ஜோதிபா பூலே 198-வது பிறந்தநாள்: ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை தடை செய்ய உறுதியேற்போம்!

ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை.

1827 ஆம் ஆண்டு ஏப்ரல் 11-ஆம் தேதி மகாராஷ்டிராவின் சாதாரா மாவட்டத்தில் கோவிந்தராவ், சிம்பாய் தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் ஜோதிபா பூலே. இன்றுடன் அவர் பிறந்து 198 ஆண்டுகள் ஆகின்றன. ஜோதிபா பூலே தன்னுடைய வாழ்நாள் காலத்தில் பார்ப்பனர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் பகுஜன் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் குறிப்பிடத்தக்க போராட்டங்களை நடத்தியுள்ளார். இந்து மதத்தின் பிற்போக்கு மூட மத நம்பிக்கைகளுக்கெதிராகவும் பழக்கவழக்கங்களுக்கு எதிராகவும் போராட்டங்களை நடத்தியுள்ளார்.

1873 ஆம் ஆண்டு ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜம் என்ற அமைப்பை தொடங்கினார். மகாராஷ்டிராவில் உள்ள அனைத்து பின்தங்கிய மக்களிடையேயும் விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்திற்காகவும், பார்ப்பனர்களின் மேலாதிக்கத்திற்கு எதிராகவும் சத்யசோதக் சமாஜம் தொடங்கப்பட்டது. பார்ப்பனர்கள் தங்களின் சுயநலத்திற்காக பகுஜன் மக்கள் மீது தங்களது மேலாதிக்கத்தை பல காலமாக செலுத்திக் கொண்டிருந்தனர். அம்மக்களுக்கு கல்வியை மறுத்து, வறுமை மற்றும் பின்தங்கிய நிலையில் உழல வைத்திருந்தனர். கோழைத்தனம், தன்னம்பிக்கை இல்லாமை உள்ளிட்ட பண்புகளை அம்மக்களுக்குள் புகுத்தி மனரீதியாகவே அவர்களை அடக்கி வைத்திருந்தனர்.

இத்தகைய சூழலில் ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜம் மூலம் பகுஜன் மக்களிடையே தன்னம்பிக்கையை விதைக்கும் வேலையில் ஈடுபட்டார். தாங்களும் மனிதர்கள்தான் என்று அம்மக்களுக்கு உணர்த்தும் வரலாற்று சிறப்புமிக்க பணியை செய்தார். அக்காலக்கட்டத்தில் ஜோதிபா பூலேவின் இப்பணியானது பார்ப்பனர்களின் மேலாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவமுடையதாகும்.

அதேபோல, ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜம் அமைப்பின் மூலம் பகுஜன் மக்களிடையே இந்துமதத்தின் சிலை வழிபாடு என்ற கடவுள் வழிபாட்டு முறையையும், பேய், பிசாசுகள், சொர்க்கம், நரகம் உள்ளிட்ட புனை சுருட்டுகளையும் மூட நம்பிக்கைகளையும் அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்தார். வர்ணாசிரம அடிப்படையில் பிறவியிலேயே சாதி அடிப்படையிலான ஏற்றத்தாழ்வை போதிக்கும் இந்து மதத்திற்கெதிராக அம்மக்களிடையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதித்தார்.


படிக்க: சாவித்ரிபாய் பூலே ஏன் மறைக்கப்பட்டார் ? || சிந்தன் இ. பா.


குறிப்பாக, குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் என்று பெண்கள் மீதான ஒடுக்குமுறைகள் மேலோங்கியிருந்த அக்காலத்திலேயே பெண்களுக்குக் கல்வி வழங்குவதற்கான போராட்டங்களை நடத்தியுள்ளார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியையும் தன் மனைவியுமான சாவித்திரிபாய் பூலே உடன் இணைந்து பெண்களுக்கு கல்வி வழங்குவதற்காக 200-க்கும் மேற்பட்ட பள்ளிக் கூடங்களைத் திறந்துள்ளார். இவர்கள் கைவிடப்பட்ட பெண்களுக்கான இல்லம் ஒன்றையும் நடத்தியுள்ளனர். மேலும், ஆதிக்கச் சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பெண்களுக்காகவும், தன் இளம் வயதில் வயதானவர்களுக்குக் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்டு கணவனை இழந்த பெண்களுக்காகவும் தனியாகப் பள்ளி ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

மேலும், அப்போதைய அரசாங்கத் துறைகளில் உள்ள அனைத்து முக்கிய பதவிகளிலும் பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்களின் ஆதிக்கத்தையும் ஜோதிபா பூலே சத்யசோதக் சமாஜம் மூலம் எதிர்த்தார். விவசாயிகளின் மோசமான நிலைமை குறித்து அரசாங்கத்திற்கு எழுதிய நூறு பக்க கடிதத்தில், அரசுத்துறைகளில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின் காரணமாகவும், விவசாயிகளை அவர்கள் இரக்கமின்றி சுரண்டுவதாலும் விவசாயிகள் தங்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு உணவளிக்கவோ அல்லது தங்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவோ இயலாத வறிய நிலையில் உழன்று வருகின்றனர் என்பதை விரிவாக விளக்கி எழுதினார்.

ஆனால், ஜோதிபா பூலே விவசாயிகளின் நிலை குறித்து கடிதம் எழுதி 150 ஆண்டுகளைக் கடந்த பிறகும் மகாராஷ்டிரா மட்டுமின்றி நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படுத்தப்படவில்லை. பார்ப்பனிய வர்ணாசிரமத்தாலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலின் ஆதரவு பெற்ற அம்பானி – அதானி வகையறா கார்ப்பரேட் கும்பலாலும் கொடிய சுரண்டலில் உழன்று வருகின்றனர். மேலும், இச்சுரண்டலுக்கு எதிராக விவசாயிகள் ஒன்றுதிரண்டு விடக்கூடாது என்பதற்காக, ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க. கும்பல் அம்மக்களிடையே சாதி, மத முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி அம்மக்களை தங்களுடைய அடியாட்படையாக மாற்றி வருகிறது. பெண்கள் மீதான பாலியல் வல்லுறவுகள் அதிகரித்துள்ளன. பெண்கள் மீது சகித்துக்கொள்ள முடியாத கொடூரங்கள் அரங்கேற்றப்படுகின்றன.


படிக்க: மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்


மேலும், பகுஜன் (பார்ப்பனர் அல்லாதோர்) மக்களுக்காக ஜோதிபா பூலே செயல்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்திலேயே ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பல் அம்மக்களிடம் தன்னுடைய அடித்தளத்தை விரிவுபடுத்தி, நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி எதிர்க்கட்சிகள் இல்லாத மகாராஷ்டிராவை உருவாக்குவதை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நாக்பூர் உள்ளிட்ட இடங்களில் இம்மக்கள் மூலமே சிறுபான்மை மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது.

ஆகவே, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த உழைக்கும் மக்கள் மீது பார்ப்பனிய – வர்ணாசிரமம் என்ற சாதி, மதவெறி ஆதிக்கத்தையும், அம்பானி – அதானிகளின் பொருளாதார ஆதிக்கத்தையும் செலுத்திக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலைத் தடை செய்வதற்காக உறுதியேற்பதும் அதற்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதுமே ஜோதிபா பூலேவின் பிறந்தநாளில் அவரை நினைவு கூருவதாகும்.

நன்றி: கவுண்டர்கரண்ட்ஸ்


பிரவீன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram