மீண்டும் சாம்சங் போராட்டம்: தொழிலாளர்கள் அறிவிப்பு

தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குமென சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சாம்சங் நிறுவனத்திலிருந்து 23 தொழிலாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை இரத்து செய்யக் கோரியும் இன்னபிற கோரிக்கைகளை முன்வைத்தும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் (Samsung India Workers’ Union) வேலைநிறுத்த அறிவிப்பை (Strike Notice) வெளியிட்டுள்ளது. அதன்படி, தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என்று எச்சரித்துள்ளது.

திருபெரும்புத்தூர் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில் தொழிற்சங்கத்திற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம், ஊதிய உயர்வு, எட்டு மணி நேர வேலை உள்ளிட்ட வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2024 செப்டம்பர் 9 முதலாக தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தி.மு.க. அரசும் சாம்சங் நிறுவனமும் இணைந்து தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தி போராட்டத்தை ஒடுக்குகின்ற வேலையில் இறங்கியது.

ஆனால், தொழிலாளர்களின் உறுதியான போராட்டத்திற்குப் பிறகு அரசு அதிகாரிகள், சாம்சங் நிறுவனம், தொழிலாளர்களுக்கிடையே நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக சாம்சங் நிறுவனம் ஒப்புதல் அளித்தது. இதனையடுத்து 36 நாட்கள் நீடித்த தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. இறுதியாக ஜனவரி 27-ஆம் தேதி அன்று வழங்கப்பட்ட உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் “சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம்” (SIWU) சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெற்றது.

மறுபுறம், தொழிலாளர்களுடனான  பேச்சுவார்த்தையின் போது தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்ற ஒப்புதல் அளித்த சாம்சங் நிறுவனம், பயிற்சி என்கிற பெயரில் தொழிலாளர்களை அதிக வேலை வாங்குவது; போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுக்கு வேலை வழங்க மறுப்பது; தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் புறக்கணிப்பது எனத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியது. மேலும், 23 தொழிலாளர்களுக்குக் குற்றப்பத்திரிக்கை அனுப்பி அவர்களை இடைநீக்கம் செய்தது.

இதனை எதிர்த்து இந்தாண்டு பிப்ரவரியில் மீண்டும் சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொடங்கியது. உடனடியாக அரசும் சாம்சங் நிர்வாகமும் இணைந்து இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் சேர்த்துக்கொள்வதாக உறுதியளித்தது. அதனை ஏற்றுக்கொண்ட தொழிலாளர்கள் மார்ச் 7-ஆம் தேதி அன்று போராட்டத்தை முடித்துக்கொண்டனர். ஆனால், அதன்பிறகும் சாம்சங் நிர்வாகம் 23 தொழிலாளர்களின் இடைநீக்கத்தை இரத்து செய்யாமல் தொழிலாளர்களை வஞ்சித்தது.


படிக்க: சாம்சங் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டம்


இதனையடுத்துதான் சாம்சங் தொழிலாளர்கள் தற்போது மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். ஏப்ரல் 2 அன்று சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் வாயிலாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் 23 தொழிலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள குற்றப்பத்திரிக்கையை திரும்பப்பெற வேண்டும்; உடனடியாக இடைநீக்கத்தை இரத்து செய்ய வேண்டும்; ஊதிய உயர்வு உள்ளிட்ட பொதுவான கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

மேலும், 2025-28-க்கான ஊதிய உயர்வு குறித்து பெரும்பான்மை தொழிலாளர்கள் அங்கம் வகிக்கும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்துடன் விவாதிக்காமல், சாம்சங் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட கருங்காலி-சிறுபான்மை தொழிற்சங்கமான  ‘சாம்சங் இந்தியா நல கூட்டமைப்பு’டன் (Samsung India Welfare Federation – SIWF) பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த தொழிலாளர் விரோத ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க உறுப்பினர்களுக்கு சாம்சங் நிர்வாகம் அழுத்தம் கொடுத்து வருகிறது. எனவே, இந்த ஒப்பந்தத்தை இரத்து செய்யுமாறு சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. மேலும், தொழிலாளர்களிடையே உண்மையான பெரும்பான்மை பிரதிநிதித்துவத்தை நிறுவுவதற்காக தொழிலாளர்துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென்றும் அழைப்பு விடுத்துள்ளது.

அதேபோல், சாம்சங் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட கருங்காலி தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்களுக்கு மட்டுமே கருணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. பிற தொழிலாளர்கள் கருணைத் தொகையைப் பெற வேண்டுமென்றால் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமென சாம்சங் நிறுவனம் மிரட்டி வருகிறது. எனவே, தற்போது வெளியிடப்பட்டுள்ள வேலைநிறுத்த அறிவிப்பில், 1,455 தொழிற்சங்க உறுப்பினர்களுக்கும் எந்தவித நிபந்தனையுமின்றி கருணைத் தொகையை வழங்க வேண்டுமென என்று சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மேலும், தொழிலாளர்களைப் பழிவாங்கும் நோக்கில் விஷுவல் டிஸ்ப்ளே ஆலையில் உள்ள ஊழியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தொழிற்சங்கத்திலிருந்து வெளியேறினால் மட்டுமே இத்தொழிலாளர்கள் மீண்டும் பழைய பிரிவுகளில் பணியமர்த்தப்படுவர் என சாம்சங் நிர்வாகம் மிரட்டி வருகிறது. இந்த இடமாற்றங்களை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என்றும் தொழிற்சங்கத்தில் அங்கம் வகிக்கும் தொழிலாளர்கள் மீது எடுக்கப்பட்டுவரும் பழிவாங்கும் நடவடிக்கைகள் தொழில் தகராறுகள் சட்டம், 1947-ஐ மீறும் செயல் என்றும் தொழிற்சங்கம் கண்டித்துள்ளது.


படிக்க: சாம்சங் தொழிலாளர்களுக்கு மீண்டும் துரோகம் செய்யும் திமுக அரசு!


தொழிலாளர்களின் இக்கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படாவிட்டால் 14 நாட்களுக்குப் பிறகு சாம்சங் நிறுவனத்தில் மீண்டும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்குமென சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.

முன்னதாக, சாம்சங் நிறுவனம் மற்றும் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுற்றபோது போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதென பலராலும் பேசப்பட்டது. ஆனால், அப்பேச்சுவார்த்தையில் வாக்குறுதியளிக்கப்பட்ட எந்தவொரு கோரிக்கையையும் சாம்சங் நிறுவனம் மதிக்கவில்லை. ‘திராவிட மாடல்’ தி.மு.க. அரசோ தொடக்கத்திலிருந்தே தொழிலாளர் விரோதமாகவும் கார்ப்பரேட் ஆதரவாகவுமே நடந்துகொள்கிறது. இதிலிருந்து தொழிலாளர்களின் உறுதிமிக்க தொடர் போராட்டம் மட்டுமே அவர்களின் உரிமைகளை மீட்டெடுக்கும் என்பது நிரூபணமாகியுள்ளது.

ஆகவே, சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். சாம்சங் இந்தியா தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க