பாசிஸ்டுகள் கோழைகள், தேச விரோதிகள், ஊழல் பெருச்சாளிகள், ஊழலிலே ஊறி திளைப்பவர்கள். ஆனால் “ஊழல் இல்லாத ஆட்சி”, “தேசத்தைப் பாதுகாப்போம்” என்ற வீராவேச வசனங்கள் மூலம் நமக்கே பாடம் எடுப்பார்கள். பாசிஸ்டுகளின் ’ஊழலற்ற ஆட்சி’ சி.ஏ.ஜி அறிக்கை, ஹிண்டன்பர்க் அறிக்கை, செபிக்கும் அதானிக்கும் உள்ள தொடர்பு ஆகியவற்றால் தொடர்ந்து அம்பலமானதை நாம் பார்த்திருக்கிறோம்.
இந்த வரிசையில் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆட்சியின் கீழ் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபிஷேக் பிரகாஷ் செய்த ஊழலும் இடம் பெறுகிறது. பி.ஜே.பி சட்டமன்ற உறுப்பினர் கிசோர் குர்ஜாரே கூறியுள்ள “இதுவரை இல்லாத ஊழல் மாநிலமாக உ.பி மாறியுள்ளது” என்ற கருத்தும் யோகி ஆட்சியின் யோக்கியதையை அம்பலப்படுத்துகிறது.
சயீல் சோலர் பி6 பிரைவேட் லிமிடட் (Sael Solar P6 Private Limited) என்கிற தனியார் நிறுவனம் புதிய சூரிய மின்நிலையம் அமைக்க அனுமதி கோரி இணையத்திலும் நேரிலும் திட்டத்தை தாக்கல் செய்துள்ளது. மதிப்பீட்டுக் குழுவும் சயீல் நிறுவனத்தின் திட்டத்திற்குத் தொடக்கத்தில் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிறுவனத்தின் பணியாளர் பிஸ்வாஜித் டட்டாவிடம் (Biswajit Dutta) மூத்த அதிகாரி ஒருவர் இடைத்தரகர் நிகந் ஜெயினிடம் (Nikant Jain) தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள அறிவுறுத்தியுள்ளார். ஜெயின் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் அமைச்சரவையில் அனுமதி பெறுவதற்கு உதவுவார் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதன்பிறகு, பிஸ்வாஜித் டட்டா ஜெயினிடம் தொடர்பு கொள்கிறார். அவர் திட்டத்தின் ஒட்டுமொத்த மதிப்பீட்டிலிருந்து 5 சதவீதம் கமிசன் வேண்டும் எனக் கோருகிறார். அதற்கு முன்தொகையும் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். ஆனால், பிஸ்வாஜித் மறுத்துவிட்டார். இதன்பிறகு எந்தவித முறையான காரணமும் தெரிவிக்காமல் திட்டம் மறுபரிசீலனைக்குச் சென்றுள்ளது.
மேலும், டட்டா ”இத்திட்டம் குறித்து எங்களது முதலாளி, யோகி ஆதித்யநாத்யிடம் ஏற்கெனவே பேசிவிட்டார்” என்று ஜெயினிடம் தெரிவித்துள்ளார். ஆனால், ஜெயின் இது பெரிய விசயமே இல்லை எனவும் திட்டத்திற்கான அனுமதி தன் மூலம் மட்டும் தான் கிடைக்கும் எனவும் தெரிவித்திருக்கிறார். இதன்மூலம், இடைத்தரகர்களின் அதிகாரத்தைப் புரிந்து கொள்ள முடியும். அதேபோல் ஐ.ஏ.எஸ் அதிகாரி அபிஷேக் பிரகாஷுக்கும் முக்கிய பங்குண்டு.
படிக்க: அதானியின் லஞ்ச ஊழல்: அம்பலமாவது அதானியின் மின்சாரத்துறை ஆதிக்கம்
ஐ.ஏ.எஸ் அபிஷேக் பிரகாஷ் லக்னோவில் டிஸ்ரிக்ட் மேஜிஸ்ட்ரேட்டாக அக்டோபர் 2019 முதல் 2022 வரை இருந்துள்ளார். இதன்பிறகு, உத்தரப் பிரதேச தொழில் வளர்ச்சி கழகத் துறையின் செயலாளராகவும், இன்வெஸ்ட் உ.பி-யின் (முதலீட்டை ஊக்குவிக்கும் மற்றும் வசதிகளை ஏற்படுத்தும் முகமை) தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வந்துள்ளார். பிஸ்வாஜித் டட்டா புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த ஊழல் வெளியானது. இதனையடுத்து, மார்ச் 20 ஆம் தேதி அபிஷேக் பிரகாஷ் இடைநீக்கம் செய்யப்பட்டார். அதுவரை இவர் பதவியிலிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இடைத்தரகராக இருந்த நிகந் ஜெயினும் குற்ற வழக்கில் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச அரசு விசாரணை நடத்தியதில், கடைசி நிமிடத்தில் சயீல் நிறுவனத்தின் திட்டம் மறுபரிசீலனைக்குச் சென்றதற்கு எந்த அடிப்படையும் இல்லை என்றும் இது பிரகாஷின் தீங்கிழைக்கும் நோக்கம், சட்டவிரோதமாக பணமீட்டுதல் அடிப்படையில் நடந்துள்ளது எனவும் தெரிவித்தது. மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் மாநிலத்தின் மதிப்பீட்டைக் குறைக்கும் எனவும் மேலும் கூறியது. நிலைமை இப்படியிருக்க ஊழலுக்கு எதிரான வசனங்களை அள்ளி வீசிக்கொண்டிருக்கிறார் யோகி ஆதித்யநாத்.
சூரிய மின்நிலைய லஞ்ச ஊழல் பூதாகரமாக வெளியில் வந்த அதேநாளில் கோண்டா பகுதியில் அரசு நிகழ்ச்சியில் தொழில்முனைவோர், இளைஞர்கள் முன்பு பேசிய யோகி ஆதித்யநாத், ஊழலுக்கு எதிராக அரசு மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப்போவதாகக் கூறினார். ”கறையான்கள் (ஊழல்வாதிகள்) கட்டமைப்பைத் துளையிடுகின்றனர். தாங்கள் ஊழலால் பாதிக்கப்பட்டால் ஒரேயொரு புகார் மட்டும் எழுதுங்கள்” எனக் கூறினார்.
“லோனிற்கு அனுமதி வழங்குவதற்காக யாராவது உங்களிடம் பணம் கேட்டால், அவர்களை நம்ப வேண்டாம். அரசிடம் தெரிவியுங்கள். நான் விசாரணை நடத்தி நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துகிறேன்” என ஆதித்யநாத் தெரிவித்தார். ஆனால், அப்போது கூட சூரிய மின்நிலைய ஊழல் வழக்கு குறித்து அவர் வாயைத் திறக்கவில்லை.
“இதனைக் குறித்துக் கொள்ளுங்கள். நேர்மையற்ற முறையில் யாரேனும் உங்களிடம் பணம் கேட்டால், அவர்தான் அவரது குடும்பத்தில் அரசு வேலைக்கு வருவதில் கடைசி மனிதராக இருப்பார். மிகப்பெரிய நடவடிக்கை எடுக்கப் போகிறோம். அது உதாரணத்தை உருவாக்கப் போகிறது” என அதிகாரிகளை எச்சரிப்பதாக நாடகமாடினார் ஆதித்யநாத்.
படிக்க: அதானி ஊழல் விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேச மறுக்கும் மோடி அரசு!
யோகி மேற்கண்டவாறு வீர வசனம் பேசிக் கொண்டிருக்க, அவரது கட்சி உறுப்பினரே யோகி ஆதித்யநாத அரசு மீது கரியை அள்ளி பூசியுள்ளார். கடந்த மார்ச் 21 ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காசியாபாத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நந்த் கிசோர் குர்ஜார் (Nand Kishor Gurjar), ”தற்போதுள்ள அரசானது இதுவரையில்லாத மிகவும் ஊழலில் ஊறிப்போன அரசு” எனவும் ”உத்தரப் பிரதேச அரசின் தலைமைச் செயலர் மனோஜ் குமார் சிங் மிகப்பெரிய ஊழல்வாதி” எனவும் ”அயோத்தி இடங்களை அதிகாரிகள் கைப்பற்றுகிறார்கள்” எனவும் குற்றம் சாட்டினார்.
மாநிலத்தில் நடக்கும் போலி என்கவுண்டர்கள், ’பசுவதை’ வன்முறைகள் நடைபெறுவதாகவும் அதிகாரிகள் யோகி ஆதித்யநாத்தை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் கூறுகிறார். “உத்தரப்பிரதேசத்தில் நடைபெறும் ஊழலைப் போன்று அகண்ட பாரதத்தில் வேறு எங்கும் நடைபெறவில்லை. ஆனால், ஊடகம் இங்கு ராம ராஜ்ஜியம் இருப்பதாகக் காட்டுகிறது” என குர்ஜார் கூறினார். இவர் முன்னெடுத்த “கலாஷ் யாத்திரையை” போலீசு தடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
“பி.ஜே.பி ஆட்சியின் கீழ், அவர்களது கட்சி உறுப்பினர்களே ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். அநீதியும் ஊழலும் எப்படி நீக்கமற பரவியுள்ளது என வெளிப்படுகிறது. தற்போது அவர்கள் அறிக்கையை மாற்றிவிடுவார்கள்” என எக்ஸ் தளத்தில் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் பதிவிட்டுள்ளார்.
உத்தரப் பிரதேசத்தில் ஐ.ஏ.எஸ் அதிகாரியின் ஊழல் அம்பலப்பட்டுப் போனதும் பி.ஜே.பி-யின் சட்டமன்ற உறுப்பினரின் அரசு குறித்த குற்றச்சாட்டுகளும் யோகி ஆதித்யநாத் “ஊழலற்ற மாநிலமாக மாற்றுவேன்” என்று 2017 முதல் கூறிவருவது வெற்று சவடால் என்பதை நிரூபித்துள்ளது.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram