வங்கக் கடலில் எண்ணெய் – எரிவாயுக் கிணறுகள்: மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் மோடி அரசு

இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

மிழ்நாட்டில் ராமநாதபுரம் முதல் கன்னியாகுமரி வரையில் உள்ள ஆழ்கடல் பகுதிகளில் எரிவாயு எடுப்பதற்கான டெண்டர் அறிவிப்பைச் செய்துள்ளது ஒன்றிய அரசின் எரிசக்தி இயக்குநரகம். மத்திய எரிசக்தி இயக்குநரகம் சார்பாக எண்ணெய் மற்றும் எரிவாயு எடுப்பதற்குத் திறந்த வெளி அனுமதி என்கிற அடிப்படையில் பத்தாவது சுற்று ஏலம் விடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் ஆழ்கடல் பகுதி உட்பட நாடு முழுவதும் 25 வட்டாரங்களில் 1,91,986 சதுர கிலோமீட்டர் பரப்பு ஏலம் விடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள கடல் பகுதியில் சுமார் 10,000 சதுர கிலோ மீட்டர் பரப்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்க ஏலம் விடப்பட்டுள்ளது. நாட்டின் அனைத்து துறைகளையும் இயற்கை வளங்களையும் அம்பானி அதானி பாசிச கும்பலுக்கு வாரிக் கொடுப்பதையே மோடி அமித்ஷா பாசிச கும்பல் திட்டங்களாக மேற்கொள்ளுகின்றது.

கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் அணுக்கழிவு மையம், அணுக்கனிம சுரங்க திட்டம், நியூட்ரினோ ஆய்வுத் திட்டம், ஷேல் எரிவாயு மற்றும் எண்ணெய் எரிவாயுத் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம், ஆகிய சூழலியலுக்கு விரோதமான மற்றும் வாழும் உயிர்களுக்கு எதிரான திட்டங்கள் மூலமாக தமிழ்நாட்டுக் கடற்கரை முழுவதையும் அணு மின் உற்பத்தி மையமாக்கி, ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, தமிழ்நாட்டைச் சுடுகாடாக்குவதே பாசிச மோடி அரசின் நீண்ட காலத் திட்டமும் நோக்கமும் ஆகும்.

ஒரு புறம் தமிழ்நாட்டில், புதிய கல்விக் கொள்கையின் வழியாக மும்மொழிக் கொள்கை இந்தி – சமஸ்கிருத திணிப்பு போன்ற பண்பாட்டு ரீதியான தாக்குதல்களை மேற்கொண்டு வரும் பாசிச மோடி அரசு இன்னொரு புறம் ஹைட்ரோ கார்பன் மற்றும் எண்ணெய் எரிவாயு திட்டங்கள் மூலம் தமிழ்நாட்டில் இயற்கை வளங்களை ஒட்டுமொத்தமாகக் கொள்ளையடிக்க இயற்கைச் சூழலைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளது.

இந்திய எரிசக்தித் துறை அமைச்சகம் ஏற்கெனவே இந்தியா முழுவதிலும் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு குறித்து செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் வாயிலாக அனைத்தையும் அறிந்து பட்டியலிட்டு வரைபடமாக்கி வைத்திருக்கிறது. எப்பொழுது எந்த பிராந்திய மக்கள் ஏமாறுகிறார்களோ அப்பொழுது அங்குள்ள இயற்கை வளங்களைச் சூறையாடிக் கொள்வது என்கிற முறையில் எப்போதும் தயார் நிலையிலிருந்து வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்பு குறித்த அந்தப் பட்டியலும் வரைபடமும் இணையத்திலும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த இயற்கை வளங்களையெல்லாம் எடுத்துப் பயன்படுத்துவது இந்தியாவை வல்லரசாக்க உதவும் என்று மக்கள் மத்தியில் பொய்யான கருத்து பரப்பப்படுகிறது.


படிக்க: ஆழ்கடல் பகுதியில் எண்ணெய், எரிவாயு எடுக்க டெண்டர் – தமிழ்நாட்டை சூறையாட அனுமதியோம்!


ஆனால் உண்மை அவ்வாறு இல்லை. உலகம் முழுவதும் இது போன்ற எண்ணெய் எரிவாயு படிமங்கள் இருக்கவே செய்கின்றன அதில் அதிக வளம் உள்ளது வளம் குறைந்தவை என்கிற வேறுபாடுகள் இருக்கின்றன அதிக வளம் கொழிப்பனவாகக் கருதப்படுகின்ற வளைகுடா பிராந்தியம் தான் இப்பொழுது உலகத்துக்கே எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் செய்யக்கூடியதாக இருந்து வருகிறது இவை தவிர வேறு சில ஆசிய, ஆப்பிரிக்க தென் அமெரிக்க நாடுகளிலும், ரஷ்ய நாட்டிலும் எண்ணெய் மற்றும் எரிவாயு அகழப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

அதுபோன்றே அமெரிக்காவில் ஏராளமான ஹைட்ரோ கார்பன் படிமங்கள் இருப்பது கண்டறியப்பட்டு அங்கு அவற்றை அகழாமல் பாதுகாத்து வருகிறார்கள். ஆனால் இந்தியாவில் இருப்பதோ வளம் குறைந்த படிமங்கள் மட்டுமே. இருந்த போதிலும் மக்களின் விவசாய நிலங்களை அவர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்து எளிய மக்களின் வாழ்வைச் சூறையாடும் வேலையைச் செய்து வருகிறது ஒன்றிய அரசு.

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய கடலோர மாவட்டங்களில் கடலுக்கு வெளியே நிலத்தில் (Off Shore) எண்ணெய் மற்றும் எரிவாயு அகழ்வு 30 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நடத்தப்பட்டு வருகிறது. இம்மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் 700க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றை ஒருங்கிணைத்து எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றும் திருவாரூர் மாவட்டம் வெள்ளக்குடியில் இயங்குகிறது. இந்த கிணறுகள் எல்லாம் விளை நிலத்துக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு பின்னலாக ஒன்றிணைக்கப்பட்டிருக்கின்றன.

இக்குழாய்களில் ஒரு பத்து பதினைந்து ஆண்டுகளிலேயே வெடிப்புகள் ஏற்பட்டு எண்ணெய் கசிவுகள் நிகழ்கின்றன. இதனால் விளைநிலங்கள் நிரந்தரமாகப் பாழ்படுகின்றன. இதை எதிர்த்து மக்கள் ஒவ்வொரு கிராமத்திலும் பலவாறான போராட்டங்களை நடத்தியிருக்கின்றனர். அவ்வப்போது ஆங்காங்கே அந்த கிணறுகளை மட்டும் மூடுவது என்கிற முறையில் கையாண்டு வருகிறது ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனம். ஆனாலும் இந்த எண்ணெய் மற்றும் எரிவாயு கசிவு பெரிய அளவில் ஆங்காங்கே நிகழத் தொடங்கியவுடன் மக்கள் போராட்டங்கள் விரிவாக சாலை மறியல்கள் கடையடைப்பு போராட்டங்கள் என்று வலுக்கத் தொடங்கியது.

பின்பு 2019 இல், குறிப்பாக கதிராமங்கலம் கிராமத்தில் பேராசிரியர் ஜெயராமன் தலைமையில் நடந்த தொடர் போராட்டங்களுக்குப் பிறகு அ.தி.மு.க அரசாங்கம் இனிமேல் புதிய எண்ணெய்க் கிணறுகள் அமைக்கப்படமாட்டாது என்றும், இம்மாவட்ட பகுதிகள் காவிரி டெல்டாவாக இருப்பதால் இதை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது. அதன் பிறகு எண்ணெய் கிணறுகள், செயலிழந்தவை போக மீதமுள்ளவை மட்டும் இன்னமும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இனிமேல் எண்ணெய்க் கிணறுகள் அமைக்க மக்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து தற்காலிகமாகத் திட்டத்தை மாற்றி இருக்கிறது ஓ.என்.ஜி.சி மற்றும் ஒன்றிய அரசு.


படிக்க: சிறு துறைமுகங்கள் மற்றும் ஆழ்கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !


இப்பொழுது ஆழ்கடல் அகழ்வுத் திட்டத்தை முன்னெடுத்திருக்கிறது. இவற்றுக்கான ஒப்பந்தம் 2019 ஆம் ஆண்டிலேயே கையெழுத்தாகியது என்றாலும் தற்போது அதற்கான டெண்டர் ஏலம் விடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் இருந்து கன்னியாகுமரி வரை வங்கக்கடலில் எண்ணெய் கிணறு அமைக்கும் திட்டம் என்பது ஒன்றிய அரசின் ஓ.என்.ஜி.சி நிறுவனத்துக்கும் ஸ்டெர்லைட் புகழ் வேதாந்தா கார்ப்பரேட் நிறுவனத்துக்கும் பிரித்துக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது மொத்தம் 341 கிணறுகளில் ஓ.என்.ஜி.சி-க்கு 67 கிணறுகளும், வேதாந்தாவுக்கு 274 கிணறுகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. வேதாந்தாவின் திட்ட மதிப்பு ரூபாய் 15,538 கோடி என்று கூறப்படுகிறது.

இவை இரண்டு தொகுதிகளாக (Block) பிரிக்கப்பட்டுள்ளன. முதல் தொகுதி எனப்படுவது 2,574 சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்டது. அதில் 281 சதுர கிலோமீட்டர் மட்டும் கடலுக்கு வெளியில் (Off shore) நிலத்தில் அமைவதாகும். மீதம் 2,393 சதுர கிலோமீட்டர் வங்கக் கடலில் ஆழ்கடல் பகுதியில் அமைவதாகும். ஆழ்கடல் கூறப்பட்டிருப்பது கரையிலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரமாகும். இரண்டாவது பிளாக் எனப்படுவது 1,794 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 161 சதுர கிலோமீட்டர் மட்டும் நிலத்தில்; ஆழ்கடல் பகுதியில் 1,654 சதுர கிலோமீட்டர் ஆகும்.

முதல் தொகுதிக்கான திட்டம் இப்பொழுது நடைமுறைக்கு வருகிறது. இத்திட்டங்கள் மீனவர்களின் வாழ்வை அழிக்கப் போவதுடன் சுற்றுச்சூழலையும் பெருமளவு கெடுக்கப் போகிறது என்பது உறுதியாகும். ஆகவே இத்திட்டங்களை மீனவ மக்கள் மட்டுமன்றி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் எதிர்த்துப் போராடி முறியடிக்க வேண்டும். இதுபோன்ற மக்கள் வாழ்வாதாரங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடு விளைவிக்கின்ற திட்டங்களை தமிழ்நாட்டில் அனுமதிக்க முடியாது என்பதை கார்ப்பரேட் அகர்வாலுக்கும் மோடி-அமித்ஷா கும்பலுக்கும் உறைக்கும் வகையில் தக்க பாடம் புகட்ட வேண்டும்.


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க