‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்

மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது.

ந்துமதவெறிக் கலவரங்கள் ஒரு சில மதவெறியர்களின் தூண்டுதலால், மதவெறியினால் உந்தப்பட்டவர்களால் நடப்பதாக பொதுவாக நம்பப்படுகிறது. இல்லை. அப்படி நடப்பதில்லை. அவ்வாறு உணர்ச்சி வேகத்தில் நடந்தால் பாதிப்புகள் கூடவோ குறைவோ இரண்டு தரப்புக்கும் நேருவதாக இருக்கும். ஆனால் இந்தியாவில் நடக்கும், இந்து மதவெறியர்களால் நடத்தப்படும் கலவரங்களில் அவ்வாறு நடப்பதில்லை.

ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான பா.ஜ.க, விஷ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற அமைப்புகளால் ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்து முன்னேற்பாடுகளுடன் பொருத்தமான நபர்கள், முறையான வேலை பிரிவினைகள் என்று பிரித்தொதுக்கப்பட்டு, ஒழுங்கமைக்கப்பட்ட செயல்திட்டத்துடன் இலக்குகள் தீர்மானித்துக் கொண்டு நடத்தப்படுகின்றன.

ஆகையால்தான் ஒரு தரப்புக்கு மட்டுமே மொத்த சேதாரமும், எதிர்தரப்புக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் இருப்பதை அனைத்து கலவரங்களிலும் நாம் காணக்கூடியதாக இருக்கிறது. மேலும் இப்போது நடக்கின்ற கலவரங்களில் அரசின் பாத்திரம் முக்கியமானதாக இருக்கிறது. அரசுகளே கலவரக்காரர்களுக்கு அரணாக இருப்பதுடன் அரசினாலேயே தூண்டிவிடப்படுவதாகவும், ஏற்பாடு செய்யப்படுவதாகவும் நடக்கிறது என்பதுதான் கவனத்திற்கும் கவலைக்கும் உரியதாகிறது.

இந்து மத வெறியைப் பொறுத்தவரை புருஷோத்தமன் எனப்படும் இராமன்தான் கலவரக் கடவுளாகவும் வன்முறையாளனாகவும் முன்னிறுத்தப்படுகிறான். சிவன், லட்சுமி ஆகியோரின் பேரால் கலவரங்கள் எதுவும் நடந்ததாக இல்லை, துர்க்கையின் கணக்கில் மட்டும் சில குற்ற வழக்குகள் தொடர்கின்றன. அடுத்ததாக கணேசன் எனப்படும் பிள்ளையார் பெயரில் கலவரங்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் இராமரை ஒப்பிடும்போது அதுவெல்லாம் ஒன்றுமில்லை. அதிலும் கடந்த பத்தாண்டுகளில் “இராம நவமி” அன்று இராமனுக்கு இந்து மத வெறியர்கள் வழங்கும் பிறந்தநாள் பரிசே முஸ்லீம்களின் உயிர்களும் உயிரற்ற உடல்களும் தான் என்கிற நிலைமை வளர்ந்து வருகிறது.

ஆர்.எஸ்.எஸ்-இன் ஆன்மாவுக்கு நெருக்கமான கடவுள் இராமன்தான். ஆர்.எஸ்.எஸ் நிறுவனத் தலைவரான கேசவ் பலிராம் ஹெட்கேவார் 1925ல் செப்டம்பர் 27 இல் வெற்றிக்கான நாளென்று கருதப்படுகின்ற விஜயதசமி அன்று பூசை போட்டு அவ்வமைப்பைத் தொடங்கி வைத்தார். அடுத்த ஆண்டு 1926 இல் இராமன் பிறந்த நாளான “இராம நவமி” அன்று தான் அதற்கு ஆர்.எஸ்.எஸ், அதாவது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம் என்று பெயர் சூட்டினார். ஆர். எஸ். எஸ்-இன் காவிக்கொடி இராம ராஜ்ஜியத்தின் கொடி என்று அவர்களே கூறிக்கொள்ளுகிறார்கள். அந்த காவி கொடி சிவாஜியால் பிரபலமடைந்திருக்கிறது.


படிக்க: இராம நவமி: உ.பி-யில் இறைச்சி விற்பனைக்குத் தடை!


வட மாநிலங்களில் இரண்டு நவராத்திரிகள் கொண்டாடப்படுகின்றன. அதில் ஒன்று இராமநவமியில் முடிவடைகிறது. அந்த நாளை கலவரத்துக்கு உகந்த நாளாகக் கருதுகின்றனர். கட்டாயமாய் கலவரம் செய்கிறார்கள். இராமநவமி நாளை இந்துத்துவத்தின் பராக்கிரமத்தை வெளிக்காட்டும் நாளாகத் தெரிவு செய்து பெரும் கும்பலை சேர்த்து முஸ்லீம் குடியிருப்புகளின் வழியாக பேரணியாய்ச் செலுத்தி பல அட்டூழியங்களை செய்கின்றனர்.

இரண்டாவது நவராத்திரி தசராவில் முடிகிறது, அன்று ராவணனை கொளுத்துவது வெடி வெடித்து வான வேடிக்கைகள் நடத்துவது என்று இராவண வதம் என்கிற இராவண லீலா கொண்டாடுகிறார்கள். இவ்வாறு இராமனின் பெயரால் நடத்தப்படும் பேரணிகள், கொண்டாட்டங்கள் எல்லாமும் முஸ்லீம்களின் ரத்தத்தை போதுமான அளவுக்குக் குடித்திருக்கிறது.

இந்தியாவில் முதல் இராம நவமி ஊர்வலம் / கலவரம் நடந்தது 1871 இல் என்று சில குறிப்புகளில் இருந்து அறிய முடிகிறது. அப்போது பெரெய்லி என்னும் இடத்தில் முஸ்லீம்களின் மீது திட்டமிட்ட கலவரம் நடத்தப்பட்டது பதிவாகி இருக்கிறது.

1967 இல் நாக்பூரிலும், 1979 இல் ஜாம்ஷெட்பூரில் இராம நவமி அன்று பெரும் கலவரங்கள் நடத்தப்பட்டு இருக்கின்றன. அதற்குப் பிறகு ஒவ்வொரு ஆண்டும் அதைத் தொடர்ந்து பின்பற்றி வருகிறது ஆர்.எஸ்.எஸ். இந்துக்களின் பலத்தை வெளிப்படுத்துவது என்பதாக அதை கூறிக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். இன்றோ சாரிசாரியாக வாகன அணிவகுப்புகள் இந்து மதவெறியூட்டும் அலங்கார வாகனங்கள் என்று அரிவாள்களும் கொடுவாள்களும் சுழற்றிக்கொண்டு நடத்தப்படும் பேரணிகள் இராமநவமிக்கான “ஷோபா யாத்திரை” என்றாகி இந்த வன்முறைக்கு இராமநவமி மத அங்கீகாரம் வழங்குகிறது. அதன் பிறகு அது தொடர் நிகழ்வாகிவிட்டது.

1980 களில் இருந்து கலவரத்தை ஏற்பாடு செய்து நடத்தவும் இந்து மதவெறியை தூண்டி வளர்க்கவும் என்று தனிச்சிறப்பாக விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புக்கு பொறுப்பு அளித்தது ஆர்.எஸ்.எஸ். மக்களை இந்து முஸ்லீமாக பிளவுபடுத்திப் பிரித்து விடுவதும் இந்து ஓட்டு வங்கியை உருவாக்குவதும் அதற்கு கலவரத்தை ஆயுதமாக, வழிமுறையாக பின்பற்றுவதும் அதன் இலட்சியமாகியது.

விஷ்வ ஹிந்து பரிஷத், தரம் ஷன்சாத் எனப்படும் எண்ணற்ற மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களையும் நடத்தியது. “இராமஜென்ம பூமியை இராமனுக்கு மீட்டுக் கொடுப்போம்” என்பதை லட்சியமாக்கியது. ஒவ்வொரு பேரணியிலும் ஆயுதங்களை சுழற்றுவதும் தீப்பந்தங்களை ஏந்துவதும் வழிமுறையாக்கப்பட்டது. 1983 முதல் 1993 முடிய அந்த பத்தாண்டுகளில் தொடர்ந்து இராமன் புகழ் பாடப்பட்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டு அதற்கு எதிராக பம்பாய் குண்டு வெடிப்பும் அதற்கு எதிரான முஸ்லீம்களின் மீதான கொலை வெறி தாக்குதல்களும் நடத்தப்பட்டு கலவரங்களும் கொலைகளும் இந்தியாவின் புதிய இயல்பு நிலை ஆக்கப்பட்டது.

இப்பொழுது ஒவ்வொரு ஆண்டு இராமநவமியும் போலீசின் பாதுகாப்புடன் மக்கள் எச்சரிக்கையுடன் கடந்து செல்ல வேண்டிய நாளாகிவிட்டது. 2022 விவரங்களின்படி ஆறு மாநிலங்களில் அதாவது ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், குஜராத், கோவா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்த நிலைமை இருந்தது. பின்னர் 2023-இல் மகாராஷ்டிரமும் கர்நாடகமும், உத்தரப்பிரதேசம், பீகார் ஆகியவையும் அவற்றுடன் சேர்ந்தன. இந்த ஆண்டு 2025-ல் இராமநவமி நாளான ஏப்ரல் 6 அன்று அம்மாநிலங்களின் பல பகுதிகளில் வெளிப்படையான பதற்றம் நிலவும்படி செய்தனர்.


படிக்க: நாக்பூர் கலவரம்: பாசிஸ்டுகள் விடுக்கும் எச்சரிக்கை!


இந்தியாவின் எட்டுக்கும் மேற்பட்ட அந்த எல்லா மாநிலங்களிலும் ஏப்ரல் 6 ம் தேதியை நோக்கி மார்ச் 30 முதலாகவே ‘இராம பக்தர்களின்‘ நடமாட்டம் எல்லா இடங்களிலும் அதிகரித்திருந்தது. அவர்கள் கலவரங்களுக்கான தயாரிப்பிலும் ஒத்திகையிலும் இருந்தார்கள். ஆயுதங்கள் வெடிபொருட்கள் ஆகியவற்றுடன் மக்களை பயமுறுத்துகின்றனர். மதவெறியூட்டும் முழக்கங்களை எழுப்புகின்றனர். இந்தியாவை இந்து ராஷ்டிரம் என்று உரக்க கூவுகின்றனர். மதரசாக்கள் பள்ளிவாசல்கள் இலக்குகளாக கொண்டு பெட்ரோல் குண்டுகளைக் கொண்டு ஏறியூட்டினர்.

குஜராத்தில் “வதோதராவை எரிப்போம்“, “ரிப்பீட் 2002” போன்ற முழக்கங்களை எழுப்பினர். மகாராஷ்டிராவில் அவுரங்காபாத், மலாட், ஜல் காவுன் ஆகிய இடங்களில் இதே வகை கலவரங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. பா.ஜ.க-வின் எம்.எல்.ஏ-க்கள் எம்.பி-க்கள் போலீஸ் பாதுகாப்புடன் தலைமையாக முன்னிறுத்தப்படுகின்றனர். பிகாரில் இராமநவமி யாத்திரையில் காவி கொடி ஊர்வலம் பிரணவ் குமார் எம்.எல்.ஏ தலைமையில் நடந்திருக்கிறது.

ஹைதராபாத்தில் டி.ராஜா சிங் எம்.எல்.ஏ தலைமையில் இந்து ராஷ்டிரத்தை அமைக்க உறுதிமொழி ஏற்றனர். “நீங்கள் ஏற்கெனவே பாதி நறுக்கப்பட்டவர்கள்; மிச்சத்தையும் நறுக்குவோம்” எனக்கூறி வன்முறை வெறியூட்டினார். முஸ்லீம்களுக்கு வாக்குரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பேசினார்.

இவரே உத்தரப் பிரதேசத்தில் அவுரங்காபாதிலும் மகாராஷ்டிராவிலும் இதே போன்ற வெறியூட்டும் பேச்சுகளுடன் பொதுக் கூட்டங்களை நடத்தினார். மகாராஷ்டிரத்தில் கேபினட் அமைச்சர்களே பேரணிகளில் பங்கேற்றனர். போலீசும் முஸ்லீம் பகுதிகளில் ரைடு விட்டு பெண்களை பாலியல் ரீதியிலும் துன்புறுத்தியது. மதவெறி கூட்டம் இப்படி வீடு புகுந்து பெண்களை பாலியல் ரீதியில் சீண்டுவதெல்லாம் புதிதாக அதிகரித்து வருகிறது. மத்தியப் பிரதேசம் கர்நாடகம் என எல்லா இடங்களிலும் இராமநவமி அன்று சிறிதும் பெரிதுமாக பல்வேறு வன்முறை சம்பவங்கள் அரங்கேறி இருக்கின்றன.

இந்த ஆண்டு 2026 தேர்தலை முன்னிட்டு குறிப்பாக மேற்கு வங்காளத்தை இலக்கு வைத்து வேலை செய்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் வங்காளத்தில் பத்து நாட்கள் பயணம் செய்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டிருக்கிறார். மேற்கு வங்கத்தின் பா.ஜ.க தலைவர் சுவேந்து அதிகாரி இந்துக்கள் யாரும் வீட்டுக்குள் தங்காதீர். 1.5 கோடி இந்துக்களும் இராமநவமி அன்று தெருவுக்கு வர வேண்டும் நமது பலத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அறைகூவல் விட்டிருக்கிறார். மேற்கு வங்கத்தில் இராமநவமி அன்று பிரம்மாண்ட பேரணிகள் நடத்த பா.ஜ.க அரைகூவல் விட்டிருந்தது.


படிக்க: மேற்குவங்கத்தில் மதக்கலவரத்தைத் தூண்ட திட்டமிடும் பா.ஜ.க.


இராமநவமி அன்று 2000 ஊர்வலங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கூறிக் கொண்டது பா.ஜ.க தலைமை. 2017 இல் கொல்கத்தாவில் மட்டும் ஆறு பெரிய பேரணிகள், பிற 150 இடங்களில் பேரணிகள் நடந்தன. இந்த ஆண்டு 2000 பேரணிகள் அதில் 200 பேரணிகளில் ஆயிரக்கணக்கான வாகனங்கள், அலங்கார வடிவமைப்புகள் கொண்ட வாகனப் பேரணி நடத்த திட்டமிடப்பட்டிருப்பதாகக் கூறிக் கொண்டது. மால்டா மற்றும் முர்ஷிதாபாத்தில் பேரணியில் கலவரம் வெடிக்க வாய்ப்பு உள்ளது என்று மால்டா எம்.எல்.ஏ ஸ்ரீ ரூபா மித்ரா சவுத்ரி, மோடிக்கும் அமித்ஷாவுக்கும் கடிதம் எழுதியிருந்தார்.

இவ்வாறெல்லாம் ஒரு பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் ஒரு பிம்பம் தோற்றுவிக்கப்பட்டது. அரசும் இவற்றை கையாளும் வகையில் போலீஸ் துறையில் ஒன்பதாம் தேதி வரை போலீசாருக்கு விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைத்து போலீசாரையும் பணிக்குக் கொண்டு வந்து ஊர்வலப் பாதை எங்கும் ’பாதுகாப்பு’ பலப்படுத்தப்பட்டிருந்தது. இப்படி பா.ஜ.க தலைவரின் வாய்ச்சவடாலுக்கே பாதுகாப்பு என்கிற பெயரில் போலீசு தான் முதலில் பதட்டத்தை உருவாக்குகியது. மக்களை கூடுதலாக பீதி அடையச் செய்வது போலீஸ் நடவடிக்கைகளாகவே இருக்கின்றன.

கடந்த ஆண்டு இராமநவமிக்கு மம்தா பானர்ஜி அரசு விடுமுறை அறிவித்தது இந்த ஆண்டு ஏப்ரல் ஆறு ஞாயிறு விடுமுறை நாளாக போய்விட்டது.

பா.ஜ.க சங்கப்பரிவார அமைப்புகள் 2026 தேர்தலையொட்டி திட்டமிட்டு கலவரத்திற்கு ஏற்பாடு செய்து வருகின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இந்து ஓட்டு வங்கியை உருவாக்கி தமதாக்கிக் கொள்ள பா.ஜ.க இதே வழிமுறையைத்தான் எல்லா மாநிலங்களும் பின்பற்றி வருகிறது. பல இடங்களில் அது வெற்றியையும் பெற்று தருகிறது. மற்ற இடங்களில் ஆட்சியை பெற்றுத்தர வில்லை என்றாலும் கட்சி வளர்க்க பயன்பட்டிருக்கிறது.

ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் மம்தா பானர்ஜி அரசு இந்து மதவெறி அமைப்புகளை ஒடுக்குவது என்றில்லாமல் தாமே இந்துக்களின் பாதுகாவலன் என்றும் தான் மட்டுமே தலைமை ஏற்க முடியும் என்று தனது தலைமையை நிலைநிறுத்திக் கொள்ளும் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறது. ஆனால் மம்தா அரசு இந்துத்துவ வெறுப்பு அரசியலை கண்டும் காணாமல் நடந்து கொள்கிறது. எதிர்வினையாற்றுபவர்களை கைது செய்கிறது. அவர்கள் பதட்டத்தை அதிகப்படுத்துவதாக குற்றம் சுமத்துகிறது. மதவாதத்தை விமர்சிக்கும் திரைப்படங்கள் சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்படுகின்றன.

இவற்றுக்கெல்லாம் மேலாக ஏற்கனவே ஒரிசாவில் உள்ளதைப் போன்றதொரு பிரம்மாண்டமான ஜகன்னாதர் கோயிலை மேற்கு வங்கத்தின் டிக்கா நகரில் கட்டி முடித்திருக்கிறது. ஏப்ரல் 30 அட்சய திருதியை நாள் அன்று திறக்கப்பட உள்ளது. அயோத்தியில் இராமர் கோயில் திறப்பின் போது பிரதிஷ்டை பூஜை நடந்ததை போன்று ஒரு பெரிய பூஜையை ஏப்ரல் 29 அன்று நடத்த திட்டமிட்டு இருக்கிறது. இந்துத்துவத்தின் இரு வேறு வடிவங்களாக பா.ஜ.க-வும் திருணாமுல் காங்கிரஸ் செயல்படுமானால் ஒருபோதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி, அதானி – அம்பானி பாசிசத்தை தேர்தல் அரசியலில் கூட ஒரு போதும் வெல்ல முடியாது. மேற்கு வங்காளத்தில் 2000 இடங்களில் பேரணி என்று சவடால் அடித்தவர்கள் உண்மையில் 70 இடங்களில் தான் பேரணிகள் நடத்தினர்.

மொத்தத்தில் சங்கப் பரிவார இந்துத்துவக் கும்பல் இராம நவமியை ஒரு கலவர நாளாக மாற்றுவதில் வெற்றி பெற்றிருக்கின்றது என்பதை பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகள் எச்சரிக்கையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஆதி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க