நேற்று (மார்ச் 24) காலை சிறுபான்மை ஜனநாயக கட்சி (Minority Democratic Party) தலைவர்களில் ஒருவரான பாஹிம் கானின் (Fahim Khan) வீட்டை பட்நாவிஸ் அரசு புல்டோசர் மூலம் இடித்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ளது 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த முகலாய மன்னர் ஔரங்கசீப் கல்லறை. சமீபத்தில் விஷ்வ ஹிந்து பரிசத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட மதவெறி அமைப்புகள் இக்கல்லறையை அகற்றாவிட்டால் பாபர் மசூதியை இடித்தது போல் கரசேவகர்கள் மூலம் கல்லறையை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று மிரட்டல் விடுத்திருந்தன. முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் “எல்லாரும் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள். அதற்கான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கரசேவகர்களுக்கு ஆதரவான கருத்தைத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து மதவெறி கும்பல்கள் கடந்த 17 ஆம் தேதி அன்று ஔரங்கசீப் கல்லறையை அகற்றக்கோரி ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காலை 11:00 மணிக்கு சத்ரபதி சிவாஜிக்கு மாலை அணிவித்த கும்பல் ஔரங்கசீப் உருவப் பொம்மையையும், சட்டாரையும் (chadar – குரான் வாசகங்கள் பொறிக்கப்பட்ட துணி) எரித்து வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளது.
குரான் எரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்யக் கோரி போலீசில் புகார் அளித்தனர். ஆனால் மதவெறி கும்பல் மீது போலீஸ் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அதன் விளைவாக இரவு 7 மணிக்கு விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தளம் உள்ளிட்ட மதவெறி கும்பல் முஸ்லீம் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளுக்கு மதவெறி முழக்கங்களை எழுப்பியவாறு சென்றுள்ளது. முஸ்லீம் மக்களின் வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. தாக்குதலைத் தடுக்க முயன்ற இஸ்லாமியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளது.
படிக்க: நாக்பூர் கலவரம்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பாசிச கும்பலின் சதி
மேலும் இரவு 10:30 மணிக்கு மேல் ஆர்.எஸ்.எஸ் தலைமை அலுவலகத்திலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஹன்சன்புரி பகுதியில் உள்ள வீடுகள், மருத்துவமனை மீது கற்களை வீசியும், வீட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும் இக்கும்பல் வன்முறை வெறியாட்டம் போட்டுள்ளது. இதன் காரணமாக அரசு மாநிலத்தின் பல பகுதிகளில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
மேலும் பட்நாவிஸ் அரசு, வாகனங்களுக்கு தீ வைத்து கலவரத்தில் ஈடுபட்ட மத வெறியர்களைக் கைது செய்யவில்லை. மாறாக பாதிக்கப்பட்ட முஸ்லீம் மக்கள் மீதே தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த 18 ஆம் தேதி அன்று அதிகாலை 2 மணியளவில் மோமின்புரா, ஜாபர் நகர், பல்தார்புரா, அன்சார் நகர், முகமது அலி சௌக், தாஜ் பாக் மற்றும் மஹால் போன்ற முஸ்லீம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸ் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளது. பல இளம் முஸ்லீம் ஆண்களை அவர்களது வீடுகளிலிருந்து கைது செய்துள்ளது.
அத்துடன் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள் நிற்கவில்லை. கடந்த 20 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா போலீஸ் சமூக ஊடகங்களில் தவறான செய்திகளைப் பரப்பியது தொடர்பாக சிறுபான்மை ஜனநாயக கட்சித் தலைவர் பாஹிம் கான் உள்பட ஆறு பேரைத் தேசத் துரோக வழக்கில் கைது செய்துள்ளது. பாஹிம் கான் அப்பகுதியில் உள்ள சிறுபான்மையினருக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஃப்.ஐ.ஆர்-இன்படி, பாஹிம் ’கலவரத்தைத் தூண்டுவதில்’ முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. மக்களை முதலில் கணேஷ் பெத் போலீஸ் நிலையம் அருகிலும், பின்னர் மஹால் பகுதியில் உள்ள ஒரு மசூதியிலும் கூட அவர் வலியுறுத்தியதாக அதில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் தான் கலவரத்திற்குக் காரணம் என்று பாதிக்கப்பட்டவர்கள் மீதே குற்றம் சுமத்துவதுதான் இந்த எஃப்.ஐ.ஆர்-இன் நோக்கம்.
சிறுபான்மை ஜனநாயக கட்சியினர் இதனை முற்றிலுமாக மறுத்துள்ளனர். சட்டார் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தவே அவர் போலீஸ் நிலையத்திற்குச் சென்றுள்ளார். ஆனால், வன்முறை தொடங்குவதற்கு முன்பாகவே அவரை போலீஸ் நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர்.
படிக்க: நாக்பூர் கலவரம்: ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யாமல் இந்தியாவிற்கு அமைதியில்லை
பெயரளவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்து விட்டு ஜாமீனில் விடுதலை செய்துள்ளது போலீசு. ஆனால் முஸ்லீம் மக்களைக் கைது செய்வது மட்டுமன்றி அவர்களின் வீடுகளை இடிப்பது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் செய்தி ஊடகம் ஒன்றில் பேசிய முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் “வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இழப்பீடு வழங்கத் தவறினால், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு, இழப்புகளை மீட்க விற்கப்படும்”என்று தெரிவித்திருந்தார்.
மேலும் முதல்வரின் உள்துறை அலுவலகத்திலிருந்து நகராட்சி ஆணையர்களுக்கு இடிப்பு தொடர்பான உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் பட்நாவிஸ் சட்டம் அனுமதித்தால் அரசு புல்டோசர் நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று எல்லாம் சட்டத்தினை பின்பற்றி நடப்பது போன்று ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
முதலமைச்சரின் கருத்தைத் தொடர்ந்துதான் நேற்று நாக்பூர் குடிமைப் பணி அதிகாரிகள் யசோதரா நகர் மாவட்டத்தில் சஞ்சய் பாக் பகுதியில் அமைந்துள்ள பாஹிம் கானின் வீட்டிற்குச் சென்றுள்ளனர். வீடு மனைவி ஜாஹிருன்னிசா பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்து. பிராந்திய மற்றும் நகர திட்டமிடல் சட்டம் 1966-ஐ மீறி சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். பின்னர் ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் புல்டோசர் மூலம் வீட்டை இடித்து தரைமட்டமாக்கியுள்ளனர்.
சட்டவிரோதமாகவோ, அரசு நிலத்திலோ வீடுகள் கட்டப்பட்டிருந்தால் அதனை இடிப்பதற்கு முறையான அறிவிப்பை வெளியிட வேண்டும். சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிப்பதற்குக் குறைந்தபட்சம் 15 நாட்கள் அவகாசம் கொடுக்கவேண்டும். உரிய செயல்முறை, டிஜிட்டல் ஆவணங்கள் மற்றும் நியமிக்கப்பட்ட மேற்பார்வை ஆகியவற்றை உறுதி செய்தல் உள்ளிட்ட வழிகாட்டுதல்களை உச்ச நீதிமன்றம் அளித்திருந்தது.
ஆனால் உச்ச நீதிமன்றத்தின் எத்தகைய வழிகாட்டுதல்களும் பின்பற்றப்படவில்லை. உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், அசாம் மாநிலங்களில் மேற்கொள்ளப்படும் இஸ்லாமியர்களுக்கு எதிரான புல்டோசர் ராஜ்ஜியத்தை மகாராஷ்டிராவிலும் காவி கும்பல் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளது. தற்போது வரை சட்டத்திற்கு விரோதமாக புல்டோசர் நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் மீது உச்ச நீதிமன்றம் எத்தகைய நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது காவிக் கும்பலின் கரசேவைக்கு நீதித்துறை துணைபோவதாகும்.
கலவரங்கள் மூலம் தனது நூற்றாண்டைக் கொண்டாட விரும்புகிறது ஆர்.எஸ்.எஸ். அதற்காக ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் நாடு முழுவதும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கலவரங்களைத் தீவிரப்படுத்தி வருகிறது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram