பெண்களையே குற்றவாளியாக்கும் நீதிமன்ற தீர்ப்புகள்!

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது சமீப ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

த்தரப்பிரதேசம் மாநிலத்தில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில்,  ‘அது இருவரின் சம்மதத்துடன் நடந்த உறவு’ என்றுக்கூறி குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கியிருக்கிறது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

கடந்த 2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 21 அன்று பல்கலைக்கழக மாணவி ஒருவர் தனது மூன்று தோழிகளுடன் டெல்லியின் ஹவுஸ்-ஹால் பகுதியில் உள்ள பாருக்கு சென்றுள்ளார். அங்கு அவர்கள் அதிகாலை 3 மணி வரை இருந்துள்ளனர். அதே பாரில் குடித்துக் கொண்டிருந்த சந்தக் என்பவன் அவர்களுடன் பேச்சுக் கொடுத்து, மாணவியை தனது வீட்டுக்கு வந்து ஓய்வெடுக்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளான். ஆரம்பத்தில் மறுத்த பெண் தொடர்ந்து சந்தக் வற்புறுத்தியதால் ஒப்புக்கொண்டார்.

பின்னர் காரில் போகும்போதே சந்தக் அப்பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளான். மேலும், நொய்டாவில் உள்ள தனது வீட்டிற்கு செல்லாமல் குர்கானில் உள்ள அவனது உறவினர் வீட்டுக்கு பெண்ணை அழைத்துச் சென்றுள்ளான். அங்கே அப்பெண்ணை இருமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.

தனக்கு நடந்த கொடூரச் சம்பவம் குறித்து நொய்டா போலீசிடம் அப்பெண் புகாரளித்தார். இதனையடுத்து கடந்தாண்டு டிசம்பர் 11 அன்று சந்தக்கை கைது செய்து போலீசு அவன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.

இந்த கைது நடவடிக்கையை எதிர்த்து அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் சந்தக் மேல்முறையீடு செய்தான். அம்மனுவில் மாணவியை உறவினர் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததை மறுத்ததோடு, தன்னுடைய வீட்டிற்கு ஓய்வெடுக்க வருவதற்கு மாணவி ஒப்புக்கொண்டதாகவும் அது இருவரின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு என்றும் அயோக்கியத்தனமாக தெரிவித்துள்ளான்.

இந்த மனு மீதான விசாரனை கடந்த மார்ச் 11 அன்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சய் குமார் சிங் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு விரோதமாகவும் குற்றவாளிக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து அதன்படியே தீர்ப்பு வழங்கியுள்ளார்.

வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி சஞ்சய் குமார், “இவ்வழக்கை ஆராய்ந்ததில், பாதிக்கப்பட்ட பெண்ணும் மனுதாரரும் (சந்தக்) வயது முதிந்தவர்கள் என்பது தெளிவாகிறது. மேலும், பாதிக்கப்பட்ட பெண் ஒரு முதுகலைப் பட்டதாரி மாணவி. அவரது செயலின் ஒழுக்கத்தையும் அதன் விளைவுகளையும் புரிந்துகொள்ளும் அளவிற்கு அவர் தெளிவுடையவர். இது அவர் பதிந்த எப்.ஐ.ஆர். மூலமும் தெளிவாகிறது. எனவே பாதிக்கப்பட்டவரின் குற்றச்சாட்டு உண்மை என்று ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவரே பிரச்சினையை வரவழைத்துக் கொண்டார். அதற்கு அவரே காரணம் என்று முடிவு செய்யலாம் என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது” என்று பாதிக்கப்பட்ட பெண்ணை மிகவும் இழிவாக சித்தரிக்கும் வகையிலும் அவரையே குற்றவாளியாக்கும் வகையிலும் பேசினார்.


படிக்க: பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்களை நியாயப்படுத்தும் நீதிமன்ற தீர்ப்புகள்!


அதேபோல், “மருத்துவப் பரிசோதனையில் பெண்ணின் ‘கன்னித்திரை’ கிழிந்திருப்பது கண்டறியப்பட்டாலும், பாலியல் வன்கொடுமை நடந்தது குறித்து மருத்துவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை” என்று அயோக்கியத்தனமாக கருத்து தெரிவித்தார்.

மேலும், பாலியல் பொறுக்கி சந்தக்கின் வழக்குரைஞர், “சந்தக்  கடந்த டிசம்பர் 11 முதல் சிறையில் இருக்கிறார். அவருக்கு வேறு எந்த குற்றப் பின்னணியும் இல்லை. ஜாமீனை தவறாக பயன்படுத்தமாட்டார். வெளியே சென்ற பிறகு நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு எதிராக ஆதாரத்தை கலைக்கமாட்டார்” என்று பேசினார். அதற்கு அரசு தரப்பு வழக்குரைஞர் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி நீதிபதி சஞ்சய் குமார் பாலியல் குற்றாளி சந்திக்கிற்கு ஜாமீன் வழங்கினார்.

“வழக்கின் உண்மைகள் மற்றும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, குற்றத்தின் தன்மை, ஆதாரங்கள், குற்றம் சாட்டப்பட்டவர்களின் சாட்சிகள் மற்றும் வழக்குரைஞர்களின் ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பதாரரின் வழக்கில் ஜாமீன் வழங்கலாம் எனக் கருதுகிறேன்” என்று பாலியல் குற்றவாளியை பாராட்டி, அவனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளார். இவ்வழக்கின் தீர்ப்பு இந்தியா முழுவதும் கடும் கண்டனங்களையும் எதிர்ப்பையும் கிளப்பியிருக்கிறது.

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை நியாயப்படுத்தி நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது சமீப ஆண்டுகளாகவே அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சில வாரங்களுக்கு முன்பாக ‘பெண்களின் மார்பை பிடிப்பதும் பைஜாமாவைக் கழற்றுவதும் பாலியல் வன்கொடுமை முயற்சியல்ல’ என்ற அருவருக்கத்தக்க தீர்ப்பை இதே அலகாபாத் உயர்நீதிமன்றத்தைச் சேர்ந்த நீதிபதி ராம் மனோகர் நாராயணன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இவையன்றி, உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் பெண்களுக்கு எதிராக அருவருக்கத்தக்க பல தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல், பா.ஜ.க. ஆளும் மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களின் நீதிமன்றங்களிலும் இத்தகைய தீர்ப்புகள் தொடச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. பா.ஜ.க. இந்தியாவில் ஆட்சிக்கு வந்தபிறகு இந்தியா நீதிமன்றங்களில் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் கொண்ட சங்கிகள் புகுத்தப்பட்டிருப்பது இதற்கு முக்கிய காரணமாகும். இதன்விளைவாக, ஒரு பக்கம் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் அதிகரிக்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு எதிராகவும் குற்றவாளிகளுக்கு ஆதரவாகவும் தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இது பாசிச கும்பலின் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது. களப்போராட்டங்களால் மட்டுமே பாசிச கும்பலை பணியவைத்து பெண்களுக்கான நீதியை பெற முடியும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க