இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்

“காசாவில் 50,000 பாலஸ்தீனர்கள் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கொல்லப்பட்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களின் இரத்தத்தைக் கண்டு குதூகலிக்கும் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்”

மெரிக்காவின் “மைக்ரோசாஃப்ட்” (Microsoft) மென்பொருள் நிறுவனமானது இஸ்ரேலின் இனப்படுகொலைக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருவதை எதிர்த்து அந்நிறுவனத்தின் இரண்டு ஊழியர்கள் தங்களது எதிர்ப்பைப் பதிவுசெய்துவிட்டு வேலையை ராஜினாமா செய்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டனில் ரெட்மண்ட் (Redmond) பகுதியில் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமையகம் அமைந்துள்ளது. அங்கு கடந்த ஜனவரி மாதத்தில் அசோசியேட்டட் பிரஸ் (Associated Press) எனும் உலகளாவிய செய்தி நிறுவனம் ஆய்வு நடத்தியது. அதில் இஸ்ரேலின் இனவெறி படுகொலைக்காக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 133 மில்லியன் டாலரில் ஒப்பந்தம் போட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அஷூர் (Azure) மற்றும் ஓபன் ஏ.ஐ. (Open AI) போன்ற தொழில்நுட்பங்களை இஸ்ரேலுக்கு வழங்கியதும் அம்பலமானது.

இதனை எதிர்த்து இதற்கு முன்னரே மைக்ரோசாஃப்ட் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை எல்லாம் வேலையிலிருந்து நீக்குவது போன்ற அராஜக நடவடிக்கைகளின் மூலம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தன்னுடைய இரத்தக்கரை படிந்த கரங்களை மறைத்துக்கொள்ள முயன்றது.

சான்றாக, பிப்ரவரி மாதத்தில் மைக்ரோசாஃப்ட் ஊழியர்களிடையே சத்யா நாடெல்லா தலைமையில் நடத்தப்பட்ட கூட்டம் ஒன்றில் இஸ்ரேல் உடனான ஒப்பந்தங்கள் குறித்து கேள்வி எழுப்பிய 5 ஊழியர்கள் கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!


இரண்டு மாதங்கள் கழித்து கடந்த ஏப்ரல் 4 அன்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் 50-ஆம் ஆண்டு நிறுவன விழா வாஷிங்டனின் ரெட்மண்ட் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ், முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர், தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாடெல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில்தான் மைக்ரோசாஃப்ட் நிறுவன பொறியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு அந்நிறுவனத்தின் கோரமுகத்தை உலகிற்கு வெளிக்காட்டியுள்ளனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரிவைச் சேர்ந்த பெண் மென்பொருள் பொறியாளர் வானியா அகர்வால் (Vaniya Agrawal), “காசாவில் 50,000 பாலஸ்தீனர்கள் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கொல்லப்பட்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களின் இரத்தத்தைக் கண்டு குதூகலிக்கும் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்” என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளை பார்த்து கேள்வி எழுப்பினார். காசாவில் நடைபெறும் இனவெறித் தாக்குதலை தடுப்பதற்கு அந்நிறுவனத்தின் ஊழியர்களுக்கு அழைப்பு விடுத்தார். பின்னர் வானியா அகர்வால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.

மேலும், மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தை “டிஜிட்டல் ஆயுத உற்பத்தியாளர்” என்று குறிப்பிட்டுள்ள வானியா அகர்வால், மைக்ரோசாஃப்டில் தான் ஆற்றிவந்த மென்பொருள் பொறியாளர் பணியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தில், “அநீதி, வன்முறையில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தின் அங்கமாக என்னால் மனசாட்சியுடன் செயல்பட முடியாது. ஒருவேளை நீங்கள் மைக்ரோசாஃப்டில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினால் உங்கள் பதவி, அதிகாரம் மற்றும் சலுகையைப் பயன்படுத்தி மைக்ரோசாஃப்டை அதன் சொந்த மதிப்புகள் மற்றும் நோக்கத்திற்குப் பொறுப்பேற்க வைக்குமாறு நான் உங்களை வலியுறுத்துகிறேன்” என்று வானியா அகர்வால் தனது சக ஊழியர்களை கேட்டுகொண்டுள்ளார். மேலும், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்துடன் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் போட்டுள்ள ஒப்பந்ததை திரும்பபெறுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

அதே நிகழ்வில் மைக்ரோசாஃப்டின் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக மைக்ரோசாஃப்டின் செயற்கை நுண்ணறிவு பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி முஸ்தபா மேடைக்கு சென்றபோது மற்றொரு செயற்கை நுண்ணறிவு பிரிவின் மென்பொருள் பொறியாளராக பணிபுரியும் இப்திஹால் அபூசாத் (Ibtihal Aboussad) “முஸ்தபா, நீங்கள் அவமானம் கொள்ள வேண்டும்” என்று முழக்கமிட்டார். மேலும், “நீங்கள் செயற்கை நுண்ணறிவை நன்மைக்காக பயன்படுத்துவதில் அக்கறை கொண்டுள்ளதாக கூறுகிறீர்கள். ஆனால் மைக்ரோசாஃப்ட் இஸ்ரேலிய நிறுவனத்திற்கு ஆயுதங்களை விற்கிறது. அதன்மூலம் ஐம்பதாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். மைக்ரோசாஃப்ட் இந்த இனப்படுகொலைக்கு உந்து சக்தியாக இருந்துள்ளது” என்று விமர்சித்தார். மேலும், பாலஸ்தீன விடுதலையின் அடையாளமாக உள்ள கெஃபியே ஸ்கார்ஃபையும் (keffiyeh scarf) மேடையில் வீசியெறிந்தார். பின்னர் அவரும் நிறுவனத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார்.


படிக்க: காசாவில் இனஅழிப்பு போரை மீண்டும் தொடங்கிய இஸ்ரேல்


தனது ஊழியர்களின் போராட்டத்தை கண்டு பதறிப்போன மைக்ரோசாஃப்ட் நிர்வாகம் அன்றைய தினமே ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதில் “அனைவரின் குரல்களும் கேட்கப்படுவதற்கு நாங்கள் பல வழிகளை வழங்குகிறோம். வணிக இடையூறு ஏற்படாத வகையில் இதைச் செய்யுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். ஒருவேளை இடையூறு ஏற்பட்டால் அதற்கு காரணமானவர்களை வெளியேறுமாறு சொல்கிறோம். எங்கள் வணிக நடைமுறைகள் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதை உறுதி செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் தன்னுடைய சாவு வியாபாரம் தடைபடக் கூடாது என்று தெரிவித்துள்ளது.

காசா மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஆதரவாக அமெரிக்கா தொடர்ந்து ஆயுதங்களை வழங்கி வருகிறது. தற்போது மைக்ரோசாஃப்ட் நிறுவனம் காசாவை கண்காணிப்பதற்கு செயற்கை நுண்ணறிவு ஆயுதங்களை வழங்கியுள்ளது அம்பலமாகியுள்ளது.

இஸ்ரேலின் இனப்படுகொலைகளுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்குகின்ற நிறுவனங்களின் அனுமதி இரத்து செய்யப்பட வேண்டும். உலகம் முழுவதும் அதற்கான மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பது மட்டுமே இதனைச் சாத்தியப்படுத்தும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க