ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!
பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டியமைப்போம்!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின்
2வது மாநில மாநாடு
மதுரை – ஏப்ரல் 15, 2025 காலை 10 மணி
கருத்தரங்கம் – மாலை 4.30 மணி
இடம்: இராமசுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி, மதுரை.
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாட்டை 2022 ஜனவரி மாதத்தில் நடத்தினோம். அன்றிலிருந்து இந்த மூன்றாண்டுகளில், இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் மோடி அமித்ஷா தலைமையிலான காவி-கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றுள்ளோம்.
மோடி-அமித்ஷா கும்பலின் தலைமையிலான பா.ஜ.க. கட்சி என்பது மற்றெல்லா கட்சிகளின் ஆட்சியைப் போன்றதல்ல. அது பாசிசத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்ற ஒரு பாசிச கட்சி. நமது நாட்டில் பெயரளவில் நிலவுகின்ற நாடாளுமன்ற ஜனநாயகத்தின் இழிவான தன்மைகளைப் பயன்படுத்திக் கொண்டு இப்பாசிச கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளது. ஆகையால், இதனை இந்த நாடாளுமன்ற அரசுக் கட்டமைப்பிலேயே வீழ்த்திவிட முடியாது. மாறாக, இந்த நாடாளுமன்றக் கட்டமைப்புக்கு வெளியே, மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதன் மூலமாகவும், தற்போதுள்ள அரசு கட்டமைப்புக்கு மாற்றாக, பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதன் மூலமாகவும் மட்டுமே வீழ்த்த முடியும் என்பதை எமது இந்த மூன்றாண்டுகால அரசியல் போராட்டங்களின் மூலமாக ஜனநாயக சக்திகள் மத்தியில் பதியவைத்துள்ளோம்.
2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், சென்னையில். “ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்!” என்ற தலைப்பிலான மாபெரும் மாநாட்டை ம.க.இ.க., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய எமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து நடத்தினோம்.
அதனைத் தொடர்ந்து 2022 அக்டோபர் முதல் டிசம்பர் வரை, பாசிசத்தை வீழ்த்துவதற்கு கம்யூனிசத் தலைவர் ஸ்டாலின் மற்றும் உலகம் முழுவதும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் பங்களிப்பையும் விளக்கிப் பரப்புரை செய்தோம்.
2023 ஜனவரி 26, மொழிப்போர் தியாகிகள் நாளை முன்னிட்டு தொடர் பரப்புரை செய்தது மட்டுமின்றி, ஆளுநர் ரவியை திரும்பப் பெறக்கோரி போராட்டத்தை நடத்தினோம்.
இதனைத் தொடர்ந்து, 2023 மே மாதம், “சுற்றி வளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு!”என்ற தலைப்பில் மதுரையில் நடத்திய மாநாடு, ஜனநாயக சக்திகளுக்கு பெரிதும் நம்பிக்கையளித்த மாநாடாகும்.
இதற்கடுத்து 2023 ஆகஸ்டு முதலாக 2024 நாடாளுமன்றத் தேர்தலையொட்டி “வேண்டாம் பி.ஜே.பி., வேண்டும் ஜனநாயகம்! கோடி மக்களிடம் கொண்டு செல்வோம்!” என்ற முழக்கத்தின் கீழ் பிரச்சாரத்தைத் தொடங்கினோம். இந்த இயக்கத்திற்கு எமது அமைப்பு முன்வைத்த முழக்கமானது, மக்களால் பெரிதும் வரவேற்கப்பட்டது. இந்த இயக்கத்தின் ஊடாக, “பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு” என்ற எமது மாற்று அரசியல் – பொருளாதாரத் திட்டத்தை விளக்கி கொண்டுவரப்பட்ட வெளியீடு, பல்லாயிரக்கணக்கில் விற்பனையாகி ஜனநாயக சக்திகளின் ஆதரவைப் பெற்றது.
இந்நிலையில், 2024 ஜனவரியில், “இராமர் கோவிலுக்கு முதல் எதிர்ப்பு: தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தோம் நாங்கள்! இந்துராஷ்டிரத்தின் முடிவுரையை இனி தமிழ்நாடு எழுதட்டும்!” என்ற முழக்கத்தின் கீழ், இராமர் கோவில் திறக்கப்படும் நாளில், சென்னையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எமது அமைப்பு நடத்திய போராட்டம் தமிழ்நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் உயிர்ப்பாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், ” 2024 நாடாளுமன்றத் தேர்தல்: பாசிச பா.ஜ.க.வை தேர்தலில் வீழ்த்துவது எப்படி? ” என்ற தலைப்பின் கீழ் எமது அமைப்பு கொண்டுவந்த வெளியீடு, தேர்தல் கட்டமைப்புக்கு வெளியில் மக்கள் எழுச்சியைக் கட்டியமைப்பதன் மூலமாகவே, பா.ஜ.க.வைத் தேர்தலிலும் வீழ்த்த முடியும் என்று முழங்கியது. இந்த வெளியீட்டை, ஜனநாயக சக்திகள் பேராதரவுடன் வரவேற்று, தங்களது அணிகளுக்கு விநியோகம் செய்தது எமது அரசியல் மேலாண்மையின் வெற்றியாகும்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், “மீண்டும் பாசிச பா.ஜ.க. ஆட்சி: என்ன செய்யப் போகிறோம்?” என்ற வெளியீட்டைக் கொண்டுவந்தோம். தேர்தலில் பா.ஜ.க.விற்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் அது வலுவிழந்துவிடவில்லை என்பதையும் அதை வீழ்த்த மக்கள் எழுச்சியைக் கட்டியமைக்க வேண்டும் என்ற எமது அறைகூவலையும் ஆதரித்து, ஜனநாயக சக்திகள் அவர்களது அணிகள் மத்தியில் விநியோகம் செய்தனர்.
தற்போது பிற கட்சிகளுக்கு முன்பாக, 2024 நவம்பர் முதலாக, 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி, “வேண்டும் ஜனநாயகம்” என்ற முழக்கத்தை முன்வைத்து சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கி இயக்கத்தை மேற்கொண்டு வருகிறோம்.
இதற்கிடையே மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னணி கும்பல் கலவரத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சிகளை முறியடிக்கும் விதமாக முன்வைக்கப்பட்ட, “அரிட்டாபட்டியையும் ஜல்லிக்கட்டையும் மீட்டோம்”, “முருகனை மீட்போம். கருப்பனைக் காப்போம்!” என்ற எமது முழக்கம், அதனை விளக்கிக் கொண்டுவரப்பட்ட பிரசுரம், இடையறாது எமது தோழர்கள் மேற்கொண்ட போராட்டங்கள் பாசிச எதிர்ப்பில் முன்மாதிரியானவையாகும்.
இவை எமது அரசியல் போராட்டங்களின் முதன்மையானவை மட்டுமே.
நமது நாட்டின் உழைக்கும் மக்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிராகவும் பாசிசத்தின் ஒடுக்குமுறைகளுக்கெதிராகவும் காணொளிகள், அறிக்கைகள், பத்திரிகை செய்திகள் மூலமாக இடையறாது அரசியல் முன்முயற்சியுடன் எமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளோம்.
அரசியல் ரீதியான போராட்டங்கள் மட்டுமின்றி, மக்கள் பிரச்சினைகளுக்காக மக்களைத் திரட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்துள்ளோம். கள்ளக்குறிச்சி மாணவி மர்மக் கொலையைத் தொடர்ந்து ஏற்பட்ட மக்கள் எழுச்சியை முதலில் ஆதரித்து களமிறங்கியது எமது அமைப்புதான். மேல்மா சிப்காட் எதிர்ப்புப் போராட்டம், பரந்தூர் விமான நிலைய எதிர்ப்புப் போராட்டம், மதுரையில் கிரானைட் குவாரிகள், கல்குவாரிகளுக்கு எதிரான போராட்டங்கள், டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிரான போராட்டம், தூத்துக்குடி – பொட்டலூரணி மீன் கழிவு ஆலைக்கெதிரான போராட்டம், விருத்தாச்சலத்தில் தாழ்த்தப்பட்ட மனவளர்ச்சி குன்றிய பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு எதிராக நடத்திய போராட்டங்கள், திருவாரூர் மக்களைத் திரட்டி நடத்திய பல போராட்டங்கள் என இந்த மூன்றாண்டுகளில் நூற்றுக்கணக்கான போராட்டங்களில் எமது தோழர்கள் முன்னணியில் இருந்துள்ளனர்.
எமது தொடர்ச்சியான போராட்டங்களின் விளைவாக, இளந்தலைமுறையினர் நமது அமைப்பில் இணைந்து எமது அமைப்பு விரிவடைந்துள்ளது.
இந்த மூன்றாண்டு அனுபவங்களில் இருந்து எமது அமைப்பின் கொள்கை அறிக்கையை செழுமைப்படுத்தியும் புதிய தோழர்களை தலைமைக்குக் கொண்டுவரும் வகையிலும் எமது அமைப்பின் 2வது மாநில மாநாட்டை நடத்த இருக்கிறோம்.
எமது இந்த மூன்றாண்டு வெற்றிகள் அனைத்தும், உழைக்கும் மக்களாகிய, ஜனநாயக சக்திகளாகிய தங்களது ஆதரவாலும் பங்களிப்பாலுமே நடந்தவையாகும். இந்த முன்னேற்றங்களும் வெற்றிகளும் தங்களுடையவையாகும். இத்துடன், இந்த மாநாடு புதிய கொள்கை அறிக்கையை நிறைவேற்ற இருப்பது நமது நாட்டின் பார்ப்பனிய எதிர்ப்பு மரபின் முன்னேற்ற படியாகும்.
தங்களது ஆதரவும் பங்களிப்பும் என்றும் எமக்கு வேண்டும்.
மக்கள் அதிகாரம் அமைப்பின் 2வது மாநில மாநாட்டிற்கு நிதி கொடுத்து ஆதரியுங்கள்! எமது அமைப்பில் இணையுங்கள்!
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram