உத்தரப்பிரதேசத்தில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக பாலஸ்தீன கொடிகளுடன் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் இளைஞர்களை, உ.பி போலீஸ் கைது செய்துள்ளது.
உலகம் முழுவதிலும் மார்ச் 31-ஆம் தேதி அன்று முஸ்லீம் மக்களின் புனித நாளான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அந்நாளன்று பல இடங்களில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக மசூதிகளில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன.
உத்தரப்பிரதேசத்தின் சஹாரன்பூரின் (Saharanpur) காந்தா கார் (Ghanta Ghar) நகரில் உள்ள மசூதியில் ரம்ஜான் நாளில் தொழுகை நடத்தப்பட்டது. தொழுகைக்குப் பின்பு முஸ்லீம் இளைஞர்கள் பாலஸ்தீனக் கொடியினையும், இந்தியக் கொடியினையும் ஏந்தியவாறு பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. உடனடியாக யோகி அரசின் அடியால் படையான போலீசு ”முஸ்லீம் இளைஞர்கள் தேசவிரோத செயலில் ஈடுபட்டுள்ளனர்” என்று கூறி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களைக அநியாயமாகக் கைது செய்துள்ளது.
இதுகுறித்து பேசிய சஹாரன்பூர் எஸ்.பி வயோம் பிண்டல், “காணொளியில் இளைஞர்கள், வெளிநாட்டுக் கொடியை அசைத்து முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்த சம்பவத்தை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேலும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
போலீசு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட இளைஞர்களைக் கைது செய்வதுடன் நிறுத்திக்கொள்ளவில்லை. முஸ்லீம் மக்களின் மீதுள்ள வெறுப்பினால் இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு முஸ்லீம் இளைஞர்களை வீடு வீடாகத் தேடிச் சென்று அராஜக முறையில் கைது செய்துள்ளது.
ஜனக் நகரில் கைது செய்யப்பட்ட இளைஞர்களின் பெற்றோர்கள் தங்கள் மகன்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றும், போலீசாரால் நியாயமின்றி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி போலிசாரின் நடவடிக்கையை விமர்சித்துள்ளனர்.
படிக்க: உத்தரப் பிரதேசம்: ஊழலில் மிதக்கும் யோகி ஆதித்யநாத் அரசு!
இதில் தொழுகையை முடித்துவிட்டு வீட்டிற்கு வந்த 40 வயதான ஃபலக்கை போலீஸ் கைது செய்துள்ளது. இந்த கைது குறித்து அவரது தாய் அக்பரி கூறுகையில், “மதியம் 2 மணியளவில்,15 முதல் 20 அதிகாரிகள் எங்கள் வீட்டிற்குள் நுழைந்தனர். அங்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டுமே இருந்தனர். நான் அவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் எங்களுடன் தவறாக நடந்து கொண்டனர். பெண் அதிகாரிகள் யாருமில்லை. அவர்களிடம் வாரண்ட் இல்லை”, என்று தெரிவித்துள்ளார். மேலும் போலீஸ் அதிகாரிகள் வீட்டிற்குள் நுழையும் சி.சி.டி.வி காட்சிகளையும் குடும்பத்தினர் மக்தூப் செய்தி ஊடகத்திடம் வழங்கியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்களில், தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 21 வயது உசைஃப்பும் ஒருவர். மகனின் கைது குறித்து தந்தை நசீம் கூறுகையில் “மதியம் 1 மணியளவில் போலீசார் வந்து அவரை எழுப்பி, வீடியோவில் காணப்படும் இளைஞர்களை அடையாளம் காட்டச் சொன்னார்கள். யாரையும் தனக்கு அடையாளம் தெரியவில்லை என்று அவர் சொன்னபோது,எந்த விளக்கமும் இல்லாமல் அவரை அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளார்.
மற்றொரு பெற்றோர் “என் மகனைக் கேட்டு போலீசார் வந்தனர். நான் அவரை அழைத்தவுடன், அவர்கள் எந்த விளக்கமும் அளிக்காமல் அவரை அழைத்துச் சென்று விட்டனர்” என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர்கள் தொடர்ந்து போலீஸ் நிலையத்திற்குச் சென்று விசாரித்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு எந்த பதிலும் தரப்படவில்லை. பின்பு மாலை வேளையில் போலீசார், இளைஞர்கள் மீது குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 151 கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி இளைஞர்களின் பெற்றோர்களை அங்கிருந்து வெளியேறும்படி கூறியுள்ளனர். ஆனால் இளைஞர்கள் மீது பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர் நகலை குடும்பத்தினரிடமோ, அவர்களது வழக்கறிஞர்களிடமோ தற்போது வரை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தரப்பிரதேச யோகி அரசு இந்துக்களின் நவராத்திரி பண்டிகைக்காக முஸ்லீம்கள் தங்கள் வீட்டின் மொட்டை மாடியில் தொழுகை நடத்துவதற்குத் தடை விதிப்பது, இறைச்சிக் கடைகளை நடத்துவதற்குத் தடை விதிப்பது என்று தொடர்ந்து முஸ்லீம் மக்கள் மீது ‘உளவியல் போரை ‘ நடத்தி வருகிறது. தற்போது முஸ்லீம்களின் ரம்ஜான் பண்டிகையன்று பாலஸ்தீனத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதற்காக முஸ்லீம் இளைஞர்களைக் கைது செய்துள்ளது. இதன் மூலம் முஸ்லீம் மக்களுக்கு அவர்களுடைய பண்டிகை நாட்களைக் கொண்டாடுவதற்கும், இன அழிப்புக்கு ஆளாகிவரும் அப்பாவி மக்களுக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கும் கூட உரிமை இல்லை என்ற நிலையை உருவாக்கியுள்ளது.
இன்குலாப்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram