பள்ளிக் குழந்தைகளின் உடல் பருமனைக் குறைப்பதற்கு பிரதமர் போஷன் (PM Poshan) திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளின் மதிய உணவில் பயன்படுத்தப்படும் எண்ணெய்யின் அளவை 10 சதவீதம் குறைக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு உணவு ஆர்வலர்கள் தங்களது கடும் கண்டங்களைத் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் பள்ளி மாணவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் குறித்து சமீபத்தில் நடந்த “மன் கி பாத்” நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அதில் “தி லான் செட்” இணையதளத்தில் வெளியான கட்டுரையைக் குறிப்பிட்டுப் பேசியுள்ளார்.
மோடியின் பேச்சைத் தொடர்ந்து மார்ச் 15 அன்று மத்திய கல்வி அமைச்சகம், அரசுப் பள்ளிகளில் மதிய உணவில் 10 சதவீதம் எண்ணெய்யைக் குறைக்க வேண்டும் என்று மாநில அரசுகளை வலியுறுத்தி ஆலோசனை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அன்றாட வாழ்வில் 10 சதவீதம் எண்ணெய்யைக் குறைப்பது குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் இணைந்து சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
மேலும் “பள்ளிகளில் உள்ள அனைத்து சமையல்காரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கும், எண்ணெய் பயன்பாட்டை 10 சதவீதம் குறைக்க பயிற்சி அளிக்கப்பட வேண்டும். அனைத்து மாணவர்களும் தங்களது எண்ணெய் நுகர்வு குறித்து கவனமாக இருக்க வேண்டும். அதிக நேரம் வறுப்பதற்குப் பதிலாக கிரில் செய்தல், வேகவைத்தல் அல்லது பேக்கிங் போன்ற ஆரோக்கியமான சமையல் முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளது.
படிக்க: இந்தியாவில் 19.46 கோடி பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு: சோஃபி அறிக்கை
ஆனால் பிரதமர் போஷன் திட்டத்தில் அரசுப் பள்ளிகளில் 10 சதவீதம் எண்ணெய் குறைக்கப்படும் என்கிற திட்டத்தினை உணவு மற்றும் ஊட்டச்சத்து தொடர்பான ஆர்வலர்களின் அமைப்பான ”உணவு உரிமைக்கான பிரச்சார இயக்கம்” (Right to Food Campaign) கடுமையாகக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
அறிக்கையில் “அரசுப் பள்ளிகளில் குழந்தைகளின் மெனுவிலிருந்து, ஒரு குறிப்பிட்ட உணவுப் பொருளை ஆதாரங்கள் அல்லது உரிய ஆலோசனை செயல்முறை இல்லாமல் நிராகரித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சகம் வெளியிட்ட விரிவான அறிக்கைகள் பொறுப்பற்றவை மற்றும் தன்னிச்சையானவை என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், ”என்ன உணவு சாப்பிட வேண்டும் என்பது குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கு முன் தற்போது உட்கொள்ளப்படும் ஊட்டச்சத்து குறித்து தேசிய கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும்” என்று தன்னுடைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
“மதிய உணவுகளின் பன்முகத்தன்மை மற்றும் உணவில் உண்மையில் எண்ணெய் சேர்க்கப்படுகிறதா, அப்படியானால் எவ்வளவு என்பது குறித்து எந்த தரவும் இல்லை” என்று இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
”உலகளாவிய பசி குறியீடு போன்ற சர்வதேச அறிக்கைகளை அரசாங்கம் கடுமையாக நிராகரிக்கிறது. தேசிய ஆய்வுகளில் ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த தரவுகளைப் புறக்கணிக்கும் அதே வேளையில், லான்செட் அறிக்கையிலிருந்து உடல் பருமன் புள்ளிவிவரங்களை உடனடியாக மேற்கோள் காட்டுகிறது” என்று மோடி அரசின் சந்தர்ப்பவாதத்தை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
மேலும் “குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாகத் தேவை” என்று குறிப்பிட்டு “எங்கள் அனுபவத்தில், ஏழை சமூகங்கள் கொழுப்புகள் மற்றும் எண்ணெய்களை உட்கொள்வதற்குத் தடைகள் உள்ளன” என்று குறிப்பிட்டுள்ளது.
படிக்க: உலக பட்டினிக் குறியீடு 2022 | 121 நாடுகளில் இந்தியா 107-வது இடம்!
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி (NFHS-5 2019-21) ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 36 சதவீதம் பேர் வளர்ச்சி குன்றியவர்கள், 32 சதவீதம் பேர் எடை குறைவாக உள்ளனர் மற்றும் 3 சதவீதம் பேர் அதிக எடை கொண்டவர்களாக உள்ளனர்.
உடல் எடை குறைவு, உடல் வளர்ச்சியின்மை போன்றவற்றால் பள்ளி குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அரசாங்கத்தால் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.
“உடல் பருமன் என்பது ஏற்கெனவே மிகவும் மோசமாக உள்ள மதிய உணவுத் திட்டத்திற்கான பட்ஜெட்டை மேலும் குறைப்பதற்கான ஒரு சாக்குப்போக்காகத் தெரிகிறது. பள்ளி உணவுக்கான செலவு விதிமுறைகள் குழந்தைகளுக்குச் சமச்சீரான, சத்தான மற்றும் புதிய உணவை வழங்க போதுமானதாக இல்லை. மேலும், கடந்த பத்து ஆண்டுகளில் மத்திய அரசின் பட்ஜெட் ஒதுக்கீடு (பணவீக்கத்தைக் கணக்கில் கொண்டு பார்த்தால்) 40 சதவீதம் குறைந்துள்ளது” என்று பாசிச மோடி அரசின் திட்டமிட்ட நிதி குறைப்பை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி உள்ளது.
“பழங்கள், காய்கறிகள், பருப்பு வகைகள், முட்டை, பால், இறைச்சி, மீன், எண்ணெய்கள் போன்றவற்றின் விலைகள் அதிகரித்து வருவதால், உணவுப் பன்முகத்தன்மையை அதிகரிக்க பட்ஜெட் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும்” என ஒன்றிய அரசுக்கு ஊட்டச்சத்து ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பாசிச கும்பல் கல்விக்கான நிதியை வெட்டி சுருக்குவது, பள்ளி குழந்தைகளுக்கான மதிய உணவு நிதியைக் குறைப்பது என்று மாணவர்களின் கல்வி மீது தாக்குதல் தொடுத்து வருகிறது. சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மதிய உணவுத் திட்டத்திலிருந்து முட்டையை நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட் முதலாளிகளுக்கு கோடிக்கணக்கில் கடனை தள்ளுபடி செய்கிறது. ஆனால் பள்ளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவுப் பொருட்களின் அளவைக் குறைகின்றது.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram