தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தில் மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூடவேண்டும் என்று அக்கிராம மக்கள் 2021 ஆம் ஆண்டிலிருந்து போராடி வருகிறார்கள்.
ஆனால் இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தட்டிக்கழித்து வருகிறது தமிழ்நாடு அரசு. மேலும் போராடும் மக்களுக்கு பல்வேறு வகையில் நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது.
இந்நிலையில் மார்ச் 23 அன்று நெல்லை மண்டலம் மக்கள் அதிகாரம் சார்பாக தோழர்கள் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு தினத்தையொட்டி ”2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு சார்பாக கலந்துகொண்டு பாடல் பாடினோம்.
இந்நிகழ்வை முடித்துவிட்டு இரவு தூத்துக்குடியில் தங்கிவிட்டோம்.
மார்ச் 24 காலை மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்று போராடி வருகின்ற பொட்டலூரணி மக்களைச் சந்திக்கச் சென்றோம்.
அப்பொழுது மீன் கழிவு எதிர்ப்பு போராட்டக் குழு தோழர்களைச் சந்தித்தோம்.
அவர்கள் இந்த மீன் கழிவு சுத்திகரிப்பு ஆலையை மூட வேண்டும் என்பதற்காக மேற்கொண்ட போராட்டங்களையும் அதில் அரசு தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட நெருக்கடிகளையும் அவற்றை கிராம மக்கள் எதிர்கொண்டதையும் விரிவாக விளக்கினார்கள்.
உண்மையில் அதைக் கேட்கும் போது வியப்பாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் அவ்வளவு ஒற்றுமையாக நின்று துணிச்சலாக எதிர்த்திருக்கிறார்கள். பிரச்சினையைப் பக்குவமாகக் கையாண்டிருக்கிறார்கள்.
இவர்கள் 2024 நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆளும் வர்க்கங்கள் பணம் கொடுத்து அம்மக்களை விலைக்கு வாங்க பல்வேறு முயற்சிகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் எல்லாவற்றையும் முறியடித்து மக்கள் வென்றிருக்கிறார்கள்; அவர்கள் முகத்தில் கரியைப் பூசி இருக்கிறார்கள்.
உண்மையில் பொட்டலூரணி கிராம மக்கள் தாங்கள் கொண்டிருந்த லட்சியத்தில் உறுதியாக நின்று அனைத்துவிதமான அடக்குமுறைகளையும் எதிர்கொண்டிருக்கிறார்கள். அதை எங்களால் நன்கு உணர முடிந்தது.
குறிப்பாக பொட்டலூரணி மக்கள் மற்றும் தோழர்கள் நாங்கள் சென்றிருந்த போது அன்பாக அரவணைத்தார்கள். அங்கு இருந்தவர்கள் எல்லோரும் என் அப்பா வயது கொண்டவர்கள்; அதைவிடவும் வயது முதிர்ந்தவர்கள்தான்.
நாங்கள் கல்லூரி படிக்கும் மாணவர்கள் என்று தெரிந்த பின்பும் அவ்வளவு மரியாதையுடனும் அன்புடனும் தோழர்கள் என்றே பேசினார்கள்.
இன்னொரு முக்கியமான விசயம் மாணவர்கள் படிப்பதற்காக படிப்பகம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்வையிட்டோம்; வாழ்த்துக்களையும் தெரிவித்தோம்.
தொகுப்பாகச் சொல்லப்போனால் பொட்டலூரணி மக்களிடமிருந்து புதிய விஷயங்களை நிறைய கற்றுக்கொண்டோம். நல்ல அனுபவத்தைப் பெற்றுக்கொண்டோம்.
மீன் கழிவு நிறுவனத்தை மூட வேண்டும் என்ற பொட்டலூரணி மக்களின் போராட்டம் வெல்லட்டும்!
போராட்டக் களத்தில் மக்களோடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியும் நிற்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
தோழர் தீரன்,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram