காசா: கருத்து சுதந்திரத்தின் கல்லறை

இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 அமெரிக்க உள்நாட்டுப் போர், முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போர்கள், கொரியப் போர், வியட்நாம் போர் (கம்போடியா மற்றும் லாவோஸில் உள்ள மோதல்கள் உட்பட), 1990-கள் மற்றும் 2000-களில் யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான ஆப்கானிஸ்தான் போர் ஆகியவற்றில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்களின் எண்ணிக்கையை விட அக்டோபர் 7, 2023 முதல் காசாவில் நடைபெற்று வரும் இஸ்ரேலின் இன அழிப்புப்போரில், கொல்லப்பட்டுள்ள பத்திரிகையாளர்களின் எண்ணிக்கை அதிகம் என வாட்சன் சர்வதேச மற்றும் பொதுவிவகாரங்களுக்கான நிறுவனம் (Watson institute for international and public affairs) அறிக்கை வெளியிட்டுள்ளது

“செய்திகளின் கல்லறைகள்: போர் நிருபர்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் உலகை எவ்வாறு ஆபத்தில் ஆழ்த்துகின்றன” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள இவ்வறிக்கையில், இஸ்ரேலின் இன அழிப்புப் போரில் அக்டோபர் 7, 2023 முதல் 2025 மார்ச் 26, வரை சுமார் 232 பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தில் பணிபுரிபவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், “2023-ஆம் ஆண்டில், ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் சராசரியாக ஒரு பத்திரிகையாளர் அல்லது ஊடக ஊழியர் கொல்லப்படுகிறார்” என்றும், இதுவே “2024-ஆம் ஆண்டில், ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் ஒரு பத்திரிகையாளர் கொல்லப்படுகிறார்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதுவும் காசாவில் கொல்லப்படுபவர்களில் பெரும்பாலானோர் உள்ளூர் பத்திரிகையாளர்கள்.

2000-ஆம் ஆண்டு முதல் போர் அபாயம் மிக்க இடங்களில் (conflict zones) பத்திரிகையாளர்களுக்கு அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவகின்றன என்கிறது அறிக்கை. இஸ்ரேல், சிரியாவின் அசாத் ஆட்சி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் அரசுகள் பத்திரிக்கையாளர்கள் செய்தி சேகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக அடக்குமுறை கொள்கைகள் முதல் ஆயுதமேந்திய தாக்குதல்கள் வரை பல்வேறு முறைகளைப் பயன்படுத்துகின்றன. இவ்வாறான முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் சர்வதேச தண்டனையிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்கின்றன. இதன்விளைவாக, சிரியா மற்றும் காசா போன்ற பகுதிகள் “செய்திகளின் கல்லறைகளாக” மாற்றப்பட்டுள்ளன என்று அறிக்கைத் தெரிவிக்கிறது.


படிக்க: இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை


மேற்கத்திய ஊடக்கங்களைச் சார்ந்த பத்திரிகையாளர்கள் இப்பகுதிகளின் நடக்கும் பயங்கரவாத சம்பவங்களைப் பதிவு செய்வதில்லை என்பதால், பாதிப்பிற்குள்ளாகும் இடங்களில் உள்ள உள்ளூர் பத்திரிகையாளர்கள்தான் அங்கு நடக்கும் அநீதிகளை வெளிக்கொணர வேண்டியுள்ளது.

எனவே, உள்ளூர் பத்திரிகையாளர்கள் பெரும்பாலும் குறைந்த ஊதியம் மற்றும் குறைந்த வளங்கள், குறைந்த ஆதரவுடன் கடுமையான வன்முறையை எதிர்கொள்கின்றனர். இது செய்தி சேகரிப்பு மற்றும் உலகளாவிய தகவல் தொடர்பு அமைப்பைக் கடுமையாகப் பாதிக்கிறது என்று அறிக்கைத் தெரிவிக்கிறது.

மேலும், போர் தொடர்பான செய்திகளை வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் கடுமையான உளவியல் பாதிப்பை எதிர்க்கொள்வதாகவும் அறிக்கைக் குறிப்பிடுகிறது. இராணுவப் போர் வீரர்களுக்கு ஏற்படுவதைப் போன்று, போர் குறித்துச் செய்திகள் வெளியிடும் பத்திரிகையாளர்கள் மனச்சோர்வு மற்றும் பி.டி.எஸ்.டி (Post-traumatic stress disorder (PTSD)) எனும் மனநல குறைப்பாட்டிற்கு உள்ளாகுகின்றனர்.

கடந்த 2023-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் காசா மக்களுக்கான நிவாரண முகாமாக இருந்த பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் குறித்துச் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது, அல் ஜசீரா ஊடகத்தின் சமர் அபுடகா மற்றும் வேல் தஹ்தோ இரண்டு பத்திரிக்கையாளர்கள் இஸ்ரேலால் கடுமையாகத் தாக்கப்பட்டனர். இதற்கு முன்னர், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல்களில் குடும்ப உறுப்பினர்களை இழந்திருந்த பத்திரிகையாளர் தஹ்தோ இத்தாக்குதலில் படுகாயமடைந்தார். மற்றொரு பத்திரிகையாளார் அபுடகடா இத்தாகுதலில் படுகொலை செய்யப்பட்டார்.

காசாவில் சுதந்திரமான பத்திரிக்கையாளர்கள் (independent press) செய்திகள் சேகரிப்பதற்கு இஸ்ரேல் தொடர்ந்து மறுத்து வருகிறது. இஸ்ரேலின் இராணுவம் அனுமதிக்கும் இடங்களில் மட்டும்தான் செய்திகள் சேகரிக்க முடியும் என்ற நிலைதான் காசாவில் நிலவுகிறது. எனவே, பாலஸ்தீன பத்திரிகையாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து காசாவில் நடக்கும் இஸ்ரேலின் பயங்கரவாத செயல்களை வெளிக்கொண்டுவர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.


படிக்க: போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது கொடூரத் தாக்குதல் | படக்கட்டுரை


அல்ஜசீரா செய்தியாளர் அனஸ் ஜமால் அல்-ஷெரிஃப் என்பவர், காசாவின் வடக்கில் செய்தி சேகரிப்பதை நிறுத்த வேண்டும் என்ற இஸ்ரேலிய இரணுவத்தின் உத்தரவை மறுத்ததற்காக, அவரது வீடு இஸ்ரேலிய இராணுவத்தால் குறிவைக்கப்பட்டு அவரது தந்தை கொல்லப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தங்கள் குடும்பம், வாழ்க்கை என அனைத்தையும் பணையம் வைத்து இஸ்ரேலின் பயங்கரவாதத்தையும், பாலஸ்தீன மக்களின் துன்பங்களையும் வெளிச்சத்திற்குக்கொண்டு வரும் பத்திரிகையாளார்களின் செயல் உண்மையில் போற்றுதலுக்குரியது. இவர்கள் இல்லையெனில் காசாவில் நடக்கும் பயங்கரங்கள் வெளிச்சத்திற்கு வராது. அதனால்தான் பத்திரிகையாளார்களைக் குறிவைத்து இஸ்ரேல் அரசு தாக்குதல் தொடுத்து வருகிறது. உலகில் அமைதியை விரும்பும் அனைவரும் காசாவில் நடைபெற்றுவரும் இப்பத்திரிகையாளார்களின் படுகொலைகளுக்கு எதிராகக் குரெலெழுப்ப வேண்டும்.


ஆசாத்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க