்ச ஆதார விலை போன்ற உங்கள் கோரிக்கைகள் ஏற்கத்தக்கதே. ஆனால் அவை மத்திய அரசுடன் தொடர்புடையவை. உங்கள் போராட்டத்தை டெல்லிக்கு எடுத்துச் சென்று அங்குள்ள பா.ஜ.க அரசுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். பஞ்சாபின் நெடுஞ்சாலைகள் மற்றும் வர்த்தக பாதைகளைத் திறந்து வைப்போம். இதனால் நமது தொழில்கள் மற்றும் பொருளாதாரம் வளர முடியும். விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றும் அதே வேளையில், பஞ்சாபின் முன்னேற்றத்தை நாம் ஒன்றிணைந்து உறுதி செய்ய முடியும்” என்று தெரிவித்து ஆம் ஆத்மி அரசு விவசாயிகளை முற்றிலுமாக கை கழுவி உள்ளதை வெளிப்படுத்தியுள்ளார்.

ஆம் ஆத்மி கேபினட் அமைச்சர் ஹர்பால் சிங் சீமாவும் இதேபோன்ற தொனியில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

விவசாயிகளின் கோரிக்கைகளை ஆதரிப்பதாகக் கூறி பஞ்சாபில் ஆட்சிக்கு வந்தது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் தற்போது கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக விவசாயிகளை ஒடுக்கி வருகிறது. விவசாயிகளின் கூடாரங்களை அகற்றுவது, கைது செய்வது என்று விவசாயிகளின் முதுகில் குத்தி துரோகமிழைத்துள்ளது.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க