தேனி: பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி பட்டியலின மக்கள் போராட்டம்!

பலமுறை மனுக்கள் கொடுத்தபோதும் அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர், ஆக்கிரமிப்பாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓடோடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

தேனி புதிய பேருந்து நிலையம் அருகே நான்கு ஏக்கர் அளவில் பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. நிலங்களை மீட்டுத்தரக் கோரி அப்பகுதியைச் சுற்றியுள்ள பட்டியலின மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பல முறை மனுக்கள் கொடுத்துள்ளனர். ஆனால், அதிகாரிகள் அலட்சியப்படுத்தியே வந்துள்ளனர். அப்பகுதியில் பஞ்சமி நிலத்தை மீட்டெடுக்க புரட்சித் தமிழர் கட்சி, சி.பி.ஐ (எம்-எல்) ரெட்ஸ்டார், அம்பேத்கர் மக்கள் இயக்கம், ஆதித்தமிழர் பேரவை ஆகிய அமைப்பினர் கடந்த சில ஆண்டுகளாகக் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில், தேனி அல்லிநகரத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மக்கள் கடந்த ஏப்ரல் 3 அன்று புதிய பேருந்து நிலையம் அருகே ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பஞ்சமி நிலத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல்வேறு அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். ஆக்கிரமிப்பு நிலத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியைப் பிடுங்கி எரிந்துவிட்டு அங்கேயே அமர்ந்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த தேனி போலீசுதுறை, வருவாய்த்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், “இப்பகுதியில் நான்கு ஏக்கருக்கும் மேல் உள்ள பஞ்சமி நிலங்கள் சிலரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை மீட்கப் பலமுறை மனுக்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியப்படுத்தியே வருகின்றனர்” என்று அதிகாரிகளின் அலட்சியத்தை அம்பலப்படுத்தினர்.


படிக்க: ஜாகிர் உசேன் படுகொலை: களம்காணப் போகிறோமா? கடந்துசெல்லப் போகிறோமா?


இந்த நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பஞ்சமி நிலங்களை மீட்கப் பலமுறை மனுக்கள் கொடுத்தபோதும் அரசு அதிகாரிகளும் மாவட்ட ஆட்சியரும் மக்களைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால், மக்கள் போராட்டத்தில் இறங்கிய பின்னர், ஆக்கிரமிப்பாளர்களும் அரசு அதிகாரிகளும் ஓடோடி வந்து சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.

பட்டியலின மக்களுக்கு ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட பஞ்சமி நிலத்தை ஆட்சியாளர்களும் அதிகாரிகளும் கூறுபோட்டு விற்று பணம் பார்த்துக் கொழுத்து வருகின்றனர். இதுபோன்று தமிழ்நாடு முழுவதும் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் துணையோடு ஏராளமான பஞ்சமி நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிராக பட்டியலின மக்கள் பல அமைப்புகளுடன் இணைந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுப்பது, ஆர்ப்பாட்டம் செய்வது என பல வடிவங்களில் போராடி வருகின்றனர். ஆனால், இந்த நிலங்களை மீட்க முடியாமலேயே உள்ளன. களத்தில் இறங்கிப் போராடுவதைத் தவிர வேறு வழி ஒன்றுமில்லை. தேனி மக்களின் பஞ்சமி நில மீட்பு போராட்டம் வெல்லட்டும்!


குழலி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க