நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!

குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

“ஆர்.எஸ்.எஸ். பாவத்தின் குழந்தை, அது வன்முறை எனும் பாவம். நாக்பூரில் நடந்த கலவரம்தான் ஹெட்கேவர் ஆர்.எஸ்.எஸ்-யைத் தோற்றுவிக்கத் தூண்டுதலாக இருந்ததென அமைப்பின் ‘வரலாற்றியலாளர்கள்’ கூறத் தவறுவதே இல்லை”.

  • ஏ.ஜி.நூரானி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு ஓர் அச்சுறுத்தல்” புத்தகத்திலிருந்து

ன்முறையில் பிறந்து, வன்முறையினாலேயே வளர்ந்த ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பல் இன்று இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிக்கொண்டு நாட்டையே சூறையாடி வருகிறது. 1925-இல் தொடங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இன்று அதன் நூற்றாண்டை எட்டியிருக்கும் நிலையில், தனது இந்துராஷ்டிரக் கனவை நனவாக்கத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. தலைமையில் ஆட்சியமைந்து நான்கு மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் அமைந்துள்ள நாக்பூரில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது சங்கப் பரிவார கும்பல்.

மகாராஷ்டிராவின் நாக்பூரில் சத்ரபதி சம்பாஜி நகரில் (முன்பு ஔரங்கபாத்) உள்ள குல்தாபாத்தில் முகலாய பேரரசர் ஔரங்கசீப்பின் கல்லறை அமைந்துள்ளது. இதனை இடித்து அகற்ற வேண்டுமென ஆர்.எஸ்.எஸ்-இன் குண்டர் படைகள் நீண்ட காலமாக இந்துமதவெறி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், ஔரங்கசீப்பிற்கு எதிராக வெறுப்பு பிரச்சாரம் செய்வதன் மூலம் அங்குள்ள மக்களிடையே இஸ்லாமிய வெறுப்பையும் விதைத்து வருகின்றன.

இந்த வெறுப்பு பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தும் விதமாகக் கடந்த பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி “சாவா” என்ற இந்துமதவெறி-இஸ்லாமிய வெறுப்பு திரைப்படம் ஒன்று வெளியானது. இத்திரைப்படத்தில் முகலாய மன்னர் ஔரங்கசீப், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் மகனான சம்பாஜியை கொடூரமாகக் கொல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஔரங்கசீப்பிற்கும் மராத்திய மன்னர்களுக்கும் அதிகாரத்திற்காக நடந்த போட்டியைக் கட்டாய மதமாற்றம் என்ற பெயரில் இஸ்லாமிய-இந்து பகையாக சித்தரித்து மதவெறியைத் தூண்டும் விதமாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தைப் பார்த்த சிலர் இஸ்லாமியர்களைத் தாக்கியது, படத்தைப் பார்த்த பள்ளி மாணவர்கள் “சம்பாஜிக்காக பழிவாங்குவோம்” என்று உறுதிமொழியேற்றது போன்றவை மகாராஷ்டிராவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்தன.

சாவா திரைப்படத்தின் மூலம் கிளறிவிடப்பட்ட இஸ்லாமிய வெறுப்பை அறுவடை செய்யும் விதமாக சங்கப் பரிவாரக் குண்டர்கள் வெறுப்பு பிரச்சாரங்களில் இறங்கினர். ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும் என்ற பிரச்சாரத்தை விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்ளிட்ட காவிக் குண்டர் படைகள் தீவிரப்படுத்தின. “அயோத்தியில் பாபர் மசூதியை இடித்ததைப் போல நாக்பூரில் ஔரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம்” என்று வெளிப்படையாக மிரட்டல் விடுத்தன. “எல்லோரும் ஔரங்கசீப் கல்லறையை இடிக்க விரும்புகிறார்கள், அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்ததன் மூலம் மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு கலவரத்தைக் கட்டவிழ்த்துவிட ஆயத்தமாகிவிட்டது என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆளும் பா.ஜ.க. அமைச்சர்கள் வெறுப்பு பிரச்சாரத்தில் நேரடியாக ஈடுபட்டதன் மூலம் ஔரங்கசீப் கல்லறை விவகாரத்தை மகாராஷ்டிரா முழுவதும் விவாதப்பொருளாக்கினர்.

இதனையடுத்து கடந்த மார்ச் 17-ஆம் தேதி, ஔரங்கசீப் கல்லறையை அகற்ற வலியுறுத்தி சங்கப் பரிவார அமைப்புகள் மாநிலம் தழுவிய அளவில் போராட்டம் நடத்தின. நாக்பூரின் மகால் பகுதியில் நடந்த போராட்டத்தில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆன் எரிக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பி இஸ்லாமிய மக்களை ஆத்திரமூட்டி திட்டமிட்டபடி வன்முறையைத் தொடங்கியது காவிக் கும்பல். நாக்பூரின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது காவி குண்டர்கள் தாக்குதல் தொடுக்க ஆரம்பித்தனர்; இரண்டு ஜே.சி.பி. வாகனங்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன; பல வீடுகளின் கதவுகள், ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன; இஸ்லாமியர் ஒருவர் காவிக் கும்பலால் அநியாயமாகப் படுகொலை செய்யப்பட்டார்.

மார்ச் 17 அன்று காலை தொடங்கி நள்ளிரவு வரையிலும் ஆர்.எஸ்.எஸ். குண்டர்களைக் கலவரம் செய்ய அனுமதித்துவிட்டு, கைக்கட்டி வேடிக்கை பார்த்தது பா.ஜ.க. அரசு. இக்கலவரத்தால் இஸ்லாமிய மக்கள் மட்டுமின்றி இந்து மக்களும் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர்.

ஒருபுறம் காவிக் குண்டர்கள் மூலம் இஸ்லாமியர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட பாசிச கும்பல், மற்றொருபுறம் தன்னுடைய அதிகார பலத்தின் மூலம் அரச பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டது.

“அட்டாரோலில் மாலை தொழுகைக்குப் பிறகு சுமார் 200-250 பேர் கொண்ட கும்பல் ஒன்றுகூடி கோஷங்களை எழுப்பத் தொடங்கியது” என்று கூறி பாதிக்கப்பட்ட இஸ்லாமிய மக்களையே கலவரத்திற்குப் பொறுப்பாக்கினார் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ். இதன்பிறகு, மகாராஷ்டிரா போலீசு இஸ்லாமியர்களை வேட்டையாடத் தொடங்கியது.

மார்ச் 22 நிலவரப்படி, கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி 10 சிறுவர்கள் உட்பட 105 பேரைக் கைது செய்துள்ளது மகாராஷ்டிரா பா.ஜ.க. அரசு, இவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்களே ஆவர். கலவரத்திலிருந்து தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீட்டிற்குள் அடைந்திருந்த இஸ்லாமிய இளைஞர்களைக் கூட கைது செய்தது மகாராஷ்டிரா போலீசு. கலவரத்திற்குக் காரணமான முக்கியக் குற்றவாளி எனக் கூறி சிறுபான்மை ஜனநாயகக் கட்சியின் உள்ளூர் தலைவரான பாஹீம் கானை கைது செய்து அவர் மீது தேசத் துரோக வழக்கை பாய்ச்சியுள்ளது.

மேலும், கலவரத்தின் போது ஏற்பட்ட சொத்து சேதங்களுக்கான உரிய இழப்பீட்டைக் ‘கலவரக்காரர்களிடமிருந்து’ வசூலிக்கிறோம் என்று கூறி இஸ்லாமிய மக்கள் மீது புல்டோசர் பயங்கரவாதத்தை ஏவியது. மார்ச் 24-ஆம் தேதி கைது செய்யப்பட்ட இஸ்லாமியத் தலைவர் பாஹீம் கானின் வீட்டை புல்டோசர் மூலம் இடித்துத் தள்ளியுள்ளது.

ஒருபுறம் இஸ்லாமிய மக்களை வேட்டையாடிக்கொண்டே இந்துமதவெறி அமைப்புகளைச் சேர்ந்த குண்டர்கள் மீது  நடவடிக்கை எடுப்பதாகவும் அவர்கள் தானாக முன்வந்து சரணடைந்திருப்பதாகவும் நாடகமாடிக் கொண்டிருக்கிறது மகாராஷ்டிரா அரசு. ஆனால், கலவரத்தைத் தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்களில் கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறி இஸ்லாமியர்களைக் கைது செய்யும் மகாராஷ்டிரா அரசு, “1989-இல் பாகல்பூரில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்து காலிபிளவர் வயல்களில் புதைத்ததைப் போல, தற்போதும் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்ய வேண்டும்” என வெறுப்பைக் கக்கும் இந்துமதவெறிக் குண்டர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அக்கருத்துகளை சமூக வலைத்தளங்களில் இருந்து கூட நீக்காமல் இந்து மதவெறியர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறது.

தற்போது இக்கலவரம் தனிந்திருந்தாலும், “ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்ற வேண்டும்” என்ற பிரச்சாரத்தை நிகழ்ச்சிநிரலிலேயே வைத்துள்ளது காவிக் கும்பல். இதன்மூலம் மகாராஷ்டிராவில் மிகப்பெரிய கலவரத்தை உருவாக்கி இஸ்லாமிய மக்களை இந்து மக்களின் எதிரிகளாக்கி, பெரும்பான்மை இந்து மக்களை தங்கள் பின்னால் திரட்டிக்கொள்ளத் துடிக்கிறது.

இவ்வாறு மகாராஷ்டிராவில் பாசிஸ்டுகள் தங்களது அடித்தளத்தை விரிவுபடுத்திக்கொள்ளத் துடிப்பதற்குப் பின்னால், குஜராத், உத்தரப்பிரதேசம் போல மகாராஷ்டிராவையும் இந்துராஷ்டிரத்திற்கான ஒரு வகைமாதிரியாக மாற்ற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலின் சதித்திட்டம் ஒளிந்துள்ளது. மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சிகள் பலவீனமாகவும் இந்துத்துவத்தினுள் கரைந்து போனவர்களாகவும் இருக்கும் இச்சூழலை அதற்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது.

ஏனென்றால் இந்திய நாட்டின் பொருளாதாரத்தில் மகாராஷ்டிரா மாநிலம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க. ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக அம்மாநில கட்சிகளினுடன் அதானியே நேரடியாகப் பேரம் பேசியது அம்மாநில வளங்களைச் சூறையாடுவதற்கான அதானி-அம்பானி கும்பலின் வெறியைக் காட்டுகிறது. எனவே, குஜராத், உத்தரப்பிரதேசம் போன்று மகாராஷ்டிராவிலும் இந்துமுனைவாக்கத்தைத் தீவிரமாக்குவதன் மூலம் தொடர்ச்சியாக ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்று திட்டமிடுகிறது பாசிச கும்பல்.

மறுபுறத்தில், மகாராஷ்டிராவில் இஸ்லாமியர்கள் மீதான கலவரங்களை நடத்துவதன் மூலம் மோடிக்கு அடுத்து பா.ஜ.க-வின் முகமாக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸை முன்னிறுத்தும் திட்டம் ஆர்.எஸ்.எஸ்-யிடம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 2002 குஜராத் இனப்படுகொலை மோடிக்கு மைல்கல்லாக அமைந்தது போல, நாக்பூர் கலவரம் தேவேந்திர பட்னாவிஸ்க்கு மைல்கல்லாக அமைய வாய்ப்பிருக்கிறது என்று முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதுகின்றன. இந்நிலையில், மோடி பிரதமரான பிறகு இந்த 11 ஆண்டுகளில் முதன்முறையாக, கடந்த மார்ச் 30 அன்று நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்திற்கு சென்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தை சந்தித்தது விவாத பொருளாகியிருக்கிறது. இது ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க-விற்கு இடையிலான முரண்பாட்டில் ஆர்.எஸ்.எஸ்-இன் கை மேலோங்கி இருப்பதைக் காட்டுகிறது.

அதேசமயம், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மை பெற முடியாமல் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டது. மோடிக் கும்பலுக்கு ஏற்பட்ட இந்நெருக்கடியை, மோடி அரசு பணிந்துவிட்டது என்று எதிர்க்கட்சிகள் சித்தரித்தன. ஆனால், பாசிச கும்பல் அடுத்தடுத்து தன்னுடைய பாசிசத் திட்டங்களைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.

மகாராஷ்டிரா மட்டுமின்றி, உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, உத்தராக்கண்ட், மேற்குவங்கம் என ஒவ்வொரு மாநிலத்திலும் ஹோலி, நவராத்திரி, ராமநவமி உள்ளிட்ட இந்து பண்டிகைகளைப் பயன்படுத்தி கலவரம் செய்யும் திட்டத்தில் மூர்க்கமாகச் செயல்பட்டு வருகிறது பாசிச கும்பல். குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். அதன் நூற்றாண்டை எட்டியிருக்கும் வேளையில், இந்தியா முழுவதும் பல இடங்களில் வன்முறை வெறியாட்டங்களை கட்டவிழ்த்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. நாக்பூர் கலவரத்தை அதற்கான எச்சரிக்கையாகவும் பார்க்க வேண்டியுள்ளது.


தலையங்கம்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க