
கடந்த மார்ச் 30 ஆம் தேதி பிரிட்டிஷ் நாளிதழான தி டையிலி மெயில் (The Daily Mail) ”போலீசின் உளவுத்துறை அறிக்கை” என்று கூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், ”பிரிட்டிஷ் இந்து அமைப்புகளும் தீவிர வலதுசாரி குழுக்களும் அவர்களுக்குள் இருக்கும் பொதுவான இஸ்லாமியர் வெறுப்பு என்ற அடிப்படையில் கூட்டணி சேருகின்றனர். இது மீண்டும் பிரிட்டனில் மத மோதல்கள் வெடிப்பதற்கான அச்சத்தைத் தோற்றுவிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய போலீசு தலைவர்களின் கவுன்சில் (National Police Chiefs’ Council, NPCC) தொகுத்த ரகசிய அறிக்கையில் இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்த ரகசிய அறிக்கை தேசிய சமூக பதற்றக் குழுவால் (National Community Tension Team) ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ளது.
சவுத்போர்ட் (Southport) என்னும் இடத்தில், ஜூலை 2024-இல், மூன்று சிறுமிகள் அதிதீவிர வலது சித்தாந்தத்திற்கு ஆட்பட்ட ஆக்செல் ருடகுபானா (Axel Rudakubana) என்பவனால் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட பின்பு “ராபிட் ஸ்பிரிண்ட்” என்ற ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உள்துறை அலுவலகம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வு முடித்த இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை வெளிவந்துள்ளது. ஸ்பிரிண்ட் மதிப்பாய்வில் இந்துத்துவத்தை “கவலைக்குரிய தீவிரவாதம்” (extremism of concern) என்று குறிப்பிட்டுள்ளது. அரசாங்கத்தின் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்படுவது இதுவே முதல்முறை.
“இந்துத்துவா என்பது இந்து மதத்திலிருந்து வேறுபட்ட ஒரு அரசியல் இயக்கமாகும், இது இந்திய இந்துக்களின் மேலாதிக்கத்திற்கும் இந்தியாவில் ஒரு ஒற்றை இந்து ராஷ்டிரம் அல்லது அரசை நிறுவுவதற்கும் வாதிடுகிறது.
படிக்க: பிரிட்டன்: புலம்பெயர்ந்தோரைத் தாக்கி கலவரத்தில் ஈடுபடும் தீவிர வலதுசாரிகள்
இங்கிலாந்தில் இந்து மற்றும் முஸ்லீம் சமுதாயங்களுக்கு இடையிலான பதற்ற நிலை தெளிவாகவே தெரிகிறது. பிரிட்டன் லெய்செஸ்டரில் (Leicester) தவறான தகவல்களால் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்களிடையே நடந்த கலவரம் தற்போது இதற்கான ஆதாரமாக உள்ளது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், NPCC அறிக்கையில், ”மிகத் தீவிர வலதுசாரி டாமி ராபின்ஸன் (ஸ்டீபன் யாக்ஸ்லி லெனான் என்பது இவரின் உண்மை பெயர்) ஏற்கெனவே சில இந்து குழுக்களைச் சந்தித்து முஸ்லீம் எதிர்ப்பு பிரச்சாரங்களை ஊக்குவித்ததாகவும் அவரை இந்திய ஊடகங்களும், பிரிட்டனில் உள்ள இந்துக்களும் வரவேற்பதாகவும் தெரிகிறது. பிரட்டனில் உள்ள இந்து ஆதரவாளர்கள் பிரிட்டிஷ் தீவிர வலதுசாரிகளுடன் ஒன்றிப் போவதற்கான வாய்ப்புகள் எதார்த்தமாக உள்ளது. இந்த இரண்டு குழுவினருக்கும் இஸ்லாமிய வெறுப்பு என்பது ஒன்றிப்போவதற்கான அடிப்படையாக உள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
சில ஐரோப்பியத் தீவிர வலதுசாரி பயங்கரவாதிகள், குறிப்பாக ஜூலை 2011 இல் நார்வேயில் 77 பேரைக் கொன்ற ஆண்டர்ஸ் ப்ரீவிக் (Anders Breivik) இந்துத்துவா சித்தாந்தத்தின் அம்சங்களால் கவரப்பட்டுள்ளார் என்று இந்த ஆய்வு கூறுகிறது.
ப்ரீவிக் தனது கொள்கை அறிக்கையில் இந்துத்துவா சித்தாந்தத்தைப் பாராட்டியுள்ளதாகவும், மோடியின் தலைமையிலான பா.ஜ.க, மற்றும் ஆர்.எஸ்.எஸ் என்ற மற்றொரு இந்திய தீவிரவாத குழுவை தனக்கான தகவல் ஆதாரங்களாகப் பட்டியலிட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இந்துத்துவத்திற்கும் வெள்ளை மேலாதிக்கவாதிகளுக்கும் இடையிலான கூட்டணியை மிதவாத இந்துக்கள் கண்டித்துள்ளனர் என்பதையும் NPCC அறிக்கை பதிவு செய்துள்ளது.
மேலும், மோடியை ஆதரிக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் பிரிட்டன் தேர்தலில் குறுக்கிடுவார்களாக உள்ளனர் என அறிக்கை கவலை தெரிவிக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலை மேற்கோள்காட்டி, பத்து லட்சம் இந்து வாக்காளர்கள் வாட்ஸ் ஆப் மூலம் குறிவைக்கப்பட்டு தொழிலாளர் கட்சிக்கு வாக்கு செலுத்த வேண்டாம் எனவும் டோரிகளுக்கு (பழமைவாத கட்சிக்கு) வாக்கு செலுத்த வேண்டும் எனவும் பிரச்சாரம் செய்துள்ளனர். ஜெரமி கோர்பின் (Jeremy Corbyn) தலைமையிலான தொழிலாளர் கட்சி இந்து விரோதியாக அன்று சித்தரிக்கப்பட்டது.
படிக்க: பிரான்ஸ் : வலதுசாரி அரசியலுக்குத் தயாராகும் ‘லிபரல் ஜனநாயகம்’
பிரதமர் மோடியின் ஆதரவாளர்கள் லெய்செஸ்டர் மற்றும் பிற இங்கிலாந்து நகரங்கள் முழுவதும் இந்துக்களிடம் பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கச் சொல்லும் தகவல்களைப் பரப்பியதாக இந்த அறிக்கை கூறுகிறது. இந்தியாவின் ஆளும் கட்சியான பி.ஜே.பி-யின், ஓவர்சீஸ் ஃப்ரிண்ட்ஸ் ஆஃப் தி பி.ஜே.பி (Overseas Friends of the BJP) இங்கிலாந்து கிளை 48 இடங்களில் பழமைவாத கட்சிக்கு வாக்களிக்கப் பிரச்சாரம் செய்துள்ளது என அறிக்கை மேலும் கூறுகிறது.
இந்து தீவிரவாதிகளிடையே பிரபலமான ”ஜெய் ஸ்ரீ ராம்” என்ற கோஷம், இந்துக்களுக்கும் முஸ்லீம் மற்றும் சீக்கிய சமூக மக்களுக்கும் இடையே பதட்டங்களை உருவாக்குவதாக NPCC அறிக்கை கூறுகிறது. சில பாலிவுட் படங்கள் இந்துத்துவ சித்தாந்தத்தைப் பிரதிபலித்து வெளியாகிறது. இது பிரிட்டனின் தெருக்களில் இந்துக்கள் மற்றும் பிற மதத்தினரிடையே கலவரத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஜனவரியில், சீக்கிய குழுக்கள் சினிமா திரையரங்கு முன்பாக ”எமர்ஜென்சி” என்ற படத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தினர். இப்படம் அச்சமூகத்தைத் தவறாகச் சித்தரித்திருந்தது என அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தியாவில் கலவரத்தைத் தூண்டி குளிர் காயும் ஆர்.எஸ்.எஸ் – பாஜக கும்பல், வெளிநாடுகளிலும் இஸ்லாமியர்களுக்கெதிரான கலவரத்தைத் தூண்ட ஆயத்தமாகி வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. இதனுடன் தீவிர வலதுசாரிகளும் சங்கமித்துக் கொள்கின்றனர் என்பதையே இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.
ஹைதர்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram