உ.பி: தண்ணீர் பாட்டிலை தொட்டதற்காக விரல்கள் முறிக்கப்பட்ட தலித் மாணவர்

"பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, ​​அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?" என்று கூறி மாணவரைத் தாக்கியுள்ளார் ஆசிரியர்.

த்தரப்பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தில் உள்ள தனியார்ப் பள்ளியில் தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக தலித் மாணவர் அவரது ஆசிரியரால் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேசம் மெயின்புரி மாவட்டத்தின் ஹரிபூர் கிராமத்தில் தனியார்ப் பள்ளி அமைந்துள்ளது. அப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகின்ற 15 வயது தலித் மாணவர் கடந்த மார்ச் 29-ஆம் தேதி அன்று தாகத்தினால் மேசையிலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் குடித்துள்ளார். அதனைப் பார்த்த ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த ஆசிரியர் மாணவனை சாதிவெறியுடன் மிருகத்தனமாக அடித்துள்ளார். கொடூரமாகத் தாக்கப்பட்டதில் மாணவனின் இரண்டு விரல்களில் எலும்பு முறிவும் தோள்பட்டை, தொடை மற்றும் தாடையில் கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளன.

ஆசிரியரின் சாதிவெறி தாக்குதல் குறித்து மாணவர் கூறுகையில் “எனக்கு தாகமாக இருந்தது. ஒரு மேசையில் தண்ணீர் பாட்டிலைக் கண்டதும் அதை எடுத்தேன். நான் பாட்டிலைத் தொட்டவுடன் என் ஆசிரியர் மங்கள் சிங் ஷக்யா கோபமடைந்து, ‘பாட்டிலைத் தொட உனக்கு எவ்வளவு தைரியம்? இப்போது, ​​அது தீண்டத்தகாததாக ஆகிவிட்டது. யார் அதிலிருந்து தண்ணீர் குடிப்பார்கள்?”’ என்று மிரட்டியதாகத் தெரிவித்துள்ளார். மேலும், “பள்ளி நேரம் முடிந்த பின்னர் ஆசிரியர் என்னை ஒரு அறையில் அடைத்து வைத்து கடுமையாக அடித்தார். நான் எனது பெற்றோரிடம் தெரிவித்து விடுவேன் என்று சொன்னவுடன் ஆசிரியர் இன்னும் கடுமையாக்கத் தாக்கினார்” என்றும் தனக்கு நேர்ந்த சாதிய அவலத்தை மாணவர் எடுத்துரைத்துள்ளார்.

சாதிவெறி பிடித்த ஆசிரியரால் தாக்கப்பட்டது குறித்து கிஷ்னி போலீசு நிலையத்தில் மாணவர் புகார் அளித்துள்ளார். சாதிவெறி தலைக்கேறிய போலீசோ ஆசியர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமலிருந்துள்ளது. இதனையடுத்து ஏப்ரல் 1 அன்று மெயின்புரி போலீசு நிலையத்தில் மாணவர் புகாரளித்தார். ஆசிரியர் மீது எஸ்.சி-எஸ்.டி. சட்டத்தில் தொடர்புடைய அனைத்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தாலும் தற்போது வரை ஆசிரியரைக் கைது செய்யப்படவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.


படிக்க: இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!


மாணவர் தாக்கப்பட்டது குறித்துப் பேசிய பள்ளியின் மேலாளர் ராகேஷ் சவுகான், “சிறுவன் 2023-24 கல்வி ஆண்டிலேயே தேர்ச்சி பெற்றுவிட்டான். அவன் நற்பண்புச் சான்றிதழுக்காகப் பள்ளிக்குச் சென்றான். நான் அங்கு இல்லை. செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 1) பள்ளிக்கு வருமாறு எழுத்தர் சொன்னார். பின்னர் சிறுவன் எழுத்தரிடம் தவறாக நடந்துகொள்ளத் தொடங்கினான். மேலும் ஒரு பதிவேட்டையும் கிழித்தான். சலசலப்பைக் கேட்ட மற்ற ஊழியர்கள் தலையிட்டு நிலைமையைக் கட்டுப்படுத்தினர்” என்று பாதிக்கப்பட்ட மாணவனையே குற்றவாளியாக்கியுள்ளார்.

மேலும் “சிறுவனைச் சமாளிக்க ஆசிரியர் கொஞ்சம் பலபிரயோகம் செய்திருக்கலாம்” என்று கூறியவர் சிறுவன் தண்ணீர் பாட்டிலைத் தொட்டதற்காக ஆசிரியரால் மிருகத்தனமான முறையில் தாக்கப்பட்டதை “ஆதாரமற்றது” என்று கூறி மாணவரைத் தாக்கிய சாதிவெறிப் பிடித்த ஆசிரியரைக் காப்பாற்ற முயன்றதுடன் தனது சாதிவெறியையும் வெளிப்படுத்தியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க. அரசு தற்போதுவரை இவ்விவகாரத்தைத் தலையிட்டு நடவடிக்கை எடுக்கவில்லை. குறைந்தபட்சம் மாணவருக்கான மருத்துவச் செலவிற்கானத் தொகையைக் கூட ஏற்றுக்கொள்ளவில்லை. யோகி ஆதித்யநாத் ஆட்சியில் தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களும், இஸ்லாமிய மக்கள் மீதான காவி குண்டர்களின் தாக்குதல்களும், பெண்கள், குறிப்பாக தலித் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளும் என நாள்தோறும் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் மீது பெயரளவிற்கான நடவடிக்கையைக் கூட எடுக்காமல் சாதிவெறியர்களைப் பாதுகாத்து வருகிறது யோகி அரசு.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க