தென் மாவட்டங்களில் தலித் மக்கள் மீதான சாதிய தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,095 சாதிய வன்கொடுமைகள் பதிவாகி உள்ளதென்ற அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பாளையங்கோட்டை குலவணிகர்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் இசக்கி பாண்டியன் சாதிய தாக்குதல்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மனு அளித்திருந்தார். இதற்கு நெல்லை மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் பொது தகவல் அலுவலர் அமுதா பதில் அளித்திருந்தார்.
நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.
குறிப்பாக 2021-22 ஆம் நிதியாண்டில் அதிகப்படியாக 302 பேர் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு ரூபாய் 1.65 கோடி நிவாரணமும், 2022-23 ஆம் ஆண்டில் சாதிய வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட 256 பேருக்கு ரூபாய் 2.19 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் 2023-24 ஆம் நிதியாண்டில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 287 நபர்களுக்கு ரூபாய் 4.70 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 2024 -25 ஆம் ஆண்டு நிதியாண்டில் சாதிய வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 3.60 கோடி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.ஐ தகவல் குறித்துப் பேசிய மாவட்ட ஆட்சியர் சுகுமார் “சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட பலருக்கு நெருக்கடிகளைச் சமாளிக்க வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. சாதி மோதல்களைத் தணிக்கப் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. சாதி வன்முறை இல்லாத கிராமங்களுக்கு சிறந்த கிராம விருதுகள் வழங்கப்படுகின்றன. அத்துமீறல் உள்ளிட்ட எந்தவொரு அட்டூழியமும் உடனடியாகப் புகாரளிக்கப்படுவதால், விழிப்புணர்வைப் பரப்புவதில் சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று மழுப்பலான விதத்தில் பேசியுள்ளார்.
படிக்க: அதிகரித்துவரும் சாதியத் தாக்குதல்கள் | தீர்வு தரும் திசை எது? | தோழர் தீரன்
நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் பேசிய சி.பி.ஐ (எம்-எல்) லிபரேசன் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆசைத்தம்பி “கடந்த இரண்டு ஆண்டுகளில் சாதிய வன்கொடுமைகள் 100 சதவிகிதம் அதிகரித்து, நான்கு ஆண்டுகளில் 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளன” என்று சாதிய தாக்குதல்கள் அதிகரித்து வருவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலானது தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கின்ற வெறியில் பல்வேறு வன்முறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக தேவர், வன்னியர், கவுண்டர் போன்ற ஆதிக்கச் சாதி சங்கங்களில் ஊடுருவி வருகிறது. அதன் மூலமாக தலித் மக்களை படுகொலை செய்வது; கொலைவெறித் தாக்குதல் நடத்துவது போன்றவற்றைத் தீவிரமாகச் செய்து வருகிறது. அதன் நீட்சியாக ஸ்ரீவைகுண்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த தாழ்த்தப்பட்ட மாணவர் தேவேந்திரன் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதல் நடத்தியது இங்கே குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு நாங்குநேரியில் தலித் மாணவர் சின்னதுரை ஆதிக்கச் சாதி வெறியர்களால் கொலைவெறி தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார். அது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் பின்னரும் ’திராவிட மாடல்’ அரசு சாதிய படுகொலைகளைத் தடுப்பதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கள எதார்த்தம் இவ்வாறு இருக்க, “தமிழ்நாடு முழுவதும் சாதி பிரச்சனை இல்லை, திருநெல்வேலியில் சாதி பிரச்சனை இல்லவே இல்லை. சிறுவர்கள் இடையிலான பிரச்சினையைச் சாதிய பிரச்சனையாக உருவகப்படுத்த வேண்டாம்” என்று தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு மார்ச் 22 அன்று தெரிவித்துள்ளார். இவ்வாறு சாதிய வன்முறைகளை அங்கீகரிக்க மறுப்பதானது நிலைமை இன்னும் மோசமடையவே வழிவகை செய்யும்.
பள்ளி மற்றும் கல்லூரி மானவர்களிடையே சாதிய வன்முறைகளைத் தடுப்பதற்கான வழிகாட்டுதல்களை வகுப்பதற்கு தனிநபர் குழுவை அமைத்திருந்தது தி.மு.க அரசு. ஆனால் அக்குழுவின் தலைவர் நீதிபதி சந்துரு அவர்கள் அளித்த பரிந்துரைகளை தற்போது வரை அமல்படுத்தாமல் உள்ளது.
சமூக நீதி பேசுகின்ற தி.மு.க அரசின் இதுபோன்ற போக்குகள் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல் தமிழ்நாட்டில் ஆழமாக வேரூன்றுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்குமே அன்றி வேறல்ல.
அன்பு
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram