ஷாஹி ஜமா மசூதி தலைவரைக் கைது செய்து உ.பி போலீசு அராஜகம்

"பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்" என்று ஜாபர் அலி கூறியிருந்தார்.

மார்ச் 23 ஆம் தேதி அன்று சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜமா மசூதி தலைவரை போலீஸ் கைது செய்துள்ளது. இது அப்பகுதியில் உள்ள மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு உத்தரப் பிரதேசத்தின் சம்பல் பகுதியில் அமைந்துள்ளது ஷாஹி ஜமா மசூதி. இந்த மசூதி அங்குள்ள ஹரிஹர இந்து கோவிலை இடித்துவிட்டு பாபரால் கட்டப்பட்டது என்கிற மத வெறுப்பு பொய்ப் பிரச்சாரத்தை கடந்த ஆண்டு காவிக் கும்பல் கையில் எடுத்தது. பின்னர் சம்பல் நீதிமன்றத்திற்குச் சென்றது. நீதிமன்றம் மசூதியில் நிலம் தொடர்பாக சர்வே செய்வதற்கு அனுமதியளித்து ஆணையம் ஒன்றை அமைத்தது.

மசூதியை முதற்கட்டமாக ஆய்வு செய்ய கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அன்று ஆணையம் முதற்கட்ட நில சர்வேக்கு சென்றது. பின்னர் இரண்டாம் கட்ட ஆய்விற்கு நவம்பர் 24 ஆம் தேதி அன்று சென்றது. அக்குழுவுடன் காவி கும்பலும் “ஜெய் ஸ்ரீராம்“ என்று முழக்கமிட்டுக் கொண்டு சென்றது. இதனால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்தது.

முஸ்லீம் மக்கள் மசூதியில் சர்வே நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீஸ் திட்டமிட்டு துப்பாக்கிச்சூடு நடத்தி ஐந்து முஸ்லீம்களைப் படுகொலை செய்தது. ஆனால் முஸ்லீம்கள் தான் வன்முறையைத் தூண்டினர் என்று கூறி காவி கும்பலுக்கு கரசேவை புரிந்தது.


படிக்க: மதுரா : ஷாஹி ஈத்கா மசூதியை கரசேவை செய்ய எத்தனிக்கும் காவிகள் !


போலீசின் படுகொலைக்குப் பின்பு வழக்கறிஞரும், ஷாஹி ஜமா மசூதியின் தலைவருமான ஜாபர் அலி அரசின் திட்டமிட்ட படுகொலையை அம்பலப்படுத்தினார். படுகொலை நடந்த ஒரு நாள் கழித்து பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் “பொதுமக்களிடமிருந்து எந்த துப்பாக்கிச் சூடையும் நான் பார்க்கவில்லை. போலீஸ்தான் துப்பாக்கிச் சூடு நடத்தியது. அவர்கள் நாட்டுத் துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதை நான் பார்த்தேன்” என்று அவர் கூறியிருந்தார்.

”துணைக்கோட்ட குற்ற நடுவர் (Sub-Divisional Magistrate – SDM) மற்றும் வட்ட அதிகாரி (Circle Officer – CO) ஆகியோர் பொதுமக்களின் சந்தேகங்களை வெளிப்படையாக நிவர்த்தி செய்திருந்தால் அமைதியின்மையைத் தவிர்த்திருக்கலாம்” என்று அலி கூறினார். ஆனால், அதற்கு மாறாக, வட்ட அதிகாரி தடியடி நடத்த உத்தரவிட்டதாகவும், எதிர்ப்பாளர்களைச் சுடுவதாக அச்சுறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார்.

“அகழ்வாராய்ச்சி நடக்கிறது என்று மக்கள் நினைத்ததால் நிலைமை கட்டுப்படுத்த முடியாமல் போனது. அமைதிக்கான எங்கள் வேண்டுகோள்கள் மற்றும் நிலைமையைத் தெளிவுபடுத்தும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், நிர்வாகத்தின் தவறான கையாளுதல் மற்றும் தகவல் தொடர்பு இல்லாதது குழப்பத்தை மோசமாக்கியது” என்று அவர் மேலும் கூறினார்.

உள்ளூர் அதிகாரிகள் பீதியை வளர்த்ததாகவும், நெருக்கடியின் போது தலைமையை வழங்கத் தவறியதாகவும் அலி குற்றம் சாட்டினார்.

மேலும் “நான் அங்கிருந்தபோது, ​​டி.ஐ.ஜி, எஸ்.பி மற்றும் டி.எம் துப்பாக்கிச் சூடு உத்தரவு பிறப்பிப்பது குறித்து ஆலோசித்துக்கொண்டிருந்தனர். மக்களை வீட்டிற்குச் செல்லுமாறு நான் வேண்டுகோள் விடுத்து, 75 சதவிகித கூட்டத்தினரை வெற்றிகரமாக நான் கலைத்தேன். ஆனால் போலீசின் நடவடிக்கைகள் மிருகத்தனமாக இருந்தன” என்று அவர் கூறினார்.


படிக்க: மசூதியினுள் ஜெய் ஸ்ரீ ராம்: பாசிஸ்டுகளுக்கு துணைநிற்கும் நீதித்துறை


கடந்த ஆண்டு நவம்பர் 19 ஆம் தேதி அன்று சம்பல் பகுதியில் நடத்தப்பட்ட அதிகாரப்பூர்வ சர்வே குறித்து ஜாபர் அலிக்கு முன்பே தகவல் தெரிவிக்கப்பட்டது. அதனால்தான் முஸ்லீம் மக்கள் மசூதி முன்பு திரண்டனர் என்று ஒரு கதையாடலைக் கூறி ஜாபர் அலியை போலீசு குற்றவாளியாக்கியுள்ளது.

அதன் நீட்சியாக கடந்த 23 ஆம் தேதி அன்று உத்தரப்பிரதேச போலீசின் சிறப்புப் புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது. அதற்கு முன்பாக உள்ளூர் போலிசின் சிறப்புப் புலனாய்வுக் குழு (SIT) ஜாபர் அலியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

மக்தூப் செய்தி ஊடகம் பெற்ற எஃப்.ஐ.ஆர்-இன்படி ஜாபர் அலி மீது விஸ்வ ஹிந்து பரிஷத்தின் மூத்த உறுப்பினர் ஜீதேந்திர தீபக் ரதி புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் அவரை போலீஸ் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின்கீழ் பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருக்கிறது.

அவரது இடைக்கால ஜாமீன் மனுவை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏப்ரல் 2 அன்று அவரது ஜாமீன் மனு விசாரிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

சம்பல் பகுதியைச் சேர்ந்த நதீம் “வன்முறை நடந்த மறுநாள் அவர் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி, கொலைகளை நேரில் பார்த்ததாகக் கூறினார். அவர் கைது செய்யப்படுவார் என்பது அப்போதே எங்களுக்குத் தெரியும்” என்று தெரிவித்துள்ளார்.

போலீசார் மீது கூரையிலிருந்து கற்களை வீசினர் என்ற பொய்யான குற்றச்சாட்டில் நான்கு பெண்கள் உட்பட 77 முஸ்லிம்களை போலீஸ் கைது செய்துள்ளது. அவர்கள் மீது எட்டு முதல் தகவல் அறிக்கைகளை போலீஸ் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்களின் மீதான பாசிச கும்பலின் தாக்குதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இக்கும்பலுக்கு எதிராக அனைத்து மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவை உள்ளது.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க