பி.எஸ்.என்.எல் மீது ஒட்டுண்ணியாக வளரும் ஜியோ – அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அறிக்கை

ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை.

டந்த ஏப்ரல் 1 ஆம் தேதி தலைமை கணக்குத் தணிக்கையாளர் (CAG) வெளியிட்ட அறிக்கையில், பி.எஸ்.என்.எல் பொதுத்துறை நிறுவனமானது அம்பானியின் ஜியோ நிறுவனத்திடம் கட்டணம் வசூலிக்காததால் மத்திய அரசிற்கு சுமார் 1700 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அதிர்ச்சிகரத் தகவல் தெரியவந்துள்ளது.

அந்த அறிக்கையின்படி, முதன்மை சேவை ஒப்பந்தத்தை (Master Service Agreement) மீறி, மே 2014 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில் கூடுதலாகப் பயன்படுத்தப்பட்ட‌ தொழில்நுட்பத்திற்கு ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிடெட் (RJIL) நிறுவனத்திடம் எந்த கட்டணத்தையும் பி.எஸ்.என்.எல் வசூலிக்காததால் அரசுக் கருவூலத்திற்கு நேரடியாக ₹1757.76 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுதவிர அபராத வட்டியும் பெறப்படாததால் பெரும் இழப்பாகியுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டில், பி.எஸ்.என்.எல் மற்றும் ஜியோ ஆகிய இரண்டு நிறுவனங்களும் முதன்மை சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதன்படி, பொதுத்துறை நிறுவனத்திற்குச் சொந்தமான 4,000 செல்ஃபோன் டவர்களை ஜியோ 15 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்தது. மேலும் RJIL ஒரு டவருக்கு நிறுவக்கூடிய‌ உபகரணங்களை அந்த ஒப்பந்தம் தெளிவுபடுத்தியது. அந்த வகையில் ஒரு டவரில் 6 ஆன்டெனாக்கள், 6 தொலை வானொலி தலைகள் (RRH) மற்றும் 1 பேஸ் டிரான்சீவர் நிலைய (BTS) ஸ்லாட் மட்டுமே பொருத்தப்பட வேண்டும். ஆனால் ஜியோ, FDD மற்றும் TDD எனப்படும் டூப்ளெக்ஸ் தொழில்நுட்பத்தையும் கூடுதலாகச் செயல்படுத்தியுள்ளது.‌ கூடுதல் தொழில்நுட்பங்கள் நிறுவப்பட்டால் அதற்கேற்ப கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டும் என்பது ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது‌‌. ஆனால் இந்த தொழில்நுட்பங்கள் LTE தொழில்நுட்பத்தின் ஓர் அங்கம் தான் என்று கூறி அதற்கான கட்டணத்தைச் செலுத்தாமல் இருந்துவந்துள்ளது ஜியோ நிறுவனம்.

இந்த விவகாரம் தொடர்பாக 2020-ஆம் ஆண்டில் பி.எஸ்.என்.எல் அமைத்த குழுவானது, FDD மற்றும் TDD ஆகியவை வேறுபட்ட தொழில்நுட்பங்கள் என்று உறுதிப்படுத்தியது. இதன் பிறகும் உரிய கட்டணத்தைச் செலுத்த மறுத்துவந்துள்ளது ஜியோ. பி.எஸ்.என்.எல் நிறுவனமும் கூடுதல் தொழில்நுட்ப பயன்பாட்டிற்கான கட்டணத்தை வசூலிக்காமல் அலட்சியமாகக் கையாண்டுள்ளது . மேலும் MSA-வில் வரி அதிகரிப்பு பிரிவைப் பயன்படுத்தாதது, ₹29 கோடி வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது (GST உட்பட).


படிக்க: பி.எஸ்.என்.எல் (BSNL) – எம்.டி.என்.எல் (MTNL) வீழ்த்தப்பட்டது எப்படி ?


இதனைத் தவிர, தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு வழங்குநர்களுக்கு (Telecom Infrastructure Providers) கொடுக்கப்படும் வருவாயிலிருந்து உரிமக் கட்டணத்திற்கான (Licence Fee) பங்கினை கழிக்காததால் ₹38.36 கோடி கூடுதல் இழப்பை BSNL எதிர்கொண்டுள்ளதாக CAG அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் BSNL நிறுவனத்திற்கு 1,944.92 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

தொலைத்தொடர்புத் துறை கார்ப்பரேட்களின் பிடியில் சிக்கியுள்ளதால் கடந்த சில வருடங்களாக பொதுத்துறை நிறுவனமான BSNL சரிவைச் சந்தித்து வருகிறது. ஏற்கனவே 56,000 BSNL ஊழியர்களைக் கட்டாய விருப்ப ஓய்வு கொடுத்து வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளது மோடி அரசாங்கம். நிலைமை இவ்வாறு‌ இருக்க, பிற நிறுவனங்களுக்கு வழங்கப்படும் சேவைகளுக்குக் கூட முறையாகக் கட்டணம் வசூலிக்காமல் வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தற்போது வரை இந்த அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது மத்திய அரசு.

ஜியோவிற்கு விளம்பரம் செய்த கார்ப்பரேட்டுகளின் காவலனான மோடி, மக்களுக்குரிய பொதுத்துறையின் சேவைகளை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ள அம்பானியை அனுமதித்ததில் வியப்பேதுமில்லை. இந்த பாசிச மோடி அரசு, தற்போது ஏற்பட்டுள்ள இழப்பை ஈடு செய்வதற்கும் உழைக்கும் மக்களின் தலையிலேயே வரிச்சுமையை ஏற்றும். உழைப்பைச் சுரண்டும் கார்ப்பரேட்டுகளையும் அதற்கு அடித்தளம்‌ அமைத்துக் கொடுக்கும் பாசிஸ்டுகளையும் வீழ்த்தாமல் உழைக்கும் மக்களுக்கு விடியல் இல்லை!


மக்கள் அதிகாரம்
நெல்லை தூத்துக்குடி மாவட்டம்
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க