டெல்லி டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழக நிர்வாகம் துணைவேந்தரின் கருத்தை விமர்சித்ததற்காக எம்.ஏ முதுகலை மாணவியை இடைநீக்கம் செய்துள்ளது. இச்சம்பவம் ஆசிரியர்கள் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி டாக்டர் பி.ஆர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் இந்தியாவின் முக்கியமான பல்கலைக்கழகங்களில் ஒன்று. அப்பல்கலைக்கழகத்தில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி அன்று அன்று குடியரசு தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் கலந்து கொண்டு உரையாற்றிய துணைவேந்தர் அனு சிங் லாதர் (Anu Singh Lather) “ராமர் கோவில் 525 ஆண்டுகள் பழமையானது. அது ஒரு புதிய பிரச்சனை அல்ல” என்றும் ராமர் கோவிலைக் கட்டிய மாநிலத்துக்கு வாழ்த்துகள் என்றும் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை ஆதரித்து இஸ்லாமியர்கள் மீதான தன்னுடைய வன்மத்தைக் கக்கியுள்ளார்.
பல்கலைக்கழகத்தில் அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) செயல்பட்டு வருகிறது. அந்த அமைப்பைச் சேர்ந்த முஸ்லீம் மாணவி எம்.ஏ முதுகலை இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 28 ஆம் தேதி அன்று பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் ”துணைவேந்தரின் கருத்துகள் மதவாத சாதியவாத அடிப்படையிலானவை. இக்கருத்துக்களைப் பேசியதுடன் பாபர் மசூதி இடிக்கப்பட்டதற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்” போன்ற விமர்சனங்களை தெரிவித்துள்ளார்.
மாணவியின் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ள முடியாத நிர்வாகம் துணைவேந்தருக்கு எதிராகப் பேசிவிட்டதாக அலறியது. மாணவியின் விமர்சனங்கள் குறித்து கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி அன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதன் பின்னர் பிப்ரவரி 28 ஆம் தேதி அன்று பல்கலைக்கழக நெறிமுறை வாரியம் மாணவியையும் அவருடைய தந்தையும் விசாரணைக்கு அழைத்துள்ளது.
நிர்வாகம் தன்னுடைய பெற்றோர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் என்பதை அறிந்து மாணவி விசாரணைக்கு தனியாகச் சென்றுள்ளார். விசாரணையின் போது நிர்வாகம் அவரை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி உள்ளது. ஆனால் தன்னுடைய கருத்தில் உறுதியாக இருந்த மாணவி மன்னிப்பு கேட்காமல் துணிச்சலுடன் வீட்டிற்கு வந்திருக்கிறார்.
படிக்க: தெற்கு ஆசிய பல்கலைக்கழகம்: மாணவர்களின் உணவு உரிமையைப் பறிக்கும் ஏபிவிபி கும்பல்
மாணவியின் உறுதியைக் கண்டு ஆத்திரமடைந்த நிர்வாகம் கடந்த மார்ச் 21 ஆம் தேதி அன்று “ஒழுக்கமின்மை” மற்றும் “நிறுவனத் தலைவருக்கு எதிராக இழிவான மற்றும் அவமரியாதையான வார்த்தைகளைப் பயன்படுத்தியது” என்று குற்றஞ்சாட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் விசாரணைக்கு தந்தையை அழைத்து வராதது, மன்னிப்பு கேட்க மறுத்தது போன்ற காரணங்களால் மாணவியை ஆறு மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்வதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த காலகட்டத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நுழைவதற்கும் தடை விதிக்கப்படுகிறது என்று மாணவியின் மீது திட்டமிட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளது.
பல்கலைக்கழக நிர்வாகத்தால் முஸ்லீம் என்கிற அடையாளத்தின் காரணமாகத்தான் குறிவைக்கப்படுவதாகத் தெரிவித்த மாணவி “நான் எனது இறுதி செமஸ்டரில் இருக்கிறேன். எனது இறுதி சமர்ப்பிப்பு மே மாதத்தில் வர உள்ளது. இது எனது பட்டப்படிப்பை ஒரு வருடம் தாமதப்படுத்துவதற்கான திட்டமிட்ட முயற்சி” என்று அவர் மேலும் கூறினார். “கேள்விகள் கேட்பது குற்றம் என்றால், எங்கள் பல்கலைக்கழகத்தின் நோக்கம் என்ன? இந்த மன ரீதியான துன்புறுத்தலானது, எதிர்ப்பை வெளிப்படுத்தும் அனைத்து மாணவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாக இருந்து அவர்களின் குரல்களைக் காலவரையின்றி அடக்குவதற்கு நிர்வாகத்தால் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட முயற்சியாகும்” என்று கூறி நிர்வாகத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.
மாணவி இடைநீக்கம் செய்யப்பட்டதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். அதனால் அவர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்துவதற்காக நிர்வாகம் கடந்த 22 ஆம் தேதி அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் “பல்கலைக்கழகத்தின் நெறிமுறை வாரியம் எந்தவொரு ஒழுக்கமின்மை நிகழ்வுகளையும் கையாளும் போது நிலையான மற்றும் பாரபட்சமற்ற அணுகுமுறையைப் பின்பற்றுகிறது, பின்னணி அல்லது சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் ஒவ்வொரு மாணவரையும் சமமாக நடத்துகிறது. வாரியத்தின் முடிவு வெளிப்படைத்தன்மை மற்றும் நியாயத்தை உறுதி செய்கிறது” என்று கூறி தனது நடவடிக்கையை நியாயப்படுத்திக் கொள்கிறது.
மாணவி இடைநீக்கம் செய்யப்பட்ட அன்றைய தினமே இது குறித்து அகில இந்திய மாணவர் சங்கம் (AISA) அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் இடைநீக்கத்தை உடனடியாக ரத்து செய்யக் கோரியது. ”இது ஜனநாயக மற்றும் கல்வி உரிமைகளை மீறுகிறது. துணைவேந்தரின் பேச்சு அப்பட்டமான சாதிய மற்றும் வகுப்புவாத தன்மையைக் கொண்டிருந்தது” என்று தெரிவித்துள்ளது.
படிக்க: போராடும் மாணவர்களை மிருகத்தனமாக ஒடுக்கும் ஜாமியா பல்கலைக்கழகம்!
மேலும் கடந்த 25 ஆம் தேதி அன்று மாணவியை இடைநீக்கம் செய்த பல்கலைக்கழக நிர்வாகத்தைக் கண்டித்து அகில இந்திய மாணவர் சங்கம் போராட்டத்தை நடத்தியுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது வரை மாணவியின் இடைநீக்கம் ரத்து செய்யப்படவில்லை.
பாசிச கும்பல் ஆர். எஸ். எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களைத் திட்டமிட்டு பல்கலைகழகங்களி ல் துணைவேந்தர்களை நியமித்து வருகிறது. அதன் மூலம் அரசுக்கு எதிராகப் போராடுகின்ற மாணவர்களை இடைநீக்கம் செய்வது, மாணவர் அமைப்புகள் செயல்படுவதற்குத் தடை விதிப்பது என்று மாணவர்களின் கருத்துச் சுதந்திரத்தை பல்கலைக்கழகங்களிலிருந்து முற்றிலுமாக ஒழித்துக் கட்டி வருகிறது இதற்கு எதிரான மாணவர் போராட்டங்களை நடத்த வேண்டியது உடனடி கடமையாகும்.
பல்கலைக்கழகங்கள் மீதான பாசிச கும்பலின் பிடி அதிகரித்து வருவதையே இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. இதை எதிர்த்து முற்போக்கு மாணவர் அமைப்பினர் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை நடத்த வேண்டியது உடனடித் தேவையாக உள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram