மேற்குவங்கம்: பட்டியல் சாதி மக்களின் கோயில் நுழைவுப் போராட்டங்கள் வெல்லட்டும்!

மேற்குவங்கத்தின் கிதாகிராம் (Gidhagram) மற்றும் தெபாகிராம் (Debagram) ஆகிய இடங்களில் பட்டியல் சாதி மக்கள் கோயில் நுழைவுப் போராட்டங்களைத் தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

மேற்கு வங்கத்தின் கிதாகிராமில் உள்ள கிதேஷ்வர் (சிவன்) கோயிலில், பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐந்து பட்டியல் சாதி மக்கள் வழிபாடு நடத்திவிட்டு வெளியேறும் காட்சி

மேற்குவங்க மாநிலம் புர்பா பர்தமான் (Purba Bardhaman) மாவட்டத்தில் கிதாகிராம் (Gidhagram) பகுதியில் சிவன் கோயில் ஒன்று உள்ளது. கடந்த மார்ச் 12-ஆம் தேதி பட்டியல் சாதியைச் சேர்ந்த சாந்த்வானா தாஸ் என்ற 45 வயதான பெண்மணி இக்கோயிலினுள் செல்வதற்குக் கோயில் பூசாரியிடம் அனுமதி கேட்டுள்ளார். ஆனால், அவரை வெளியேறும்படி பூசாரி பலமுறை சைகை காட்டியதையடுத்து, தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பெண் கருவறையின் அருகில் சென்று தரையில் அமர்ந்துள்ளார்.

இது ஏதோ சாதாரண நிகழ்வல்ல, பல தலைமுறைகளாகப் பட்டியல் சாதி மக்கள் அனுபவித்துவரும் சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராக வெடித்துள்ள போராட்டமாகும்.

பிப்ரவரி 24-ஆம் தேதி பூர்வா பர்தான் மாவட்டத்தில் கோயிலுக்குள் நுழைவதற்கான அனுமதியைப் பெற பட்டியல் சாதி மக்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகியுள்ளனர். ஆனால், பிப்ரவரி 26, சிவராத்திரி நிகழ்ச்சியில் பட்டியல் சாதி மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கு பின்னர், பிப்ரவரி 28 அன்று மாவட்ட நிர்வாகம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில் “இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு. சாதி மற்றும் மத பாகுபாடு இங்கு சட்டவிரோதமானது. அனைவருக்கும் ஒரே உரிமைகள் உள்ளன. எனவே ”தாஸ்” சமூக குடும்பங்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும்” என்று கூறியது.

ஆனால், அத்தீர்மானம் பட்டியல் சாதி மக்களின் போராட்டத்தை எளிதாக்கி விடவில்லை. அனைத்து மக்களுக்கும் சமமான கோயில் நுழைவு உரிமைகளுக்காகப் பட்டியல் சாதி (தாஸ்) சமூகத்தினர் நடத்திய போராட்டங்களால், பிப்ரவரி 24 முதல் மார்ச் 12 வரை கிதாகிராம் பகுதியில் போலீசு குவிக்கப்பட்டிருந்தது. கோயிலுக்குள் நுழைய அனுமதி கோரப்பட்டிருந்ததையடுத்து, அப்பகுதியில் தாஸ் பட்டியல் சாதி மக்கள் இதுவரை அனுபவித்துவந்த சாதிய ஒடுக்குமுறைகளைக் காட்டிலும் தற்போது அதீத ஒடுக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து 22 வயதான பிஜோல் தாஸ் என்ற இளைஞர் கூறுகையில், “எங்கள் பயிர்களை எரிப்பதாக மிரட்டுகின்றனர். எங்களுக்கு பால் வழங்க அனுமதிப்பதில்லை. குறைந்த விலையில் பால் விற்கவும், கூடுதல் போக்குவரத்து கட்டணம் செலுத்தவும் நாங்கள் நிர்பந்திக்கபடுகிறோம். நாங்கள் நஷ்டத்தைச் சந்தித்து வருகிறோம்” என்கிறார். மேலும், “நாம் அனைவரும் இங்கே இந்துக்கள். ஏன் ஒரே கடவுளை நாம் கொண்டிருக்க முடியாது” என்கிறார்.

மேற்குவங்கத்தின் பூர்பா பர்தாமன் மாவட்டத்தின் கிதாகிராம் மற்றும் நாடியா (Nadia) மாவட்டத்தில் உள்ள தெபாகிராம் (Debagram) ஆகிய இடங்களில், பட்டியல் சாதி மக்கள் கோயில்களுக்குள் நுழைவதை ஆதிக்கச் சாதியினர் தடுத்துவந்தனர். அதற்கு எதிராகத் தற்போது தீவிரமான போராட்டங்கள் நடந்து வருகின்றன. கீழ்க்கண்ட இரண்டு சம்பவங்கள் அம்மாநிலத்தில் சாதியப் பாகுபாட்டின் பரவலான தன்மையை அம்பலப்படுத்துகின்றன.

***

கிதாகிராம் மக்கள் வர்ணாசிரம சாதிய படிநிலையான ஒடுக்குமுறைக்குத்  தொடர்ந்து ஆளாக்கப்பட்டு வருகின்றனர். 18 கிராமப் பகுதிகளை உள்ளடக்கி 6,000 பேரைக் கொண்ட இந்த கிராமத்தில் மக்கள் பெரும்பாலும் விவசாயத்தையே சார்ந்துள்ளனர். இப்பகுதிகள் பெரும்பாலும் சாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டுள்ளன.

ஒரு ஜமீன்தாரால் நிறுவப்பட்ட கீதேஷ்வர் சிவன் கோயில், கிராமத்தின் சாதியப் படிநிலையின் நுண்ணிய உருவமாகத் திகழ்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒரு ஜமீன்தாரால் 60 பிகா (மூன்று ஏக்கர்) நிலம் வழங்கப்பட்டது. இந்தக் கோயிலில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த மக்களுக்கு நிலமும் அவர்கள் கோயிலுக்குச் செய்யவேண்டிய கடமைகளும் வரையறுக்கப்பட்டுள்ளது.

பார்ப்பனர்கள் சடங்குகளுக்கும், கோஷல் மக்கள் பால் வழங்குவதற்கும், மலகர் மக்கள் பூக்களை வழங்குவதற்கும், பயனர்கள் இசைக்கும், குமோர் மக்கள் மட்பாண்டங்களைச் செய்து கொடுப்பதற்கும் பல தலைமுறைகளாகக் கோயில் நிலத்தில் வசிக்கும் பட்டியல் சாதியைச் சேர்ந்த தாஸ் மக்கள் விழாக்களின் போது இசைக்கருவிகள் வாசிப்பதற்கும் கடமையானவர்கள் ஆக்கப்பட்டிருந்தனர். எனினும், தாஸ் சமூக மக்கள் கோயிலின் பிரதான அறைக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதுபற்றி, “நாங்கள் தினக்கூலி தொழிலாளர்கள். நாங்கள் கோயில் நிலத்தின் ஒரு பகுதியில் வசிக்கிறோம். தலைமுறை தலைமுறையாக எங்கள் கடமை தக் (பறை), அத்துடன் கசார் (சிம்பல்) வாசிப்பதாகும். ஆனாலும், நாங்கள் கோயிலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டது. பார்ப்பனர்கள் பெரும்பாலான உரிமையைப் பெற்றுள்ளனர். சாதி அரசியல் மூலம் எங்களைப் பிரித்து வைத்துள்ளனர்” என்கிறார் தாஸ் சமூகத்தைச் சேர்ந்த மூத்த கிராமவாசியான பகீரத் தாஸ்.

130 குடும்பங்களைக் கொண்ட தாஸ் மக்கள் பார்ப்பனர்கள் தலைமையிலான கோயில் நிர்வாகத்தை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். தாஸ் சமூக மக்கள் “ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் மட்டுமே” என கோயில் நுழைவு உரிமைகளைப் பெற்றனர். சிலைக்குத் தண்ணீர் வழங்க அவர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை.

அக்கோவில் பற்றி தற்போதைய பூசாரி கூறுகையில், “மூன்று நூற்றாண்டுகளாக, உள் கருவறைக்குள் நுழைவது பிராமணர்களுக்கு மட்டுமே. மற்ற சாதியினர் பூசாரிகள் மூலம் மட்டுமே தெய்வத்திற்குத் தண்ணீர் வழங்க முடியும். இப்போது, தாஸ் சமூக மக்கள் காலை 10 மணி முதல் 11 மணி வரை நுழைய அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் சிவனுக்குத் தண்ணீர் வழங்கும் சடங்கில் பங்கேற்கலாம்” என்கிறார்.

இந்த ஒரு மணி நேரத்தை ”ஏழைகளுக்கான வெற்றி” என்கிறார் சமத்துவ இயக்கத்தை வழிநடத்திய கிராமவாசிகளில் ஒருவரான ஸ்வபன் தாஸ். “இடது முன்னணியின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கிராமத்தின் ஆதிக்கச் சாதிப் பிரிவுகள் இந்தப் பிரச்சினையை அடக்கி, ஒடுக்கியே வந்துள்ளன. இந்த முறை, எங்கள் சமூகம் இட ஒதுக்கீட்டின் கீழ் பஞ்சாயத்தில் முன்னிலையில் உள்ளது. நாங்கள் அரசியல் அழுத்தத்தைப் பயன்படுத்தி, முன்னேற்றத்தைச் சாத்தியமாக்கினோம்,” என்கிறார்.

தாங்கள் கோயில் விசயத்தில் தோல்வியடைந்துள்ளதாக உயர் சாதியினர் கருதுவதால் தாஸ் சமூக மக்களுக்கு தினசரி கூலி வேலைகள் மறுக்கப்படுவது, தாஸ் மக்களின் வீடுகளிலிருந்து பால் வாங்குவதை நிறுத்துவது என தங்களது வெறுப்பைக் கக்கி வருகின்றனர்.

இதுவரை மேற்குவங்கத்தில் ஆழமாக வேரூன்றிய பத்ரலோக் சமூகத்தினர் (மேற்குவங்க உயர்தர, நடுத்தர பிரிவினர்) அரசியலில் ஆதிக்கம் செலுத்துவதன் காரணமாகச் சாதியப் பாகுபாடு ஒரு முக்கிய அரசியல் பிரச்சினையாக மாறவில்லை.

கிராமப் பஞ்சாயத்தில் உள்ள கிதாகிராம் கிராமத்தில் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசில் நான்கு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த போராட்டங்கள் குறித்து மௌனம் காத்து வருகின்றனர். எதிர்க்கட்சிகளும் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.

இப்போராட்டத்தால் கோயில் நுழைவு உரிமைகளைப் பெற்றுள்ளது என்பது கோயிலைப் பற்றியது மட்டுமல்ல; சம உரிமைகளுக்கான போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.


படிக்க: பார்ப்பன கும்பலிடமிருந்து புத்தர் கோயில்களை மீட்கப் போராட்டம்!


இதேபோன்றதொரு போராட்டம் நாடியா மாவட்டத்தின் தெபாகிராமிலும் நடந்து வருகிறது. பைராம்பூர் கிராமத்தில், ருய்தாஸ் (செருப்பு தைப்பவர்) சமூகத்தைச் சேர்ந்த 150 பாட்டியல் சாதி குடும்பங்கள் கோயிலுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களும் சடங்குகளுக்காக தக் (பறை) வாசிக்க அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் கோயில் வளாகத்திற்கு வெளியே இருந்தவாறு பறையிசைக்க வேண்டும்.

அங்குள்ள ஒடுக்குமுறை பற்றி ஒருவர் கூறுகையில்,”நாங்கள் எப்போதும் தூரத்திலிருந்து தக் வாசித்திருக்கிறோம், அதே நேரத்தில் நில உரிமையாளர்கள் எங்கள் பறையிசையின் தாளங்களுக்கு நடனமாடுகிறார்கள். ஆனால் தெய்வத்தை அணுகுவது எங்களுக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த விதியை கடவுள் இயற்றினாரா, அல்லது நில உரிமையாளர்கள் இயற்றினரா?” என்று கிராமத்தைச் சேர்ந்த வயதான மதன் ருய்தாஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். பர்தமன் கிராமத்தில் பகுதியளவு முன்னேற்றத்தைக் கண்டாலும், நாடியாவில் பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது.

“இதுபோன்ற சாதிவெறி மாநிலம் முழுவதும் நிலவுவதை நினைத்து நாங்கள் அஞ்சுகிறோம். மனுவாத ஜமீன்தாரி சகாப்தம் ஒடுக்குமுறையை உயிர்ப்பிக்கிறது,” என்று முன்னாள் சி.பி.ஐ(எம்) எம்.பி.யும், பர்தமான் மற்றும் நடியாவில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டை எதிர்த்துப் போராடி வரும் பஸ்சிம் பங்கா சமாஜிக் நியாய் மஞ்சா பொதுச் செயலாளருமான அழகேஷ் தாஸ் அவலத்தை எடுத்துரைக்கிறார்.

உள்ளூர் அரசியல் தலையீடுகளால் இப்போராட்டங்கள் பொதுவெளிக்கு கொண்டுவரப்படாமல் இருந்தாலும், சாதிய பாகுபாட்டைத் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தி வந்த அதிகார வர்க்க – அரசியல்வாதிகளுக்கும், பார்ப்பன கும்பலுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கோயில் நுழைவு போராட்டங்களை ஆதரித்து வளர்த்தெடுப்பது நமது முக்கியக் கடமையாகும்.


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க