தருமபுரி மாவட்டம் நள்ளம்பள்ளி தாலுகா எர்ரபையனஅள்ளி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 12 கிராமங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் பயின்று வருகின்றனர். எர்ரபையனஅள்ளி காலனி பகுதியிலிருந்து மட்டும் 55க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர்.
21.03.2025 அன்று மதியம் 2.00 மணியளவில் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த செல்லப்பன் (எ) முத்தூரான் என்பவர் பள்ளியின் அருகில் உள்ள சாலையோரம் நடந்து சென்று கொண்டிருக்கும் போது வகுப்பறையின் ஜன்னல் வழியே 6-ஆம் வகுப்பைச் சார்ந்த மாணவர்கள் கும்பலாக முத்தூரானை பார்த்து கிழவா, கிழவா எனக் கூப்பிட்டுக் கிண்டல் செய்துள்ளனர்.
உடனே பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி பள்ளியின் உள்ளே சென்ற முத்தூரான் 6-ஆம் வகுப்பு பயிலும் சவிகாந் என்ற மாணவரை ”பறப்பயலே நீ என்னைய கிழவானு கூப்டுவியா” என்று கண்ணத்தில் அரைந்தும் சாதிப் பெயரைச் சொல்லி நாக்கூசும் வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனைப் பார்த்த சவிகாந்தின் நண்பர் ரோகித் முத்தூரானைப் பார்த்து ”சவிகாந்தை எதுக்கு அடிக்குறீங்க” என்று கேட்டதற்கு ரோகித்தையும் கண்ணங்கண்னமாக அரைந்து சாதிப் பெயரைக் கூறி கெட்ட வார்த்தையால் திட்டியுள்ளார்.
பள்ளி நிர்வாகத்தின் அனுமதியின்றி பள்ளியில் நுழைந்து 2 மாணவர்களைத் தாக்கி, சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகப் பேசி முத்தூரானை பள்ளியின் ஆசிரியர்கள் எந்த கேள்வியும் கேட்கவில்லை. முத்தூரான் அடித்த வலியால் அழுதுகொண்டிருந்த மாணவர்களிடம் ”இங்கு நடந்த சம்பவங்களைப் பற்றி ஊரிலோ, வீட்டிலோ யாரிடமும் கூறவேண்டாம். நாங்கள் பணியாரம் வாங்கி தருகிறோம்” என கூச்சநாச்சம் இல்லாமல் பேசியுள்ளனர் ஆசிரியர்கள்.
மாலை வீட்டிற்குச் சென்ற சவிகாந், ரோகித் ஆகிய இருவரும் பள்ளியில் நடந்த சம்பவத்தைப் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஊர் பொதுமக்களும் இளைஞர்களும் பள்ளிக்குச் சென்று ”மாணவர்களை யார் அடித்தது, எங்கள் மாணவர்கள் தவறு செய்திருந்தால்கூட எங்களை வரவழைத்துப் பேசியிருக்க வேண்டும். ரோட்டில் வருபவர்கள் போபவர்கள் அடிக்கத்தான் எங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புரோமா? சாதிப் பெயரைக் கூறி அடித்து இழிவாகப் பேசிய முத்தூரான் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? எங்கள் குழந்தைக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தாலும் இப்படிதான் மறைப்பீர்களா? உங்களை நம்பி குழந்தைகளை எப்படி பள்ளிக்கு அனுப்புவது? தவறு செய்தவனைச் சிறு கேள்விகூட கேட்காமல் வழியனுப்பி வைத்துவிட்டுப் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பள்ளியில் நடந்தவற்றை யாரிடமும் கூறக்கூடாது பணியாரம் வாங்கி கொடுக்கிறோம் என்று கூறத்தான் அரசாங்கம் உங்களுக்குச் சம்பளம் கொடுக்கிறதா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
படிக்க: அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? | தோழர் தீரன்
இதற்கு பள்ளி ஆசிரியர்களோ, பள்ளி நிர்வாகமோ எந்த பதிலும் கூறாமல் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும் திமுக கிளை செயலாளருமான ஆறுமுகம் என்பவரைப் பள்ளிக்கு வரவழைத்துள்ளனர். பள்ளிக்கு வந்த ஆறுமுகம் பள்ளியின் கேட்டை இழுத்து மூடி ”காலனிக்காரர்கள் யாரும் பள்ளிக்குள் வரக்கூடாது. இங்கு யாரும் பேசக்கூடாது” என தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். பள்ளியின் அருகாமையில் உள்ள ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மூர்த்தி, மல்லிகா மற்றும் சிலர் ”பறையர்களுக்கு எவ்வளவு திமிர் இருந்தால் பள்ளிக்கு வந்து பேசுவீர்கள். இந்த பள்ளிக்கு நிலம் கொடுத்ததே நாங்கதான். நீங்களெல்லாம் பேசக்கூடாது” என மிரட்டியுள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியர் முத்துகுமார், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் திட்டமிட்டே ஆண்டு விழா நடன நிகழ்ச்சிகளில் எர்ரபையனஅள்ளி காலனியை சார்ந்த அனைத்து மாணவ மாணவியர் நடனமாடுவதைத் தடுத்துள்ளனர்.
சவிகாந், ரோகித் ஆகிய இரு மாணவர்களை சாதிரீதியாகக் இழிவாகப் பேசி அடித்த முத்தூரான், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், மூர்த்தி மற்றும் மல்லிகா ஆகியோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என 22.03.2025 அன்று பென்னாகரம் போலீசு நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
24.03.2025 அன்று புகார் மனுவை விசாரித்த போலீசு துணை ஆய்வாளர் ஜீவானந்தம் வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யாமல் சாதாரண பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து இருதரப்பினரையும் வரவழைத்து விசாரித்துள்ளார். மாணவர்களை சாதிரீதியாகப் பேசி அடித்த முத்தூரான் தான் செய்தது தவறு என்று ஒப்புக்கொண்ட நிலையில் முத்தூரான், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம், மூர்த்தி மற்றும் மல்லிகா ஆகியோரிடம் ”இனி இதுபோன்ற தவறுகளைச் செய்ய மாட்டோம். தவறு செய்தால் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்” என எழுத்துப்பூர்வமான மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிக் கொண்டு சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
23.03.2025 அன்று மாணவர்களைச் சாதி ரீதியாகப் பேசி தாக்கியவர் மீதும் எர்ரபையனஅள்ளி பள்ளி நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர். நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பாதிக்கப்பட்ட மக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசு, முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு என எந்த அரசு நிர்வாகமும் சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்காமல் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களுக்கே சாதகமாகச் செயல்படுகின்றனர் என்று கூறுகின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள்.
படிக்க: திருவண்ணாமலை: ட்ரோன் மூலம் பட்டியல் சமூக மக்களின் பயிர்களை அழித்த சாதிவெறியர்கள்
இந்த பிரச்சனை நடைபெறுவதற்கு முன்பே தெடரச்சியாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டு ஆசிரியை ஒருவர் மேசையின் மீது தப்படித்து பாடல் பாடிய காலனி மாணவர்களைப் பார்த்து ”பறையர் பசங்கனாவே இப்படித்தா… நீங்கெல்லாம் எதுக்குடா ஸ்கூல்க்கு வரீங்க” எனத் திமிராகப் பேசியுள்ளனர். 2023 ஆம் ஆண்டு கௌரவன் என்ற ஆசிரியர் காலனி மாணவர்களை சாதிரீதியாக இழிவுபடுத்திப் பேசியுள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் அன்றாடம் நடைபெறும் நிகழ்வாகத்தான் உள்ளது. ஏதோ சில சம்பவங்கள் மட்டுமே வெளிவருகிறது என்கின்றனர் ஊர் பெரியவர்கள்.
பள்ளி விடுமுறை நாட்களில் காலனியை சேர்ந்த மாணவர்கள் விளையாட்டுவதற்க்காக பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றால் பள்ளியின் நுழைவாயில் சாவியைக் கொடுப்பதில்லை; ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்கள் விளையாட்டுவதற்க்கு சென்றால் சாவியைக் கொடுத்து விளையாட அனுமதிக்கின்றனர். பள்ளியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றாலும் காலனியை சேர்ந்த மாணவர்கள் மீதே பலியைச் சுமத்துகின்றனர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆறுமுகம் மற்றும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்கள்.
எர்ரபையனஅள்ளியைச் சுற்றியுள்ள 5 கிராம ஊர் மக்கள் இணைந்து நடத்தும் ஊர் திருவிழாவில் எர்ரபையனஅள்ளி காலனி மக்களை ஊர் திருவிழாவில் சேர்த்துக் கொள்வதில்லை. காலனி பொதுமக்களே தங்கள் சொந்த செலவில் நடந்தும் திருவிழாவில் டீயூப்லைட்களை உடைப்பது, கட் அவுட் பேனர்களைக் கிழிப்பது வேண்டுமென்றே வம்புக்கு இழுப்பது போன்ற அடாவடித் தனங்களைச் செய்துவருகின்றனர் ஆதிக்க சாதிவெறியர்கள்.
காலனி பகுதி மக்கள் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்கள் வாங்கவும், தேநீர் அருந்தவும் ஆதிக்கச் சாதி குடியிருப்பு பகுதிகளில் சென்று வாங்கும் நிலை உள்ளது. அப்படி தேநீர் அருந்தச் செல்லும் காலனி மக்களுக்குத் தனி தேநீர் குவளை வழங்கப்படுகிறது (இரட்டை குவளை முறை). தேநீர்க் கடையின் முன் உள்ள நாற்காலியில் அமர்ந்து குடிக்கக்கூடாது; கடையின் பின்புறம் தரையில் அமர்ந்துதான் குடிக்க வேண்டும். அரசாங்கத்தால் கட்டுப்பட்டுள்ள நிழற்கூடத்தில் உள்ள நாற்காலியில் ஆதிக்க சாதியினர் முன் அமரக்கூடாது. ஊருக்கு பொதுவான இடத்தில் அம்பேத்கர் சிலை வைக்கக்கூடாது. எர்ரபையனஅள்ளி என்ற பொதுவான ஊர்ப் பெயரைப் பயன்படுத்தக்கூடாது; காலனி என்றுதான் பயன்படுத்த வேண்டும் என நூற்றுக்கணக்கான உதாரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.
எர்ரபையனஅள்ளி காலனி இளைஞர்கள் “யாதும் நிகர்” என்ற பெயரில் மன்றம் ஒன்றை உருவாக்கிச் செயல்பட்டு வருகின்றனர். தங்கள் ஊரில் தொடர்ந்து நடைபெறும் சாதிய வன்கொடுமைகளுக்கு எதிராக முகங்கொடுக்க நினைத்தாலும் அன்றாட வாழ்வாதார தேவைகளுக்கு ஆதிக்கச் சாதியைச் சேர்ந்தவர்களின் உதவியை நாடியே இருக்கவேண்டும் என்பதாலும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிரான சட்டப் போராட்டங்களை நடத்தவும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வழிகாட்டவும் யாரும் இல்லாத காரணத்தினாலும் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கெதிராக தொடர்ந்து பின்வாங்குகின்றனர் எர்ரபையனஅள்ளி ஊர் மக்களும் இளைஞர்களும்.
எர்ரபையனஅள்ளி நடுநிலைப் பள்ளியில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையான பள்ளிகளில் தாழ்த்தப்பட்ட மாணவர்களைச் சாதிய ரீதியாக இழிவுபடுத்துவது என்பது தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் தேசிய அளவில் பேசுபொருளாக மாறினாலும் ஆண்டாண்டு காலமாகச் சாதி தீண்டாமையிருந்தும், சாதி அடிப்படையிலான வன்முறையிலிருந்தும் அனுபவிக்கும் சித்திரவதைகள் தீர்ந்தபாடில்லை.
பள்ளி கல்லூரி மாணவர்களிடையே இளம் வயதிலிருந்தே சாதி எனும் நஞ்சை விதைத்து சாதி வெறியர்களாக மாற்றும் ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களைத் தடைசெய்யவும், தமிழ்நாட்டில் சாதி வெறி சங்கங்களில் ஊடுருவி சாதியக் கட்டமைப்பை வலுப்படுத்தி வளர்த்தெடுத்து வரும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பைத் தடை செய்யவும் அமைப்பாக ஒன்றிணைந்து போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும்.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram