வக்ஃப் திருத்தச் சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்!

“பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்”

முஸ்லீம்களின் உரிமைகளைப் பறித்து இரண்டாம் தர குடிமக்களாக மாற்றும் வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக பல்வேறு பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இது ஆளும் அரசுக்கும், பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த வாரம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, மக்களவையில் ஏப்ரல் 3 அதிகாலையிலும் மாநிலங்கள் அவையில் ஏப்ரல் 4 அதிகாலையிலும் நிறைவேற்றப்பட்டது. இம்மசோதா 1995-ஆம் ஆண்டு வக்ஃப் சட்டத்தில் பல்வேறு திருத்தங்களை மேற்கொள்கிறது. இம்மசோதா ஏப்ரல் 5 அன்று குடியரசுத் தலைவர் ஒப்புதலையும் பெற்று சட்டமாகிவிட்டது.

முஸ்லீம்களின் உரிமைகளைப் பறிக்கின்றது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வாரம் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் (Jawaharlal Nehru University), ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழகம், (Jamia Millia Islamia) மற்றும் ஹைதராபாத் பல்கலைக்கழகம் (Central University of Hyderabad) ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஏப்ரல் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமிய பல்கலைக்கழக நிர்வாகம் வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிரான மாணவர்களின் போராட்டங்களை ஒடுக்குவதற்காக அதிகமான போலீசை குவித்தது. இதற்கு முன்பு , கடந்த 2019 ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போதும் இதே போல போலீசைக் குவித்தது. அப்போது பல்கலைக்கழக வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்த போலீசு மாணவர்கள் மீது கொடூர தாக்குதலை நடத்தியது நினைவு கொள்ளத்தக்கது.

பல்கலைக்கழக பேராசிரியர் ஒருவர் கூறுகையில் “சுதந்திரமான கலந்துரையாடல் மற்றும் போராட்டங்களுக்கு இடம் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட பல்கலைக்கழகம் தற்போது ஒரு கோட்டையாக மாறியது” என்று போலீஸ் குவிக்கப்பட்டிருப்பது குறித்து தெரிவித்தார்.

ஏப்ரல் 4 பல்கலைக்கழகத்தின் கேட் எண் 7 இல் அகில இந்திய மாணவர்கள் சங்கம் ஒருங்கிணைத்த மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. ஆனால் “ஜாமியா நிர்வாகம் அனைத்து வாயில்களையும் மூடி போராட்டங்களைத் தடுக்க முயன்றது. ஆனால் மாணவர்கள் இன்னும் எண்ணிக்கையில் கூடினர். நிர்வாகம் இறுதியாக வாயில்களைத் திறந்தது. மாணவர்கள் மசோதாவின் நகல்களை எரித்து அரசாங்கத்தின் வகுப்புவாத நோக்கத்தைக் கண்டித்தனர்“ என்று தெரிவித்துள்ளார்.


படிக்க: வக்ஃப் திருத்தச் சட்டம்: பாசிச கும்பலின் ‘நில ஜிகாத்’


ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் வடக்கு மற்றும் தெற்கு வளாகங்களில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்றதாகத் தெரிவித்த மாணவர் ஒருவர் “பதிவுகள் இல்லாததைப் பயன்படுத்தி வக்ஃப் சொத்துகளை அரசாங்கம் எளிதாக உரிமை கோரும் என்று நாங்கள் கருதுவதால், இந்த மசோதாவிற்கு எதிராக நாங்கள் போராட்டம் நடத்தினோம். இது வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும்” என்று தெரிவித்தார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் தனஞ்செய் ஏப்ரல் 2 அன்று ”(புதிய) சட்டம் அரசியலமைப்பிற்கு விரோதமானது; இது சமத்துவத்தை மீறுகிறது. அதைத் திரும்பப் பெற வேண்டும். நாங்கள் மேலும் போராட்டங்களை முன்னெடுப்போம்” என்று தெரிவித்தார்.

முஸ்லீம் தனிநபர் சட்டம் குறித்து ஆய்வறிக்கை எழுதியுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அபய் குமார் ”வெற்றிகரமான ஜனநாயகத்தின் அடையாளம் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதாகும்” என்ற பி.ஆர்.அம்பேத்கரின் கருத்தை மேற்கோள் காட்டி “வக்ஃப் கவுன்சில் மற்றும் மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லீம்கள் அல்லாதவர்களைச் சேர்ப்பதற்கான விதிகள் முஸ்லீம்களிடையே பதட்டத்தை உருவாக்கியுள்ளது“ என்று தெரிவித்தார்.

மேலும் “வக்ஃப் அமைப்புகளில் இந்துத்துவா பின்னணியைக் கொண்டவர்கள் சேர்க்கப்படுவார்கள். அவர்கள் முஸ்லீம்களின் நோக்கத்திற்கு அனுதாபம் காட்டாமல் போகலாம் என்பதுதான் அச்சத்தை ஏற்படுத்துகிறது. வக்ஃப் சொத்துகள் தொடர்பாகப் பிரச்சினைகள் எழுந்தால் அதனை விசாரித்துத் தீர்த்து வைக்கின்ற அதிகாரம் முன்பு வக்ஃப் தீர்ப்பாயங்களிடம் இருந்தது. ஆனால் தற்போதைய புதிய சட்டத்திருத்த மசோதாவில் அனைத்து அதிகாரங்களும் மாவட்ட ஆட்சியருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும் “வக்பு நில ஆக்கிரமிப்பு தொடர்பான சட்ட வழக்கில் அரசாங்கமே ஒரு கட்சியாக இருப்பதாலும், மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாலும் நலன் மோதல் ஏற்படும். ஆக்கிரமிப்புகள் அதிகரித்து தங்கள் நலன் பாதிக்கப்படும் என்று முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள்” என்று அபய் குமார் தெரிவித்தார்.

வக்ஃப் தொடர்பான சொத்துகளை நிர்வகிக்க யூ.பி.எஸ்.சி மூலம் 200 கிரேடு ஏ அதிகாரிகளை அரசாங்கம் நியமிக்க வேண்டும் என்று சச்சார் குழு பரிந்துரைத்துள்ளதையும் வக்ஃப் தீர்ப்பாயங்களில் முழு நேர அதிகாரிகளை பணியமர்த்த வேண்டும் என்பதையும் அரசு புறக்கணித்துள்ளதாக குமார் தெரிவித்துள்ளார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வெடித்த மாணவர் போராட்டங்களைப் போல தற்போதும் போராட்டங்கள் வெடித்துவிடுமோ என்கிற அச்சத்தில் உள்ள பாசிச கும்பல் திட்டமிட்டு மாணவர் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது. ஆனால் அடக்குமுறைக்கு அஞ்சாத மானவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.


இன்குலாப்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க