அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பானது, சரண் விடுப்புத் தொகை போன்ற அவ்வப்போதைய காலச்சூழலுக்கேற்ப சில கோரிக்கைகளை இணைத்துக் கொண்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது, ஒப்பந்த ஊழியர்களை காலமுறை ஊதியத்தின் கீழ் கொண்டுவருவது, காலிப் பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட சில அடிப்படை கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம்.
கடந்த அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று நேரடியாக அரசு ஊழியர்களின் போராட்டப் பந்தலுக்கே சென்று அறிவித்து அப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 2021-ஆம் ஆண்டு தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் அரசு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர்.
ஆனால், தி.மு.க. ஆட்சிக்கு வந்து நான்காண்டுகள் ஆகியும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. இந்நிலையில், தி.மு.க. அரசைக் கண்டித்து பிப்ரவரி 25-ஆம் தேதி முதல் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பினர். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையிலும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளனர். இப்போராட்டத்தை ஒடுக்குவதற்காக தி.மு.க. அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது என்று மிரட்டல் விடுத்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் வாழ்வாதாரக் கோரிக்கைகள்
ஆசிரியர், அரசு ஊழியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவான ஜாக்டோ – ஜியோ பல்வேறு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ச்சியாகப் போராடி வருகிறது.
“புதிய ஓய்வூதியத் திட்டத்தை இரத்துச் செய்து பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும். அரசாணை எண் 243-ஐ இரத்துச் செய்ய வேண்டும்.
7-வது ஊதியக் குழுவின் பரிந்துரைப்படி 01.01.2016 முதல் ஊதியத்தை வழங்க வேண்டும். ஆனால், அரசோ அக்டோபர் 2017 முதல் கணக்கிட்டு வழங்குகிறது. பாக்கியுள்ள 21 மாத கால நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும்.
ஐந்தாயிரம் அரசுப் பள்ளிகளை மூடும், பல பள்ளிக்கூடங்களை இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும்.
அங்கன்வாடி ஊழியர்கள், நகர்ப்புற நூலகர்கள் போன்றவர்களை சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரில் மிகக் குறைவான சம்பளம் வழங்கி அரசு நியமனம் செய்துவருகிறது. இதை மாற்ற வேண்டும்.
3,500 தொடக்கப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் முடிவையும், 3,500 சத்துணவு மையங்களை மூடும் முடிவையும் அரசு கைவிட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி – யூ.கே.ஜி வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை இரத்துச் செய்ய வேண்டும்.
அரசு ஊழியர்களின் பணியிடங்களைக் குறைக்கும் அரசாணைகள் 56, 100, 101 ஆகியற்றை இரத்துச் செய்ய வேண்டும். இந்த அரசாணைகள் அரசுப் பணிகளை ஒப்பந்த முறையில் தனியாருக்கு வழங்க வித்திடுகிறது. இது, எதிர்கால வேலை வாய்ப்புகளைக் கடுமையாக பாதிக்கும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.”
மேற்காணும் இந்த கோரிக்கைகள் அடிப்படையானவையாகும்.
000
அரசு ஊழியர்களின் இப்போராட்டத்தை, அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிரான போராட்டம் என்பதாக மட்டுமில்லாமல், இதன் மற்றொரு பரிமாணத்தை நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியுள்ளது. அரசு ஊழியர்களின் காலிப்பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்த ஊழியர்களை நியமிப்பது போன்றவை அரசுத்துறைகளை டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டத்தின் முன் தயாரிப்புகளாகும். இது உழைக்கும் மக்களுக்கு அரசு வழங்கும் சேவைகளை கை கழுவ செய்யும் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையின் முக்கிய அங்கமாகும்.
மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதும்
அரசு ஊழியர்களின் போராட்டமும்
“அரசு ஊழியர்கள் முன்வைக்கும் பிரச்சினைகள் அரசுக்கும் அரசு ஊழியர்களுக்குமான பிரச்சினை. ஆனால், போராட்டம் என்ற பெயரில் சாதாரண மக்கள் பாதிப்படைகின்றனர்”; “ஆயிரக்கணக்கில் சம்பளம் வாங்குவது மட்டுமன்றி, தனியாக இலஞ்சம் வாங்கிவரும் இந்த அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்காக போராடுகின்றனர்”; “ஏற்கெனவே ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கான நிதியை ஒதுக்காத சூழலில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டால், பட்ஜெட்டில் மிகப்பெரும் பற்றாக்குறை ஏற்படும். எனவே, அரசு ஊழியர்கள் மக்கள் நலத்திட்டங்களுக்காக விட்டுக்கொடுக்க வேண்டும்” போன்ற பல்வேறு வாதங்கள் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு எதிராக முன்வைக்கப்படுகின்றன. இவை ஆளும் வர்க்க ஊடகங்களால் திட்டமிட்டே பரப்பப்பட்டு வருகின்றன.
ஆனால், அரசு ஊழியர்கள் முன்வைக்கும் இக்கோரிக்கைகள் தமிழ்நாட்டின் பெரும்பான்மை உழைக்கும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் தொடர்புடைய கோரிக்கைகளாகும். அரசு ஊழியர்களின் நியாயமான வாழ்வாதாரக் கோரிக்கைகளுமாகும்.
பணிப்பாதுகாப்பு என்பது ஒவ்வொரு உழைக்கும் மக்களுக்கும் அடிப்படை உரிமையாகும். இது, சமூகப் பாதுகாப்பு அம்சத்துடன் ஒன்றிணைந்தது. மேலும், இவ்வுரிமைகள் உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களின் போராட்டங்கள் மற்றும் உயிர்த்தியாகங்களின் மூலமாக பெறப்பட்டவையாகும். இதனை மறுப்பது என்பது பெயரளவிலான ஜனநாயக முகமூடிகளைத் தூக்கிவீசிவிட்டு, அரசாங்கமே முற்றும் முழுதாக ஒரு சுரண்டல் நிறுவனமாக மாறி நிற்பதை குறிக்கிறது.
நாட்டின் மிகப்பெரும் அளவில் ஊழியர்களைக் கொண்டுள்ள நிறுவனம் அரசுக் கட்டமைப்பாகும். தனியார் நிறுவனங்களை முறைப்படுத்துவது என்பதையும் தாண்டி முதலில் அரசானது தனது ஊழியர்களின் சமூகப் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்ய வேண்டும். ஆகையால், அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஆதரிப்பது உழைக்கும் மக்களின் கடமையாகும்.
மேலும், மருத்துவத் துறை, கல்வித் துறை, மின்சாரத் துறை, போக்குவரத்துத் துறை, வேளாண் துறை, பொதுப்பணித் துறை, ஆட்சி நிர்வாகத் துறை போன்ற அரசின் துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பாமல் இருப்பது, ஒப்பந்தப் பணியாளர்களைப் புகுத்துவது போன்றவை அரசு மக்களுக்கு வழங்கும் சேவைகளைக் கைகழுவும் சதித்திட்டத்தின் அங்கமாகும்.
வேலையின்மை, விலைவாசி ஏற்றம், சுற்றுச்சூழல் சீர்கேடுகள், நகரமயமாக்கம் போன்றவற்றால் வாழ்வாதாரத்தை இழந்து மக்கள் நெருக்கடிக்குத் தள்ளப்படும் சூழலில், மக்களுக்குச் சேவை வழங்குவதிலிருந்து அரசு விலகுவது, மக்கள் மீதான மறைமுகத் தாக்குதல்களாகும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் இத்துறைகளில் ஆதிக்கம் செலுத்துவதன் மூலம் மக்களை வேட்டையாடுவதற்கு அரசு வழிவகை செய்துக் கொடுப்பதாகும். ஆகையால், உழைக்கும் மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு அரசு ஊழியர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியமானதாகும்.
டிஜிட்டல்மயமாக்கம் எனும் பேரழிவு!
இவை மட்டுமல்ல, அரசின் சேவைத் துறைகள் அனைத்தும் தனியார்மயமாக்கப்படுவது மட்டுமின்றி, அதன் பின்னே டிஜிட்டல்மயமாக்கம் என்ற சதியும் அடங்கியுள்ளது.
அதாவது, அரசுத் துறைகளில் நடக்கும் இந்த தனியார்மயமாக்கம், ஊழியர்களுக்கு உரிமைகளற்ற நிலைமை, ஒப்பந்தப் பணி முறை திணிப்பு, காலிப் பணியிடங்களை நிரப்பாமல் செய்யப்படும் அறிவிக்கப்படாத ஆட்குறைப்பு போன்றவை டிஜிட்டல்மயமாக்கம் என்ற பேரபாயத்தின் தயாரிப்புகள் என்பதுதான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான அம்சமாகும்.
கடந்த 2023-ஆம் ஆண்டு தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் தமிழ்நாடு டிஜிட்டல்மயமாக்கல் வியூகம் (Tamil Nadu Digital Transformating Strategy – DiTN) ஆவணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அதைப்பற்றிய தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பில், “2021-22 ஆம் ஆண்டுக்கான தகவல் தொழில்நுட்பவியல் துறை மானியக் கோரிக்கையில், விரைவான, கண்காணிக்கக்கூடிய, அணுகக்கூடிய மற்றும் பதிலளிக்கும் வகையிலமைந்த, வெளிப்படையான நிர்வாகத்தை குடிமக்களுக்கு வழங்குவதை நோக்கமாகக் கொண்டு, மின்னாளுகையைப் படிப்படியாக அரசின் அனைத்து மட்டங்களிலும் புகுத்தி, அதன் மூலம் முழுமையானதொரு அரசாங்கத்தை எய்திடும் வகையில் “டிஜிட்டல் தமிழ்நாடு திட்டம்” செயல்படுத்தப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான், அரசின் டிஜிட்டல்மயமாக்கும் சதித்திட்டமாகும்.
குறிப்பாக, கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, ஒன்றிய அரசும், மாநில அரசும் அரசுத் துறைகளில் டிஜிட்டல் மயமாக்கத்தைத் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகின்றன. மருத்துவம், கல்வி, விவசாயம் போன்ற அரசின் முக்கிய சேவைத் துறைகள் ஆன்லைன்மயமாக்கப்பட்டு வருகின்றன. நீதித்துறை, போலீசு, ஆட்சி நிர்வாகம் போன்றவையும் வேகமாக டிஜிட்டல்மயமாக்கப்படுகின்றன.
ஒட்டுமொத்த அரசாங்கமும் ஒரு கால் செண்டர் போல இயங்குவதை நோக்கி அரசின் டிஜிட்டல்மயமாக்கத் திட்டம் அமைந்துள்ளது. இத்துடன், எல்.ஐ.சி., வங்கித்துறை போன்ற நிதிச் சேவைகள் மற்றும் வணிகங்கள் பெருமளவு டிஜிட்டல்மயமாக்கப்பட்டுவிட்டன.
சாதாரணமாக, கடைகளில் சில்லறை கொடுத்துப் பெறுவது சிக்கலாக இருப்பதால் “ஜி பே” செய்வது இன்று எளிதாகத் தெரிகிறது. இந்த அனுபவத்தில் இருந்து டிஜிட்டல்மயமாக்கம் நல்லது என்ற பாமரத்தனம் மக்களிடம் அதிகரித்துள்ளது. மேலும், டிஜிட்டல்மயமாக்கம் அறிவியல் வளர்ச்சி, அதனை எதிர்க்கக் கூடாது என்ற கருத்தும் பொதுக்கருத்தாக நிலவுகிறது.
உண்மையில், டிஜிட்டல்மயமாக்கம் என்ற பெயரில் உழைக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதையும், கார்ப்பரேட் சுரண்டலைத் தீவிரப்படுத்துவதையும், அரசு ஊழியர்களின் உரிமைகள் பறிப்பதையும் எதிர்க்க வேண்டும்.
ஏனெனில், தற்போது ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ளும் டிஜிட்டல்மயமாக்கத்தின் அடிப்படையே “பள்ளியில்லா கல்வி”, “அலுவலகம் இல்லா அரசு நிர்வாகம் – ஊழியர்கள் இல்லாத பணி முறை” போன்றவையாகும்.
மேலும், மக்கள் அனைவரும் ஒவ்வொரு நிமிடமும் கண்காணிப்புக்கு உள்ளாக்கப்படுவதும் அரங்கேறும். மக்களின் வங்கிக் கணக்குகள், ஆதார், பான்கார்டு போன்ற அனைத்துத் தரவுகளை இணைப்பதன் மூலமும், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிப்பதன் மூலமும் அனைவரையும் கண்காணிப்பது, வருமான வரி விதிப்புக்குள் அனைவரையும் கொண்டுவருவதும் நடக்கிறது. ஏற்கெனவே ஆதார் மூலமாக மக்களின் அடிப்படை தரவுகள் கார்ப்பரேட் கம்பெனிகளால் கொள்ளையடிக்கப்பட்டதை நாம் அறிவோம்.
அதேபோல், பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளன. இந்த டிஜிட்டமயமாக்கத்தின் விளைவாக, சைபர் குற்றங்கள் எனப்படும் இணையக் குற்றங்கள் புதிய இயல்புநிலையாகியுள்ளன. மக்களின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைக் கொள்ளையடிக்கும் குற்றங்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்கள் மக்களின் வங்கிக் கணக்குக்கேற்ப விளம்பரங்களை அனுப்பியும் பல்வேறு ஆசைகளைக் காட்டியும் கொள்ளையடிக்கின்றன.
மாற்றுக் கொள்கையும் மக்கள் போராட்டங்களுமே தீர்வு!
இவ்வாறு, அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் உரிமைகள் பறிக்கப்படும் இன்றைய நிலைமையை தனிப்பட்ட ஒரு பிரிவினரின் உரிமைப் பறிப்பாக மட்டுமின்றி, அரசுத் துறைகள் டிஜிட்டல்மயமாக்கும் பேராபத்தின் அங்கமாகப் பார்க்கப்பட வேண்டும். இதிலிருந்து உரிமைகளை மீட்டெடுப்பதற்கான கண்ணோட்டம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.
மேலும், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு முன்வைக்கும் கோரிக்கைகளை கடந்த அ.தி.மு.க. அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக பெயரளவிற்குக் கூட, எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இக்கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.
ஆகையால், தற்போது தி.மு.க. அரசை நிர்பந்தித்து இக்கோரிக்கைகளை நிறைவேற்ற வைக்கவில்லை என்றால், அடுத்து வர இருக்கும் அரசாங்கம் எதுவாக இருந்தாலும், இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றப் போவதில்லை என்றே நிலவரங்கள் நமக்கு உணர்த்துகின்றன.
அதேவேளையில், தேர்தல் ஆதாயத்திற்காக சில கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அந்த உரிமைகள் நீடிப்பதற்கான அடிப்படைகள் தகர்க்கப்படுவது தவிர்க்க இயலாதது. ஏனெனில், 1950-களில் உருவாக்கப்பட்ட “மக்கள் நல அரசு” என்ற கோட்பாட்டின் அடிப்படையில்தான், உழைக்கும் மக்களின் உரிமைகள் போராடிப் பெறுவதற்கான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.
ஆனால், 1990-களில் புகுத்தப்பட்ட தனியார்மயம் – தாராளமயம் – உலகமயக் கொள்கையானது, “நிர்வாக சீரமைப்பு”, “எளிமையான அரசாங்கம்” போன்ற பெயர்களில் பல்வேறு கட்டங்களாக அரசுக் கட்டமைப்பில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. தற்போது அரசுக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படும், டிஜிட்டல்மயமாக்கும் மறுகட்டமைப்பு நடவடிக்கை என்பது, “அலுவலகங்கள் இல்லாத, அரசு நிர்வாகம்”, “ஊழியர்கள் இல்லாத பணி முறை” என்ற அறிவிக்கப்படாத கொள்கையைப் பின்பற்றுவதால், இவை, அரசு ஊழியர்களின் தற்போதைய கோரிக்கைகளை, அதன் இயல்பிலேயே காலாவதியாக்கி விடுகிறது.
இதுதான், தங்களது கொள்கை என்று வெளிப்படையாக அறிவிக்காமல், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதைப் போன்ற தோற்றத்தைத் தக்கவைத்துக் கொண்டே, நயவஞ்சகமாக தங்களது டிஜிட்டல்மயமாக்க மக்கள் விரோத நடவடிக்கையை மேற்கொள்வதுதான், ஆளும் வர்க்கத்தின் மூல உத்தி.
இந்த மூல உத்தியை அம்பலப்படுத்தித் தகர்த்தெறிய வேண்டுமெனில், அதற்கான மாற்றுக் கொள்கை முன்வைக்கப்பட வேண்டும். அதனை நிறைவேற்றுவதற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டமைப்பதன் மூலமாகவே, அரசு ஊழியர்களுக்கான நியாயமான உரிமைகளை உறுதிப்படுத்த முடியும்.
நீலன்
(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram