பி.எம். ஸ்ரீ திட்டம்: தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை

ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.

டந்த ஒருமாத காலமாக இரு மொழிக்கொள்கை எதிர் மும்மொழிக்கொள்கை விவாதம் தேசியளவில் பேசுபொருளாகியிருக்கிறது. காரணம், இதுநாள் வரையிலும் தமிழ்நாட்டிற்கு கொடுக்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வை சரிவர பகிர்ந்தளிக்காமல் வஞ்சித்துவந்த பாசிச மோடி அரசானது, தற்போது பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொண்டால்தான் கல்விக்கான நிதியைத் தரமுடியும் என்று அடாவடித்தனம் செய்துவருகிறது. மோடி அரசின் பாசிச சர்வாதிகாரப் போக்கு தமிழ்நாட்டில் கடும் கண்டனத்துக்குள்ளாகி வருகிறது. மாநிலங்களுக்கான நிதியை நிறுத்துவது ஏற்புடையதல்ல என நாடாளுமன்ற நிலைக்குழுவே தெரிவித்தாலும் தற்போதுவரை நிதியை விடுவிக்காமல் துளியும் இரக்கமின்றி தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியுடன் விளையாடிவருகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலை

பி.எம். ஸ்ரீ திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டு பள்ளிகளின் கல்வித்தரம், உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுவதை தி.மு.க. அரசு தடுப்பதாக பா.ஜ.க. கும்பல் கதையளந்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், பி.எம். ஸ்ரீ (PMSRI – Pradhan Manthri Schools for Rising India) திட்டமென்பது இந்தியா முழுவதுமுள்ள அரசுப்பள்ளிகளை காவி-கார்ப்பரேட்மயமாக்கும் பாசிச கெடுநோக்கத்துடன் மோடி அரசால் கொண்டுவரப்பட்ட திட்டம் என்பதே உண்மையாகும். ஏற்கெனவே, கட்டடங்கள், கல்விக் கருவிகள், நவீன வசதிகள், விளையாட்டு மைதானம், தேர்ச்சி விகிதம், ஆசிரியர்-மாணவர்கள் எண்ணிக்கை என உள்கட்டமைப்பிலும் கற்பித்தலிலும் சிறந்து விளங்குகின்ற மாநில அரசுகளின் பள்ளிகளை, ஒன்றிய அரசு அபகரித்து அவற்றை “பி.எம். ஸ்ரீ பள்ளியாக” அறிவிக்கும். ஒன்றியத்திற்கு ஒரு தொடக்கப்பள்ளி மற்றும் ஒரு உயர்நிலை/மேல்நிலைப்பள்ளி என்ற வகையில் இப்பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்படும். இவ்வாறு இந்தியா முழுவதும் 14,500 பி.எம். ஸ்ரீ பள்ளிகளை நிறுவுவதென்பது இத்திட்டத்தின் இலக்காகும்.

இப்பள்ளிகளுக்கான நிதியில் 60 சதவிகிதத்தை ஒன்றிய அரசு வழங்கும், மீதமுள்ள 40 சதவிகிதத்தை மாநில அரசு வழங்க வேண்டும். “அருமைப் பள்ளி” (School of Excellence) என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கை 2020-இல் உள்ள அனைத்து அம்சங்களும் இப்பள்ளிகளில் அமல்படுத்தப்படும். இப்பள்ளிகளை முற்றிலுமாக காவி-கார்ப்பரேட்மயமாக்கிவிட்டு, ஐந்தாண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளை மீண்டும் மாநில அரசுகளின் வசம் ஒப்படைத்துவிட்டு ஒன்றிய அரசு விலகிக்கொள்ளும். இதுதான் பி.எம். ஸ்ரீ திட்டத்தின் சாரமாகும்.

தமிழ்நாட்டிற்கு நிதி தர முடியாது என அடாவடித்தனமாக பேசி வரும் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான்.

சான்றாக, 1 முதல் 5-ஆம் வகுப்பு வரையிலான தொடக்கக்கல்வி, 6 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான இடைநிலைக் கல்வி, 9, 10 வகுப்புகளுக்கான உயர்நிலைக்கல்வி, 11,12 வகுப்புகளுக்கான மேல்நிலைக் கல்வி என 5+3+2+2 என்ற பள்ளிக்கல்வி முறை தமிழ்நாட்டில் பின்பற்றப்படுகிறது. ஆனால், பாசிச மோடி அரசோ 5+3+3+4 என்ற வகைப்பாட்டை பள்ளிக்கல்வியில் அமல்படுத்துவதன் மூலம் முன் மழலை வகுப்பு (Pre KG), கீழ் மழலை வகுப்பு (LKG), மேல் மழலை வகுப்பு (UKG) ஆகிய வகுப்புகளை கட்டாயமாக்குகிறது.

இதன்மூலம் குழந்தைகளின் மழலைத்தனத்தில் வன்முறை செலுத்துவது மட்டுமின்றி, பிஞ்சு வயதிலேயே அவர்களின் மூளையில் புராணக் குப்பைகள் திணிக்கப்படும். ஐந்தாம் வகுப்பு வரையிலும் தாய்மொழி வழிக்கல்வி இருக்கும், மொழிப்பாடமாக ஆங்கிலம் அல்லது இந்தி கற்பிக்கப்படும் என்று இத்திட்டத்தில் சொல்லப்பட்டாலும் 6-ஆம் வகுப்பிலிருந்து இந்தி கட்டாய மொழிப்பாடமாகவும், எட்டாம் வகுப்பிற்குப் பிறகு சமஸ்கிருதம் கட்டாயப் பாடமாகவும் ஆக்கப்படும். மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தியும் சமஸ்கிருதமும் திணிக்கப்படும்.

3 முதல் 5-ஆம் வகுப்பு வரை மாவட்ட அளவிலான பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறாதவர்கள் பழைய வகுப்பிலேயே வடிகட்டப்படுவர். இத்தகைய பொதுத்தேர்வுகள் மூலம் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரிப்பதுடன் 8-ஆம் வகுப்பிலிருந்து தொழிற்கல்வியை வழங்குவது என்ற பெயரில் அவர்கள் மீண்டும் குலத்தொழிலுக்கு தள்ளப்படுவர். 14 வயதுக்கு மேல் குழந்தைகள் தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லலாம் என குழந்தைத் தொழிலாளர் சட்டத்தில் மோடி அரசு திருத்தம் மேற்கொண்டிருப்பதை இதனுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். இதனால், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கற்கும் உரிமை கேள்விக்குறியாகும்.

மொத்தத்தில், மாநில அரசுகளின் வசமுள்ள பள்ளிகள் ஒன்றிய அரசால் அபகரிக்கப்பட்டு, அவை தேசிய கல்விக் கொள்கையின் சோதனைச்சாலையாக மாற்றப்பட்டு, மாநில அரசுகளிடமே மீண்டும் திணிக்கப்படும். இப்பள்ளிகளின் சுற்றுவட்டாரத்தில் உள்ள பள்ளிகளையும் பி.எம். ஸ்ரீ பள்ளிகளாக மாற்றும் திட்டத்தையும் மோடி அரசு முன்வைத்துள்ளது.

மறுபுறம், பி.எம். ஸ்ரீ பள்ளிகளை ‘மாதிரி’ பள்ளிகளாக மாற்றுவது என்ற பெயரில் சுற்றுவட்டாரத்திலுள்ள பிற பள்ளிகள் அரசால் கவனம்செலுத்தப்படாமல் கைவிடப்படும் சூழல் உருவாகும். இதன்காரணமாக அப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதை காரணம்காட்டி அப்பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்தப்படும் மிகப்பெரிய சதித்திட்டமும் இத்திட்டத்தில் ஒளிந்துள்ளது. மறுபுறம், இத்திட்டத்தின் கீழ் செயல்படும் பி.எம். ஸ்ரீ பள்ளிகள் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிடப்படும். இவ்வாறு ஒட்டுமொத்த அரசுப் பள்ளி கட்டமைப்பையே ஒழித்துக்கட்டி காவி-கார்ப்பரேட் கும்பலுக்கு படையலிடுவதற்கேற்பவே மோடி அரசு இப்பாசிச திட்டத்தை வடிவமைத்துள்ளது.

முடக்கப்படும் நிதியும் பணியவைக்கப்படும் மாநிலங்களும்

2022-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பி.எம். ஸ்ரீ திட்டத்தை அறிமுகப்படுத்திய மோடி அரசு, இத்திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு அனைத்து மாநில அரசுகளையும் நிர்பந்தித்தது. பெரும்பான்மையான மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இதில் கையெழுத்திட்ட நிலையில், தமிழ்நாடு, கேரளா, ஒடிசா, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்கள் வெவ்வேறு காரணங்களை முன்வைத்து கையெழுத்திடாமல் தவிர்த்தன. ஆனால், மோடி அரசோ இத்திட்டத்தை ஏற்றால்தான் பள்ளிக்கல்விக்கான நிதி கிடைக்கும் என சர்வாதிகாரப் போக்குடன் நடந்துக்கொண்டது.

2024-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழ்நாடு, கேரளா, ஒடிசா ஆகிய மாநில அரசுகள் பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்துவதற்கான தங்களது விருப்பத்தையும் அதற்கான நிபந்தனைகளையும் தெரிவித்து ஒன்றிய கல்வித்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதின. இதனையடுத்து 2024 ஜூலை மாதத்தில் பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றுக்கொள்ளாத டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களுக்கு “சமக்ர சிக்‌ஷா அபியான்”(National Education Mission) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பள்ளிக்கல்விக்கான நிதியை எதேச்சதிகாரமாக முடக்கியது மோடி அரசு. நிதி நெருக்கடி தாளாமல் டெல்லி, பஞ்சாப் ஆகிய இரு மாநில அரசுகளும் இத்திட்டத்தை ஏற்றுக்கொண்ட நிலையில் அம்மாநிலங்களுக்கான நிதியை மட்டும் விடுவித்துவிட்டு மேற்குவங்கத்திற்கான ஆயிரம் கோடி ரூபாய் நிதியை முடக்கியது.

அதேபோல், தொடர் அழுத்தத்திற்குப் பிறகும் தமிழ்நாடு, கேரள அரசுகள் பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கான 2,152 கோடி ரூபாயையும் கேரளாவிற்கான 859 கோடி ரூபாயையும் முடக்கியது.

இதனால் தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களின் பள்ளிக்கல்வித்துறை நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றன. இதனால், ஆசிரியர்களுக்கான சம்பளம் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பும், மாணவர்களின் கல்வி பாதிப்படையும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் உள்ள புரட்சிகர-ஜனநாயக சக்திகளும் ஆசிரியர் சங்கங்களும் போராடி வருகின்றனர்.

பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான நிதி தவிர்த்து சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள மீதத் தொகையையேனும் விடுவிக்குமாறு தி.மு.க. அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், பி.எம். ஸ்ரீ திட்டத்தை ஏற்றால் மட்டுமே சமக்ர சிக்‌ஷா அபியான் நிதியை விடுவிக்க முடியும் என்று பாசிச திமிருடன் நடந்துகொள்கிறது மோடி அரசு. மேலும், தமிழ்நாட்டிற்கான 2,500 கோடி ரூபாய் நிதி முடக்கப்பட்டிருக்கும் நிலையில், பி.எம். ஸ்ரீ திட்டத்தை அமல்படுத்தாததால் தமிழ்நாடு 5,000 கோடி ரூபாய் நிதியை இழக்கிறது என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியிருப்பதன் மூலம் அடுத்தக் கல்வியாண்டிற்கான நிதியையும் வழங்க முடியாது என மிரட்டல் விடுக்கிறது மோடி அரசு.

தி.மு.க. அரசின் வரம்புக்குட்பட்ட எதிர்ப்பும் சந்தர்ப்பவாதமும்

பி.எம். ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதாக தி.மு.க. அரசு தெரிவித்தாலும் அத்திட்டத்தின் ஒரு அங்கமாக இருக்கக்கூடிய மும்மொழிக் கொள்கையையும் இந்தி-சமஸ்கிருதத் திணிப்பையும் மட்டுமே தி.மு.க. அரசு எதிர்க்கிறது. ஆனால், கல்வியை காவி-கார்ப்பரேட்மயமாக்கி அரசு பள்ளிக் கட்டமைப்பையே ஒழித்துக்கட்டக்கூடிய இத்திட்டத்தின் பிற அம்சங்கள் குறித்தெல்லாம் தி.மு.க. அரசு வாய்திறப்பதில்லை.

மேலும், 2024 மார்ச் மாதத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு தமிழ்நாடு அரசு எழுதிய கடிதத்தில், பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆர்வமாக இருப்பதாகவும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு கையெழுத்திடும் என்று தெரிவித்திருந்தது தி.மு.க. அரசின் சந்தர்ப்பவாதத்தை தோலுரித்துக் காட்டுகிறது.

மேலும், பி.எம். ஸ்ரீ திட்டத்திலிருந்து “பி.எம்.” (பிரதான் மந்திரி) என்ற முன்னொட்டை நீக்கி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை திருத்துமாறு ஒன்றிய அரசிற்கு தி.மு.க. அரசு முன்மொழிந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது பி.எம். ஸ்ரீ திட்டத்தை திருட்டுத்தனமாக தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த தி.மு.க. அரசு முயன்றதா? என்ற சந்தேகத்தை வலுவாக எழுப்புகிறது.

மற்றொருபுறம், தேசிய கல்விக் கொள்கையை காரணம்காட்டி பி.எம். ஸ்ரீ திட்டத்தை எதிர்ப்பதாக கூறும் தி.மு.க. அரசு பள்ளிக்கல்வித்துறையில் தேசிய கல்விக் கொள்கையின் ஊற்றுக்கண்ணாக இருக்கும் சமக்ர சிக்‌ஷா அபியான் (Samagra Shiksha Abhiyan) திட்டம் குறித்து மூச்சு கூட விடுவதில்லை.

சமக்ர சிக்‌ஷா அபியான் என்பது ஆசிரியர்களுக்கான சம்பளம், உள்கட்டமைப்பு வசதிகள் என பள்ளிக்கல்வித் திட்டங்களுக்குரிய அனைத்து நிதியையும் வழங்குவதற்கான ஒன்றிய அரசின் திட்டமாகும். காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட அனைவருக்கும் கல்வி திட்டம் எனப்படும் சர்வ சிக்‌ஷா அபியான் (SSA), ராஷ்டிரிய மத்யாமிக் சிக்‌ஷா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (TE) ஆகிய திட்டங்களை ஒன்றிணைத்து 2018-ஆம் ஆண்டில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம்)  மோடி அரசு கொண்டுவந்தது. இதன்மூலம் பள்ளிக்கல்விக்கு நிதி வழங்கிக் கொண்டிருந்த பிற திட்டங்களையெல்லாம் ரத்து செய்துவிட்டு பள்ளிக்கல்விக்குரிய அனைத்து நிதி ஒதுக்கீட்டையும் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தின் கீழ் கொண்டுவந்தது.

2020-இல் தேசிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்ட பின்னர், எந்தவித ஆலோசனையுமின்றி 2021-ஆம் ஆண்டில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டத்தை தேசிய கல்விக் கொள்கையுடன் இணைத்தது மோடி அரசு. சாரம்சத்தில் சமக்ர சிக்‌ஷா அபியான் திட்டமும் அத்திட்டத்தின் கீழ் பள்ளிக்கல்விக்கு வழங்கப்படும் நிதியும் தேசிய கல்விக் கொள்கையையும் அதன் திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதாகவே மாற்றப்பட்டுவிட்டது. ஆனால், இதுகுறித்து தற்போது வரையிலும் தி.மு.க. அரசு வெளியில் பேசவில்லை. 2021-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம் சமக்ர சிக்‌ஷா அபியான் தேசிய கல்விக் கொள்கையுடன் இணைக்கப்பட்டு அதற்கான வரைவு அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்ட போதும் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்த தி.மு.க. உள்ளிட்டு எந்த மாநில அரசுகளும் அதனை எதிர்க்கவில்லை.

மாறாக, சம்க்ர சிக்‌ஷா அபியான் நிதியைப் பெற்றுக்கொண்டு இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டம், வானவில் மன்றம் என தேசிய கல்விக் கொள்கையிலுள்ள திட்டங்கள் ஒவ்வொன்றையும் தமிழ்நாடு அரசின் திட்டத்தைப் போல பெயர் மாற்றம் செய்து அமல்படுத்தி வருகிறது. தேசிய கல்விக் கொள்கையை எதிர்ப்பதாக கூறிக்கொண்டே இந்துராஷ்டிரத்தின் அடிக்கட்டுமானமாக உள்ள தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தும் வேலையை சிரமேற்கொண்டு செய்து வருகிறது தி.மு.க. அரசு. தற்போது பி.எம். ஸ்ரீ திட்டத்தையும் வரம்புக்குட்பட்ட அளவிற்கே எதிர்த்து வருகிறது.

ஆனால், பாசிச மோடி அரசோ தமிழ்நாடு பள்ளிக்கல்விக்கான நிதியை முடக்கியிருப்பதன் மூலம் பாசிச நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது. இதற்கான எதிர்ப்பு என்பது தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய அரசின் அலுவலகங்களுக்கான வசதியை முடக்கி பதிலடி கொடுப்பதே ஆகும். மேலும், பி.எம். ஸ்ரீ திட்டத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டியமைக்க வேண்டும்.

மறுபுறம், இதுநாள்வரை தமிழ்நாட்டில் அமல்படுத்தப்பட்டுள்ள தேசிய கல்விக் கொள்கையின் திட்டங்கள் அனைத்தையும் உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு உருவாக்கி வருவதாக சொல்லும் மாநில கல்விக் கொள்கையானது தேசிய கல்விக் கொள்கையின் நகலே என்பதை அக்குழுவிலிருந்து வெளியேறிய பேராசிரியர் ஜவகர் நேசன் அம்பலப்படுத்தியுள்ளார்.  எனவே, மாணவர்களின் கல்வி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக தொடர்ச்சியாக போராடிவரும் கல்வியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர் சங்க பிரதிநிதிகள் அடங்கிய குழு உருவாக்கப்பட்டு அதன் கீழ் மாநில கல்விக் கொள்கை வகுக்கப்பட வேண்டும். இக்குழுவின் பரிந்துரையின் பேரில் தமிழ்நாட்டில் கல்வித் திட்டங்கள் அமல்படுத்தப்பட வேண்டும். கார்ப்பரேட் தலையீடுகள் புறக்கணிக்கப்பட வேண்டும்.

மேலும், இந்தியா முழுவதுமுள்ள பள்ளிகளில் சமக்ர சிக்‌ஷா அபியான் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் தேசிய கல்விக் கொள்கை திணிக்கப்பட்டுள்ளது. எனவே, ஒட்டுமொத்தமாக மாற்று கல்விக் கொள்கையை முன்வைத்து அறிவியல்பூர்வமான, முற்போக்கான மாற்று கல்விக் கட்டமைப்பை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டிய தேவையும் உள்ளது.


துலிபா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2025 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க