நெய்வேலி பகுதியில் நீண்ட காலம் புதிய ஜனநாயகம் இதழின் முகவராகவும், புரட்சிகர அமைப்புகளின் முகமாகவும், மக்கள் போராட்டங்களின் அமைப்பாளராகவும் விளங்கி வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் நீண்ட காலம் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அதன் காரணமாக பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகி இருந்த அவர், கடந்த சில மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த 21.03.2025 அதிகாலை 4 மணியளவில் நம்மை விட்டுப் பிரிந்து சென்று விட்டார். தோழர் குழந்தைவேலு அவர்கள் இறக்கும் போது அவரது வயது 49 தான். ஒரு புரட்சிகர அமைப்பில் பணியாற்றி வரும் தோழருக்கு இது மிகவும் இளம் வயதுதான். பாதிக்கப்பட்ட மக்களை அணிதிரட்டி இந்த அரசுக்கு எதிராக சமரசம் இன்றிப் போராடி வந்த ஒரு தோழரின் இறப்பு, மக்களுக்கும் சரி, அவர் இயங்கி வந்த மக்கள் அதிகாரம் அமைப்புக்கும் சரி மிகப் பெரிய இழப்புதான். இதிலிருந்து நேர்மறையிலும் எதிர்மறையிலும் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.
கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகில் உள்ள வளையமாதேவி என்ற கிராமத்தின் அருகில் உள்ள கத்தாலை என்ற கிராமத்தில் பிறந்து வளர்ந்து வந்த தோழர் குழந்தைவேலு அவர்கள் தனது 13, 14 வயதிலேயே வீடிழந்து, உடைமைகளை இழந்து சொந்த மண்ணில் அகதியானார். ஆம்! 1988 ஆம் ஆண்டு அக்கிராமத்தில் உள்ள ஆதிக்கச் சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்களின் குடிசைகளைக் கொளுத்தி, அம்மக்களைத் துரத்தியடித்தனர். அன்றிலிருந்து தோழரின் இறப்பு வரை இக்கொடுமைக்கான நீதி கிடைக்கவே இல்லை.
அம்பேத்கர் நூற்றாண்டு விழாவையொட்டி, தலித் மக்களின் ஓட்டுக்களைப் பொறுக்க வேண்டும் என்பதற்காக அன்றைக்கிருந்த தமிழ்நாடு அரசு, வீடிழந்து அகதிகளாக அலைந்து திரிந்த அம்மக்களுக்கு வளையமாதேவி அருகே கண்டிசன் மனைப்பட்டாக்கள் வழங்கியது. அதில் வாழவிடாமல் என்.எல்.சி. நிறுவனம் தனது சுரங்க விரிவாக்கத்திற்கு வேண்டும் என அந்த மனைப் பட்டாக்களை ஆக்கிரமித்து, இரண்டாவது முறையாக மீண்டும் அம்மக்களைத் துரத்தியடித்தது.
ஊர்ப் பெரியவர்கள் அரசிடமும், என்.எல்.சி. நிர்வாகத்திடமும் நடையாய் நடந்து, இறந்தும் போயினர். ஆனால் என்.எல்.சி. ஆக்கிரமித்து தமது கையைவிட்டுப் போன மனைப்பட்டா மட்டும் தற்போது வரை கிடைக்கவில்லை. மாற்று இடமும் வழங்கப்படவில்லை, நட்ட ஈடும் இல்லை. பொதுத்துறை நிறுவனம் நிலம் கையகப்படுத்தும் போது நட்ட ஈடு தருவார்கள், தமது நிறுவனத்தில் வேலை தருவார்கள் என்பது கத்தாலை தலித் மக்களுக்கு மட்டும் பொருந்தாது போலும்!
இந்தக் காலகட்டத்தில் தனது வாழ்வாதாரத்திற்காக வீடியோகிராஃபர் தொழில் செய்து வந்த தோழர் குழந்தைவேலு பகுஜன் சமாஜ் கட்சியிலும் இணைந்து செயல்பட்டு வந்தார். நெய்வேலியில் இயங்கி வந்த புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு 2000 முதல் அதன் ஆதரவாளராகச் செயல்படத் தொடங்கினார். ஜீரோ யூனிட் கைப்பற்றும் போராட்ட இயக்கம் அப்பகுதியில் நடந்த போது அந்த வேலைகளில் ஊக்கமாகப் பங்கேற்றார். அந்த இயக்கத்தின் முடிவில் அதன் முக்கிய, முன்னணி செயல்வீரராக உருவானார். அதன் பின் நெய்வேலி பகுதியில் நடந்த அமைப்பின் அனைத்து இயக்க வேலைகளிலும் முன்னணித் தோழராகச் செயல்பட்டார்.
ஏற்கெனவே வீடிழந்து அலைந்து திரிந்த மக்களின் போராட்டத்தைச் சரியாக வழி நடத்த யாரும் இல்லாத நிலைமையில் தோழர் குழந்தைவேலு அந்த வேலையைத் தனது தோளில் ஏற்றுக் கொண்டார். தமது சிக்கலுக்கு மட்டுமின்றி, பொதுவில் நிலம் கொடுத்து, வாழ வழியற்ற அனைத்து மக்களின் சிக்கலுக்கும் போராட்டக் களத்தில் நின்றார். இதற்குத் தனது சொந்த போடோகிராஃபர் தொழில் தடை எனும் போது அதை விட்டொழித்தார். திருமணம் செய்திருந்த போதும், தமது பொது வாழ்வுக்கு அது ஒத்து வராத போது அதையும் முறித்துக்கொள்ள அவர் தயங்கவில்லை. அது சரியா தவறா எனும் விவாதத்திற்குள் நாம் இப்போது இறங்கத் தேவையில்லை!
பாதிக்கப்பட்ட கத்தாலை கிராமத்தைச் சேர்ந்த 83 குடும்பங்களுக்குத் தலைமை தாங்கி, பல போராட்டங்களை தோழர் குழந்தைவேலு முன்னெடுத்தார். வாழ வழியற்ற அம்மக்களைத் திரட்டி, அத்துமீறி என்.எல்.சி.-யின் ஒரு பகுதியில் குடியேற்றினார். அப்பகுதிக்கு வந்த என்.எல்.சி. நிர்வாகம் மீண்டும் சுரங்க விரிவாக்கத்தைக் காரணம் காட்டி விரட்டியடிக்க முனைந்த போது, மாற்று இடம், வேலை வாய்ப்பு இல்லாமல் குடியிருப்பைக் காலி செய்ய மாட்டோம் என உறுதியுடன் போராடினார். மின்னிணைப்பு, குடிநீரைத் துண்டித்து, கடும் நெருக்கடி தந்த போதும், அம்மக்கள் உறுதியுடன் போராட்டக் களத்தில் நின்றதற்கு தோழரிடம் மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையும், அரசியல் நேர்மையும் தான் ஒரே காரணம்.
மாற்று இடம் கொடுத்த நிர்வாகம் வேலை தரவில்லை. இந்த நிலைமையை மக்களிடம் எடுத்துக் கூறி என்ன செய்யலாம் என அம்மக்களின் கருத்துக் கேட்டு, ஜனநாயகப் பூர்வமாக முடிவெடுத்து நடைமுறைப் படுத்தினார். தனது இறப்பு வரை தோழரிடமிருந்த இந்த ஜனநாயகப் பண்பு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
ஒரு புறம் என்.எல்.சி. நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே, மறுபுறம் எல்லா உத்திகளையும் கையாண்டு தோழரை அடக்கவும் முயன்றது. வழமை போல போலீசைக் கொண்டு ஒடுக்க முயன்று தோற்றுப் போன நிர்வாகம் அடுத்த முயற்சியாக தோழரை தனியே பிரிக்க எத்தனித்தது. இவருக்கு மட்டும் மனை, வீடு என ஆசை காட்டியது. இதற்கும் தோழர் அடிபணியவில்லை. தமது சுய நலனுக்கு மக்களைப் பயன்படுத்த மறுத்த இந்தக் கம்யூனிசப் பண்பு அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய ஒன்று.
மக்களுக்கு ஒரு சிக்கல் என்றால் தனது உடல் நலம் சரியில்லை என்றாலும் தோழர்தான் முதல் ஆளாகக் களத்தில் நிற்பார். இரண்டாவது முறை மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்றுத் திரும்பியவர், ”நடக்க முடியவில்லை தோழர்” என வருத்தப்பட்டார். ஆனால் அடுத்த சில நாட்களில், நில எடுப்பு அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் முதல் ஆளாக நின்றார். மக்களின் துயரம் கண்டு, போராடுகின்ற இந்த கம்யூனிசப் பண்பும் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று.
இவரிடம் இத்தனை நல்ல பண்புகள் இருப்பினும் தனது உடல் நலனைப் பேணுவதில் அக்கறையற்ற போக்கு எதிர்மறையாக நாம் கற்க வேண்டிய முக்கியமான ஒன்று. தனது நலன் பேணுவதில் பொறுப்பும் அக்கறையும் அற்ற இந்தப் போக்கு ஒவ்வொருவரும் விட்டொழிக்க வேண்டிய ஒன்று.
தோழர் இறுதி மூச்சு வரை புதிய ஜனநாயகம் இதழின் முகவராக இருந்து நெய்வேலி பகுதியில் இதழை வீச்சாக மக்களிடம் கொண்டு சேர்த்தார். எல்லா ஜனநாயக சக்திகளிடமும் உறவைப் பேணினார். புதிய ஜனநாயகம் என்றால் நெய்வேலியில் உள்ளவர்களுக்கு தோழரின் முகம் நினைவுக்கு வரும். அமைப்பின் முக்கிய கட்டத்தில் சரியான நிலைப்பாடு எடுத்து, நமது அமைப்புடன் உறுதியாக நின்ற தோழர்களில் இவரும் ஒருவர்.
ஆனால் இறுதி நாட்களில் உடல் நலம் குன்றி, அமைப்பின் வேலைகளில் பங்கேற்க இயலாமல் போனது, மக்களுக்கும் அமைப்பிற்கும் இழப்பு என்பது இங்கு சுட்டிக் காட்டப்பட வேண்டிய ஒன்று. தோழர் விட்டுச் சென்ற கடமைகளைத் தொடர்வோம்! அவ்வகையில் நமது சிவப்பு வணக்கங்களை தோழருக்குச் செலுத்துவோம்!
தகவல்
மக்கள் அதிகாரம்,
கடலூர் மண்டலம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram