30.03.2025
சிறப்பாக நடைபெற்ற 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (30 /03/25) மதியம் 3 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட கிளை மாநாடு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மாநாடு தொடங்குவதற்கு முன்னதாக ஊர் பொது மக்கள் மற்றும் மக்கள் அதிகாரத் தோழர்கள் முன்னிலையில் அம்மையப்பன் பகுதியில் கொடியேற்றப்பட்டு தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தப்பட்டது. பிறகு ஊர் பொதுமக்களிடம் மாநாடு நடத்துவதன் நோக்கத்தை தோழர் ஆசாத் எடுத்துரைத்து இனிப்புகளை வழங்கினார்.
மாநாட்டு அரங்கிற்குச் சென்றவுடன் முறையாக நிகழ்ச்சிநிரல் போடப்பட்டது. அதன்படி கூட்டத்தின் தலைவராக தோழர் ஆசாத்தும், பதிவாளராக தோழர் லெனினும் நியமிக்கப்பட்டார்கள். மைய தேர்தல் குழு நிர்வாகி தோழர் சாந்தகுமார் முன்னிலையில் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் மரணித்த தோழர் குழந்தை வேலுவுக்கும், பாலஸ்தீன மக்களுக்கும், மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மரணித்த மக்களுக்கும் ஒருசேர ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதன் பிறகு புதிய கொள்கை அறிக்கை விளக்கப்பட்டு அதன் மீதான விவாதங்கள் நடத்தப்பட்டு தோழர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
அடுத்தாக மூன்றாண்டு அமைப்பு அறிக்கை, அமைப்பு விதிகள் முன்வைக்கப்பட்டு விளக்கம், விவாதம் நடத்தப்பட்டது. இவற்றையும் தோழர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டார்கள்.
மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்வதை பகுதி தோழர் ஒருவர் முன்மொழிய அனைவரும் ஏற்றுக்கொண்டார்கள். அவ்வகையில் புதியதாக பொறுப்பெடுத்துக்கொண்ட தோழர்கள்:
- தோழர். ஆசாத் மாவட்டச் செயலாளராகவும்
- தோழர். லெனின் துணைச் செயலாளராகவும்
- தோழர். முரளி பொருளாளராகவும்
மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக
- தோழர். மோகன்,
- தோழர். குமரகுரு,
- தோழர். வாஞ்சிநாதன்,
- தோழர். ராஜ்குமார்,
- தோழர்.சூரியபிரகாஷ்
மேற்கண்ட தோழர்கள் பொறுப்பேற்றுக்கொண்டதையடுத்து அரங்கில் உள்ள தோழர்கள் உற்சாகத்தோடு கைதட்டி வரவேற்றனர்.
மாநாட்டின் இறுதிக்கட்டத்தில் தோழர்கள் அனைவரும் புதிய உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்கள். இறுதியாக மாவட்ட இணைச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்ட தோழர். லெனின் 16 அம்ச தீர்மானங்களை நிறைவேற்றினார். இதனை அனைத்து தோழர்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
இம்மாநாட்டின் முத்தாய்ப்பாக மாநிலக் குழுவிற்கு ஒப்படைக்க வேண்டிய 5,000 ரூபாயை தோழர். ராஜ்குமார் மாநாட்டின் இறுதியில் தோழர். சாந்த குமாரிடம் வழங்கினார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
-
-
- கரையாபாலையூர் மற்றும் எண்கன் சுற்றியுள்ள பத்திற்கும் மேற்பட்ட கிராமத்தில் இருக்கக் கூடிய விவசாய நிலங்களை அழித்து சிப்காட் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று இந்த மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- திருவாரூரைச் சுற்றியுள்ள 12க்கும் மேற்பட்ட ஊராட்சிகளை நகராட்சியோடு இணைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்த போது வலுக்கட்டாயமாக நகராட்சியுடன் இணைப்பதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர்களை நியமித்து மருத்துவ மாணவர்களின் பணிச்சுமையைக் குறைத்திடவும், மருத்துவ கழிவுகளை வாழவாய்க்கால் ஆற்றில் கலப்பதைத் தடுத்து கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை அமைத்திட இம்மாநாடு கோருகிறது.
- திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கக் கூடிய ஆதியன் பழங்குடி மக்களுக்கு MBC சாதி சான்றிதழ் வழங்குவதைக் கைவிட்டுவிட்டு அவர்களில் வாழ்வாதாரங்களை ஆய்வு செய்து ST சான்றிதழை வழங்கி உயர்கல்வியில் சேரும் உரிமையை நிலைநாட்ட இம்மாநாடு கோருகிறது.
- ஒ.என்.ஜி.சி நிறுவனம் மீத்தேன்,ஹைட்ரோ கார்பன் போன்ற கனிம வளங்களைச் சுரண்டுவதினால் டெல்டா பகுதியில் நீர் மாசுபாடு ஏற்பட்டு பலருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புற்றுநோய் பாதிப்பை ஆய்வு செய்து அதைத் தடுத்திடவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய மருத்துவ வசதி மற்றும் இழப்பீடுகளை வழங்கிடவும் இம்மாநாடு கோருகிறது.
- 100 நாள் வேலைத் திட்டத்தை 200 நாளாக வழங்கிட வேண்டும் என்றும், கடந்த நான்கு மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்ட 100 நாள் சம்பளத்தை மத்திய அரசும் மாநில அரசும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்றும் இம்மாநாடு கோருகிறது.
- அம்மையப்பன் பகுதியில் உள்ள பழமையான மருத்துவமனையானது தற்போது மக்கள் பயன்பாடு இன்றி செயலற்று கிடக்கிறது. இதனை, உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என இம்மாநாடு மாவட்ட நிர்வாகத்திடம் கோருகிறது.
- பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமையை இம்மாநாடு கண்டிப்பதோடு, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க இம்மாநாடு, தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
- கொரடாச்சேரி ஒன்றியம் 18 வாய்க்கால் பெட்டேம்-யின் கொள்ளளவை உடனடியாக உயர்த்த வேண்டும் என இம்மாநாடு தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறது.
- மழைவெள்ள பாதிப்பால் நாசமடையும் பயிர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், பயிர் நாசமடையாமல் பாதுகாக்க விவசாயிகளின் கோரிக்கைகளான அடி உரம், மேல் உரம் போன்றவை உரிய காலத்தில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
- சம்பா குறுவை பயிர் காலத்தில் உரிய நேரத்தில் நீர் திறந்துவிடவும், அதற்கு ஏற்ப கால்வாய்களைத் தூர்வார வேண்டும் என இம்மாநாடு கோருகிறது.
- தமிழ்நாடு முழுவதும் தலித் மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிப்பதோடு இதற்குக் காரணமான ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ். எஸ் – பி.ஜே.பி கும்பலையும் தடைசெய்ய வேண்டும் என இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
- 11 மாத கட்டாய ஒப்பந்த வேலை நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதோடு, பல்வேறு கோரிக்கைகளுக்காகப் போராடும் 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களின் போராட்டத்தை ஆதரித்து இம்மாநாடு தீர்மானம் நிறைவேற்றுகிறது.
- சனாதன எதிர்ப்பு மரபுகளான வள்ளலார், வைகுண்டர், திருவள்ளுவர் போன்றவர்களை சனாதனவாதியாக சித்தரிக்கும் அளுநர் ஆர். என் ரவியை கண்டிப்பதோடு அதற்கு எதிராக ஜனநாயக சக்திகள் முற்போக்காளர்கள் களத்தில் நின்று போராடி நமது வரலாற்றையும் மரபுகளையும் நிலைநிறுத்த இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
- அண்ணா பல்கலைக்கழகம், தரமணி பாலிடெக்னிக் கல்லூரி மாணவி போன்றவர்களின் மீது நடத்தப்பட்ட பாலியல் வன்முறைகளுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும், கல்லூரி நிர்வாகம், போலீஸ், நீதித் துறை உள்ளிட்டோர் குற்றவாளிக்கு ஆதரவாகச் செயல்படுவதை இம்மாநாடு வன்மையாகக் கண்டிக்கிறது.
- இந்துராஷ்டிர கனவோடு தமிழ்நாட்டின் கல்வித் திட்டத்தை மாற்ற அமல்படுத்தப்படும் புதிய கல்விக்கொள்கையை எதிர்ப்பதோடு, இதனால் பாதிக்கப்படுபவர்களின் பக்கம் நின்று களப் போராட்டங்களைக் கட்டியமைப்போம் என்றும், மேலும் புதிய கல்விக் கொள்கை எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்துப் போராட இம்மாநாடு அறைகூவல் விடுக்கிறது.
-
தோழர். லெனின்,
மாவட்ட துணை செயலாளர்.
மக்கள் அதிகாரம்,
திருவாரூர் மாவட்டம்.
63797 47632
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram