10.04.2025

கோவை: தனியார்ப் பள்ளி மாணவி மீதான தீண்டாமை!
பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!

பத்திரிகை செய்தி

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் உள்ள செங்குட்டைபாளையத்தில் சுவாமி சித்பவானந்தா மெட்ரிக்குலேசன் என்கிற தனியார்ப் பள்ளி இயங்கி வருகிறது. அப்பள்ளியில் அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவி எட்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அவருக்கு சமீபத்தில் முதல் மாதவிடாய் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் முழு ஆண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், பள்ளியின் முதல்வர் மாணவியின் பெற்றோருக்குத் தொடர்பு கொண்டு “உங்களுடைய குழந்தையைத் தேர்வு எழுத அனுப்புகிறீர்களா? தேர்வு எழுத வந்தால் தனியாகத் தான் தேர்வு எழுத முடியும்” என்று கூறியுள்ளார். அதற்கு மாணவியின் தாயார் “அவள் தேர்வு எழுத வருவாள் அறையில் தனியாக எழுதட்டும்” எனக் கூறியுள்ளார்.

பின்னர், பள்ளி தேர்வு எழுதச் சென்ற மாணவியைத் தேர்வு அறையில் தேர்வு எழுத வைக்காமல் தேர்வு அறைக்கு வெளியில் படிக்கட்டில் அமர்ந்து தேர்வு எழுத வைத்துள்ளனர். ஏப்ரல் 7 மற்றும் 9 ஆகிய தேதிகளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய இரண்டு தேர்வுகளையும் வெளியில் படிக்கட்டில் அமர்ந்து தான் எழுதியுள்ளார். இதனை அம்மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்த பின்னர், அவரது தயார் பள்ளிக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு தனது மகள் அறைக்கு வெளியில் தேர்வு எழுதுவதை தொலைப்பேசியில் வீடியோ பதிவு செய்த பின், பள்ளி முதல்வரிடம் சென்று “என்னுடைய மகளை ஏன் வெளியில் அமரவைத்துத் தேர்வு எழுத வைத்தீர்கள்” என்று கேட்டுள்ளார். அதற்கு பள்ளி முதல்வர் “அப்படி தான் செய்வோம்” என்று பெற்றோரிடம் திமிராகப் பதில் கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த பெற்றோர் உடனடியாக தாங்கள் பதிவு செய்த வீடியோவை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது பள்ளி நிர்வாகத்திற்கு எதிராகவும், பள்ளி முதல்வருக்கு எதிராகவும் சமூக ஊடகங்களில் பலரும் தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

பள்ளி மாணவியின் முதல் மாதவிடாய் காலம் என்பதையும், சாதிய பின்னணியையும் தெரிந்து கொண்டு பள்ளி முதல்வர் திட்டமிட்டே தீண்டாமையை அரங்கேற்றியுள்ளார். பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

தற்போது பள்ளி முதல்வர் பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மறுபுறம் பொள்ளாச்சி ஏ.எஸ்.பி. சிருஷ்டி கிங் மாணவிக்குத் தீண்டாமைக் கொடுமை நடைபெறவில்லை என அப்பட்டமாக பள்ளி நிர்வாகத்தையும் முதல்வரையும் காப்பாற்றுவதற்காக அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டுமல்ல, கடந்த மாதம் திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தன்னுடைய சொந்த தங்கை மாற்றுச் சாதியைச் சேர்ந்த இளைஞரைக் காதலித்ததால் அடித்துக் கொன்ற நபரையும் பாதுகாப்பதற்காக திருப்பூர் எஸ்.பி தங்கை நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காகவே அண்ணன் அடித்ததாக அப்பட்டமான போலி அறிக்கையை வெளியிட்டார்.

இப்படித் தொடர்ந்து தமிழ்நாட்டில் நடைபெறும் தலித்துகள் மீதான தாக்குதல்கள் மறைக்கப்படுவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. குறிப்பாக தமிழ்நாடு சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு தென் மாவட்டங்களில் சாதிய படுகொலைகள் நடைபெறுவதில்லை, மாறாக கூலிப்படைக் கொலைகள் தான் நடைபெறுகிறது என்று கடந்த மாதம் கூறியிருந்தார்.

இதன் மூலம் தி.மு.க அரசு யாருக்காகச் செயல்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. தீண்டாமை அரங்கேற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளியாக்கும் கொடுமையைச் செய்து வருகிறது அரசு. பட்டியலின மக்கள் மீது நடத்தப்படும் தீண்டாமையைத் தடுக்க நடவடிக்கையை மேற்கொள்ளாத இதே அரசு, பள்ளி நிர்வாகத்தையும் ஆதிக்கச் சாதி வெறியர்களையும் பாதுகாப்பதை முதன்மையாகச் செய்து வருகிறது.

  • பள்ளி முதல்வர் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட வேண்டும்.
  • தனியார்ப் பள்ளிகளில் நடைபெறும் சாதிய தீண்டாமை மற்றும் சாதிய பாகுபாடுகளை ஆய்வு செய்து அந்த பள்ளிகளை இழுத்து மூட வேண்டும்.
  • பள்ளிகளில் மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், முற்போக்கு இயக்கங்களின் உறுப்பினர்களைக் கொண்ட குழுக்களையும் சங்கத்தையும் அமைத்திட வேண்டும்.


கோவை மாறன்,
மாவட்ட இணை செயலாளர்,
மக்கள் அதிகாரம் – கோவை மாவட்டம்.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க