மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! 2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது.
அதனை முன்னிட்டு 23.03.2025 அன்று காலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள மாற்குநகரிற்குச் சென்ற மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க தோழர்கள், நோட்டீஸ் கொடுத்து மக்களை அரங்கக் கூட்டத்திற்கு அணிதிரட்டினர். மேலும் நமது அழைப்பை ஏற்று பொட்டலூரணி மீன்கழிவு ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவும் அரங்கக் கூட்டத்தில் பங்கேற்றது, வந்திருந்த மக்கள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அமைந்தது.
இக்கூட்டத்திற்கு மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலச் செயலாளர் தோழர் தாளமுத்து செல்வா தலைமையேற்றார். தனது தலைமையுரையில், “அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக எந்த இடையூறும் இன்றி நாட்டை கொள்ளையடிக்கும் நோக்கில் மணிப்பூர், நாக்பூர், திருப்பரங்குன்றம், திருநெல்வேலி என்று தொடர்ச்சியாக நம் நாட்டில் சாதி-மத-இன ரீதியாக கலவரத்தை ஏற்படுத்தி, ஒற்றுமையாக வாழும் மக்களை பிளவுபடுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல். அதற்கேற்றவாறே அரசு கட்டமைப்பும் இயங்கிவருகிறது. நமது உரிமைகளை எல்லாம் பறிக்கும் பாசிசிக் கும்பலை முறியடிப்பதே நமக்கு விடுதலை அளிக்கும். பாசிசத்தை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் அதற்கு மாற்றாக ஒரு அரசியல்-பொருளாதாரத் திட்டத்தை முன்வைக்க வேண்டிய அவசியம் உள்ளது. அதை மக்களிடம் தான் கேட்க வேண்டும். சிப்காட் வேண்டாம் என்று சொல்லும் மக்கள் அதற்கு மாற்றாக விவசாயத்தையே முன்மொழிகின்றனர். இவ்வாறு மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்துவதும் அதற்காகப் போராடுவதும் தான் வேண்டும் ஜனநாயகம். அந்த அடிப்படையிலேயே இந்த பிரச்சார இயக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளது” என்று இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கத்தை விளக்கினார்.
“போராட்டமே வெல்லும்” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் நெல்லை மண்டல துணைச் செயலாளர் தோழர் தமிழ்வேந்தன், “இன்று வளர்ச்சி என்ற பெயரில் டங்க்ஸ்டன், சிப்காட் போன்ற பல நாசகார திட்டங்களைக் கொண்டு வந்து விவசாய நிலங்களை அழித்து வருகின்றன மத்திய மற்றும் மாநில அரசுகள். இதற்கு எதிராக மக்கள் உறுதியாகப் போராடுவதன் விளைவாகவே பல திட்டங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இந்த போராட்டங்களின் வெற்றியைக் கொண்டாடுவதற்கு மக்களைத் தவிர வேறு யாருக்கும் உரிமை இல்லை. மக்கள் கட்சிகளையோ இந்த அரசு கட்டமைப்பையும் நம்பவில்லை மாறாக போராட்டங்களை மட்டுமே உறுதியாக நம்புகின்றனர். 13 உயிர்களைக் காவு வாங்கிய ஸ்டெர்லைட் இன்று திறக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம் மீண்டும் மக்கள் எழுச்சி ஏற்பட்டு விடக்கூடாது என்ற அச்சத்தினால் தான். எனவே மக்களின் ஒற்றுமை தான் பாசிசக் கும்பலை நடுங்க வைக்கும். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல உலகம் முழுவதிலும் நடைபெறக்கூடிய போராட்டங்கள் தான் மக்களுக்கான உரிமைகளை நிலைநாட்டும்” என்று மக்கள் போராட்டங்களின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
“மரணத்தை வென்றவன்” என்ற தலைப்பில் உரையாற்றிய புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, மாநில ஒருங்கிணைப்புக் குழு, தோழர் ரவி,”தூத்துக்குடியில் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகளின் வரலாற்று நீட்சி தான் பஞ்சாப் சிங்கம் பகத்சிங். 1806-ல் தென் தமிழகத்தில் நடைபெற்ற முதல் சுதந்திரப் போர் பற்றிய வரலாற்றை எவ்வாறு மறைத்தார்களோ, அதே போல் தோழர் பகத்சிங் குறித்த வரலாறும் இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. உண்மையை மறைத்து அடிமைப் புத்தியை நம்மிடம் விதைக்க முயல்கின்றனர். ஆனால் நமது மரபு அனைத்தையும் கேள்வி கேட்பதும் அநீதிக்கு எதிராகப் போராடுவதும் தான். அகிம்சை என்ற பெயரில் காந்தி போன்றவர்கள் ஏகாதிபத்தியத்திற்கும் மறைமுகமாகச் சேவை செய்து கொண்டிருந்தபோது, அதனை அம்பலப்படுத்தி இளைஞர்களுக்கு விடுதலைப் பாதையைக் காட்டியவர் பகத்சிங். இன்று பாசிசக் கும்பலை முறியடிக்க நாம் பகத் சிங்கை ஆழமாகப் படிக்க வேண்டும், விவாதிக்க வேண்டும். அவரது ஒளியை எல்லோர் மத்தியிலும் பரப்ப வேண்டியுள்ளது” என்று கூறினார்.
இதனையடுத்து “நீதான் பகத்சிங்” பாடல் வெளியீடு நிகழ்வு நடந்தது. ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து இப்பாடலை வெளியிட்டனர். இதைத் தொடர்ந்து இந்தக் கூட்டத்தில் பாடல் ஒளிபரப்பப்பட்டது. பாடலை பார்த்த மக்கள், ஜனநாயக சக்திகள் கைதட்டி உற்சாகமாக வரவேற்றனர்.
இறுதியாக “வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் பேசிய மக்கள் அதிகாரம் கோவை மண்டல இணைச் செயலாளர் தோழர் மாறன், “கடந்த 10 ஆண்டுகளாக நாட்டை சூறையாடி வரும் பாசிச பா.ஜ.க-வை அம்பலப்படுத்தி பல கட்ட இயக்கங்களையும் பிரச்சாரங்களையும் மக்கள் அதிகாரம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.
2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, “வேண்டாம் பி.ஜே.பி, வேண்டும் ஜனநாயகம்” என்ற பிரச்சார இயக்கத்தை வீச்சாகக் கொண்டு சென்றோம் . அதன் தொடர்ச்சியாக 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு “வேண்டும் ஜனநாயகம்” என்ற பிரச்சார இயக்கத்தை முன்னெடுத்துள்ளோம். இன்று தென் தமிழகத்தில் சாதியத் தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. மறுபுறம் சமூக செயற்பாட்டாளர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது. குற்றவாளிகளைத் தண்டிப்பதைவிடுத்து பாதிக்கப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்கிறது ’திராவிட மாடல்’ அரசாங்கம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாநகராட்சி விரிவாக்கம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி வருகிறது. பா.ஜ.க-வை எதிர்ப்பதாகக் கூறிவரும் தி.மு.க, கார்ப்பரேட் நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கார்ப்பரேட் எதிர்ப்பையும் பாசிச எதிர்ப்பையும் பிரித்துப் பார்க்கக் கூடாது. “வேண்டும் ஜனநாயகம்” என்பது மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதே ஆகும்” என்று தெரிவித்தார்.
தோழர் சந்துரு மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலப் பொருளாளர் நன்றியுரை ஆற்றினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சிவப்பு அலை கலைக்குழுத் தோழர்களின் புரட்சிகர பாடல்கள் வந்திருந்த மக்களின் உணர்வைத் தட்டி எழுப்பியது. திரளான மக்கள், ஜனநாயக சக்திகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இக்கூட்டம் இரவு 9.00 மணியளவில் நிறைவடைந்தது.
தகவல்
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram