தன்னுடைய நகைச்சுவை நிகழ்ச்சியில் மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்து கருத்து தெரிவித்ததற்காக ஸ்டாண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய கிளப் மீது ஏக்நாத் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த சிவ சேனா குண்டர்கள் தாக்குதல் நடத்தினர். அவரது கருத்துக்காக மும்பை போலீசு வழக்குப் பதிவு செய்துள்ளது. இது இந்தியா முழுவதும் விவாதமாக மாறி வருகிறது.
பாசிச மோடி அரசிற்கு எதிராகவும், மக்கள் விரோத திட்டங்களுக்கு எதிராகவும், தன்னுடைய நகைச்சுவை மூலம் மூலம் குரல் கொடுத்து வருபவர் ஸ்டாண்ட்-அப் காமெடியன் குணால் கம்ரா. கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று மும்பை கார் (Khar) பகுதியில் உள்ள யூனிகான்டினென்டல் மும்பை (Unicontinental Mumbai) ஹோட்டலில் ”நயா பாரத்” (புதிய இந்தியா) என்கிற தலைப்பில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியின் வீடியோ காட்சிகளை கடந்த 23 ஆம் தேதி அன்று தன்னுடைய சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளார். வீடியோ வெளியாகிய சில மணி நேரங்களிலே சமூக வலைத்தளங்களில் அதிகமாகப் பரவியுள்ளது. இதற்கு எதிராக குணால் கம்ரா மீதான அரசின் கண்டனக் குரல்களும் வழுக்கத் தொடங்கியது.
பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மோடி அரசின் ”புதிய இந்தியா” குறித்தும், நாட்டில் உள்ள நீதிமன்றங்களும், அமலாக்கத்துறையும் எவ்வாறு செயல்படுகின்றன என்பது குறித்தும் கேள்விகளை எழுப்பியுள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த 2022 ஆம் ஆண்டு சிவசேனா கட்சி பாசிச கும்பலால் உடைக்கப்பட்டு, பின்னர் ஷிண்டே முதல்வராக்கப்பட்டார். தற்போது அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார்.
இதனைப் போன்று தேசியவாத காங்கிரஸ் உடைக்கப்பட்டு அஜித் பவார் தனியாகப் பிரிந்து சென்றது குறித்தும் பேசியுள்ளார். மேலும் ஏக்நாத் ஷிண்டேவால் மகாராஷ்டிர அரசு நிலைகுலைந்து உள்ளதாகக் குறிப்பிட்ட குணால் கம்ரா, “தில் தோ பாகல் ஹை” (Dil To Pagal Hai) என்கிற ஹிந்திப் பாடலை மகாராஷ்டிரா மாநிலத்தின் தற்போதைய நிலையோடு பொருத்தி நகைச்சுவையாகப் பாடுகையில் ஷின்டேவை துரோகி (gadar) என்று குறிப்பிட்டுள்ளார்.
விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள முடியாத சிவசேனா (ஷிண்டே பிரிவு) குண்டர் படை நிகழ்ச்சி நடைபெற்ற கிளப்பையும், அது அமைந்துள்ள ஹோட்டலைலையும் அடித்து நொறுக்கிச் சூறையாடியுள்ளது.
👀👀👀 pic.twitter.com/C5Bnn81p5E
— Kunal Kamra (@kunalkamra88) March 25, 2025
அதுமட்டுமல்லாமல் கடந்த 24 ஆம் தேதி அன்று காலை மும்பை முனிசிபாலிட்டி கார்ப்பரேஷன் அதிகாரிகள் ஹோட்டல் சட்டவிரோதமாகக் கட்டப்பட்டுள்ளது என்று கூறி புல்டோசர் மூலம் ஹோட்டலின் சில பகுதிகளை இடித்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஹோட்டல் நிர்வாகம் “நம்மையும் நமது சொத்துகளையும் ஆபத்தில் ஆழ்த்தாமல் சுதந்திரமாகக் கருத்தைத் தெரிவிப்பதற்கான ஒரு தளத்தை வழங்குவதற்கான சிறந்த வழியைக் கண்டுபிடிக்கும் வரை மூடப்படும்” என்று அறிவித்துள்ளது.
பாசிச கும்பல் இருக்கும்வரை அப்படி நிலை உருவாவதற்கான சாத்தியக்கூறு மிகவு குறைவே!
தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியைச் சேர்ந்தவர்கள் சிலர் கைது செய்யப்பட்டு பாந்த்ரா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். ஆனால் பாசிச கும்பலுக்குச் சேவை செய்கின்ற வகையில் ரூபாய் 15.000 அபராதத் தொகையைச் செலுத்துமாறு உத்தரவிட்டு நீதிமன்றம் அவர்களை ஜாமீனில் விடுதலை செய்திருக்கிறது.
கார் பகுதி போலிசார் குணால் கம்ரா மீது மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் கருத்துக்களைப் பதிவிடுதல், ஆபாச வார்த்தைகளைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
குணால் கம்ராவை எச்சரித்த சிவசேனா எம். பி நரேஷ் மாஸ்கே தன்னுடைய வீடியோவில் ”மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கேயும் உங்களைச் சுற்றித் திரிய விடமாட்டேன். எங்கள் வழியில் குறுக்கிடாதீர்கள்” என்று மிரட்டும் தொனியில் பேசியுள்ளார்.
மிரட்டல்களுக்கு எல்லாம் அஞ்சாத குணால் கம்ரா “நான் மன்னிப்பு கேட்கப் போவதில்லை. இந்த கும்பலைப் பார்த்து நான் பயப்படவில்லை. நிலைமை சற்று தணியும் வரை கட்டிலுக்கு ஒளிந்து கொள்ளப் போவதுமில்லை” என்று தன்னுடைய எக்ஸ் (Twitter) பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மேலும் 24 ஆம் தேதி இரவு வெளியிட்ட அறிக்கையில் ”எனக்கு எதிராக எடுக்கப்படும் எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கைக்கும் போலீசு மற்றும் நீதிமன்றங்களுடன் ஒத்துழைப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
”ஆனால் நகைச்சுவையால் புண்படுத்தப்படுவதற்கு காழ்ப்புணர்ச்சிதான் சரியான பதில் என்று முடிவு செய்தவர்களுக்கு எதிராக சட்டம் நியாயமாகவும், சமமாகவும் நடந்திடுமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் “ஸ்டாண்ட்அப் காமெடி செய்ய யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் அவர்கள் கருத்துச் சுதந்திரத்தைப் பயன்படுத்தி என்ன வேண்டுமானாலும் செய்யக்கூடாது. ஷிண்டேவை அவமதிக்க கம்ராவுக்கு எந்த உரிமையும் இல்லை. இதை நாங்கள் கண்டிக்கிறோம். பொறுத்துக்கொள்ளமாட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள குணால் கம்ரா “எனக்குத் தெரிந்தவரை நமது தலைவர்களையும் அரசியல் அமைப்பையும் கேலி செய்வது சட்டவிரோதமானது அல்ல” என்று முகத்தில் அறைந்ததைப் போன்று தெரிவித்துள்ளார்.
My Statement – pic.twitter.com/QZ6NchIcsM
— Kunal Kamra (@kunalkamra88) March 24, 2025
இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி குணால் கம்ரா மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த போலீசார், நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால் கம்ராவின் வழக்கறிஞர் 7 நாட்கள் அவகாசம் கேட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். கம்ராவுக்கு சிவசேனா கட்சி தொண்டர்கள் கொலை மிரட்டலும் விடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
குணால் கம்ராவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம். பி சபகல் ஹர்ஷ்வர்தன் “தாக்குதல் நடத்தியவர்கள் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்கள் சொந்த அரசாங்கம், அரசியலமைப்பு, சட்டம் ஆகியவற்றை நம்பவில்லையா? அவர்கள் ஏன் சட்டத்தை தங்கள் கையில் எடுத்துக் கொள்கிறார்கள்? கம்ரா ஷிண்டேவின் பெயரைக் குறிப்பிடாத போது அவர்கள் ஏன் இந்த தாக்குதலை மேற்கொண்டார்கள்” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய ஸ்டாண்ட் அப் காமெடியன்கள் பெரும்பாலும் கருத்துகள் மற்றும் நகைச்சுவைகளுக்காக பாசிச அடக்குமுறையை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த 2021 ஆம் ஆண்டு நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபரூக்கி நகைச்சுவைகளில் இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுப் பல நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு ஸ்டாண்ட் அப் காமெடியன் வீர் தாஸ், ”இரண்டு இந்தியாக்கள் உள்ளது. பகலில் பெண்களை வணங்குகிறார்கள்; ஆனால் இரவில் அவர்களை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்கிறார்கள்” என்று இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளைப் பற்றிப் பேசியதற்காக அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டது இங்கே குறிப்பிடத்தக்கது.
பாசிச கும்பலானது தி காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி, சாவா போன்ற திரைப்படங்கள் மூலம் வரலாற்றைத் திரித்து இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வெறுப்பைப் பரப்புவதற்குக் கருத்துச் சுதந்திரம் உண்டு. அது சட்டவிரோதமானது இல்லையாம். ஆனால் மோடி அரசை விமர்சித்து நகைச்சுவை செய்தாலோ கேலிச் சித்திரம் பதிவிட்டாலோ அவை குற்றமாகுமாம்.
தற்போது குணால் கம்ராவை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளத் துணிவில்லாத இக்கும்பல் தனது அதிகாரத்தைக் கொண்டு அவரை ஒழித்துக் கட்டுவதற்கான நடவடிக்கையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இது கருத்துச் சுதந்திரத்தைக் கல்லறையில் தள்ளும் நடவடிக்கையாகும்.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram