30.03.2025

கிருஷ்ணகிரி: பொம்மசமுத்திரம் தலித் மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!

கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் ஒன்றியம், பையூர் ஊராட்சிக்குட்பட்ட பொம்மசமுத்திரம் பகுதியில் 50 ஆதிதிராவிடர் குடும்பங்கள் ஏறக்குறைய 50 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

சப்பாணிப்பட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்குச் செல்வதற்கு ஒரேயொரு பொதுவழிதான் உள்ளது. இந்த பொதுவழிக்கான இடம் முன்பு இலட்சுமி என்பவருக்குச் சொந்தமாக இருந்துள்ளது.

1987 ஆம் ஆண்டு மக்கள் இங்கு வசிக்கத் தொடங்கிய பிறகு தலித் மக்கள் பகுதிக்குச் செல்வதற்காக இந்த இடத்தை இலட்சுமி மக்களுக்கு அளித்துள்ளார்.

மேலும், தலித் மக்கள் வசிக்கும் பகுதியில், ஆரம்பப் பள்ளியும் உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. இப்பள்ளிக்கு மேற்சொன்ன பொதுவழியிலும், பைபாஸ் வழியாகவும் செல்லலாம். பைபாஸ் வழியாகச் செல்வதால் விபத்து நடப்பதால், பெரும்பாலும் மாணவர்கள் குறிப்பிட்ட பொதுவழியில் செல்கின்றனர். இப்பள்ளியில் 300 மாணவர்கள் படிக்கின்றனர்.

இந்நிலையில், ஊருக்குள் செல்லும் பொதுவழியை தவிர்த்து இருபுறம் உள்ள இடத்தை இலட்சுமி வீட்டுமனை போட்டு விற்றுள்ளார். இதில் ஒரு பகுதி இடத்தை ஆதிக்கச்சாதியைச் சார்ந்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் பெரியதம்பி வாங்கி வீடு கட்டியுள்ளார். இடத்துடன் கூடவே 10 சென்ட் உள்ள பொதுவழியையும் சட்டவிரோதமாகப் பத்திரம் செய்து கொண்டுள்ளார்.

இதன்பிறகு, 2024 ல் தலித் மக்கள் வசிக்கும் பகுதிக்கு பஞ்சாயத்திலிருந்து சாலை போடுவதற்காக வந்துள்ளனர்.

அப்போது, பெரியதம்பியின் மனைவி முத்தம்மாள், அவரது மகன் நடராஜ், “இது எங்களுடைய நிலம், இதில் ரோடு போடக்கூடாது” எனத் தகராறு செய்துள்ளனர்.

பத்திரம் பெரிய தம்பியின் பக்கம் இருப்பதாகக் கூறி தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் ரோடு போடுவதை நிறுத்தியுள்ளார்.

நிலத்தை விற்ற இலட்சுமி என்பவரும் நான் வீட்டுமனையை மட்டும் தான் விற்றேனே தவிர பொதுவழியை விற்கவில்லை என தலித் மக்களுக்கு ஆதரவாகப் போராடியுள்ளார். ஆனால் அவரும் தற்போது காலமாகிவிட்டார்.

எனவே, பொதுவழியை சட்ட விரோதமாக பெரியதம்பி ஆக்கிரமித்துள்ளதை எதிர்த்து கடந்த இரண்டு வருடங்களாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் தலித் மக்கள் மனு அளித்துள்ளனர். கிராம பஞ்சாயத்தில் இதற்காகத் தீர்மானமும் போடப்பட்டுள்ளது.

அதிகார வர்க்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்து மக்கள் சாலை மறியல் போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

மக்களின் போராட்ட நிர்ப்பந்தம் காரணமாக மாவட்ட வருவாய் அலுவலர் பொது வழியில் சாலை போட அனுமதி அளித்துள்ளார்.

ஆனால் அனுமதி அளித்த பின்பும் வருவாய்த் துறை சார்பாக அடுத்தகட்ட நடவடிக்கை ஏதுமில்லை. போராட்டம் காரணமாக அப்போதைக்கு தலித் மக்களை ஏமாற்றும் வகையில் பேசியுள்ளனர்.

தொடர்ந்து ஆறுமாத காலமாக, அதிகாரிகளிடம் மக்கள் சென்று கேட்கும் போதெல்லாம் அலைக்கழித்துள்ளனர்.

தலித் சமூகத்தைச் சார்ந்த ஒரு பெரியவர் வாரத்திற்கு இருமுறை வருவாய்த்துறை அலுவலகத்திற்குச் சென்று வருகிறார்.

தற்போது, ஏப்ரல் மாதத்தில் ஊரில் கோவில் திருவிழா இருப்பதால், சாலை குண்டும் குழியுமாக இருப்பது மக்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் என மக்கள் தெரிவிக்கின்றனர். அதற்குள் சாலை போட வேண்டும் என மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

தலித் மக்கள் பயன்படுத்தும் பொதுவழியை ஒரு தனிநபர் சட்டவிரோதமாக ஆக்கிரமித்து சாலை போடவிடாமல் தடுத்து வருகிறார்.

இந்த சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.

அதிகார வர்க்கம் எப்போதும் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் எதிராகத்தான் செயல்படுகிறது. அதே சமயம், தலித் மக்கள் எனும்போது எப்போதும் தெரிந்தே ஆதிக்கவாதிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்பட்டு வருகிறது என்பதற்கான மற்றுமொரு உதாரணமே மேற்கண்ட சம்பவங்கள்.

உரிமைகளுக்கான போராட்டத்தை இடைவிடாமல் ஒன்றிணைந்து நடத்துவதன் மூலமே, தலித் மக்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்ள முடிகிறது என்பதே காலம் உணர்த்தும் உண்மை.

உரிமைக்காகப் போராடும் பொம்மசமுத்திரம் தலித் மக்களுக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் துணை நிற்போம்!


தோழர் அருண்,
மாவட்ட இணைச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
8754674757

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க