15.04.2025
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும்
மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு வெற்றிகரமாக நடந்தேறியது!
மக்கள் அதிகாரக் கழகம் உருவானது!
பத்திரிகை செய்தி
வாழ்க! மக்கள் அதிகாரக் கழகம்!
வீழ்க, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசக் கும்பல்!
ஓங்குக! பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு!
இன்று 15/04/25 மதுரை மாட்டுத்தாவணி இராமசுப்பு அரங்கத்தில் எமது மக்கள் அதிகாரத்தின் இரண்டாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது.
மாநாட்டின் முதல் நிகழ்வாக காலை 10:20 மணிக்கு தோழர் பூர்ணிமா செங்கொடி ஏற்ற மாநாடு தொடங்கியது. மாநாட்டின் தலைவராக தோழர் சாந்தகுமார் தேர்வு செய்யப்பட்டு தலைமை தாங்கினார். தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி மாநாடு முறைப்படி தொடங்கியது. மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக மறைந்த தோழர்கள் குழந்தைவேல், சமனஸ் மற்றும் தோழர் வெங்கடேசன் ஆகியோருக்கு சிவப்பு அஞ்சலி செலுத்தப்பட்டது.
மக்கள் அதிகாரத்தின் இரண்டாவது மாநில மாநாட்டுக்கான வரைவு அறிக்கையின் மீதான கருத்துக்களை மாவட்ட மாநாடுகளில் தோழர்கள் ஒருமனதாக ஏற்றுக் கொண்டதன் அடிப்படையில் மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் தீர்மானங்களை வாசிக்க, தீர்மானங்கள் மீது பிரதிநிதிகள் தெரிவித்த கருத்துக்களை ஏற்று புதிய கொள்கை அறிக்கை மாநாட்டில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாட்டை 2022 ஜனவரி மாதத்தில் நடத்தினோம். அன்றிலிருந்து இந்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் ஆட்சியில் இருக்கும் காவி – கார்ப்பரேட் பாசிசத்திற்கு எதிராக தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையை பெற்றுள்ளோம்.
மேலும் பல்வேறு மக்கள் பிரச்சினைகளுக்கு மக்களைத் திரட்டி போராடியுள்ளோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்க எமது தோழர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இதன் விளைவாக எமது மக்கள் அதிகாரம் அமைப்பு விரிவடைந்தது. புதிய இளம் தோழர்கள் எமது அமைப்பில் இணைந்து மக்கள் அதிகாரத்தின் அரசியலை மக்களிடம் கொண்டு செல்வதிலும் மக்கள் திரள் போராட்டங்களை நடத்துவதிலும் முன்னேறி வருகின்றனர்.
அமைப்பில் ஏற்பட்டுள்ள இந்த வளர்ச்சி காரணமாகவும் பாசிசத்துக்கு எதிராக மக்களை திரட்டி போராடுவதற்கும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசு கட்டுவதற்கும் அமைப்பு என்ற வரம்பை தாண்டி மக்கள் எளிதாக ஏற்றுக்கொண்டு செயல்பட முன் வருகின்ற அரசியல் கட்சி என்ற வடிவத்தை மேற்கொள்ள வேண்டும் என்ற முன்மொழிதலை இந்த மாநாடு ஒரு மனதாக ஏற்றுக் கொண்டது.
அந்த வகையில், மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பானது, இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் அடைந்துள்ளது என்பதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில் அரங்கேறி கொண்டிருக்கும் பாசிசத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் என்று குறிப்பாக வரையறுத்து கும்பல் ஆட்சி மூலமாகத்தான் இந்துராஷ்டிரம் நிறுவப்பட போகிறது என்பதை மக்கள் அதிகாரக் கழகம் வரையறுக்கிறது.
மேலும் மக்கள் அதிகாரக் கழகத்திற்கான புதிய மாநில செயற்குழு உறுப்பினர்களும் தலைமைக் குழு உறுப்பினர்களும் இம்மாநாட்டில், தேர்வு செய்யப்பட்டனர் என்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக் கொள்கிறோம். தோழர் வெற்றிவேல் செழியன், தோழர் குருசாமி, தோழர் அமிர்தா, தோழர் சிவகாமு, தோழர் மருது, தோழர் சாந்தகுமார், தோழர் சங்கர், தோழர் ரஞ்சித், தோழர் ராஜன், தோழர் பிரகாஷ், தோழர் செல்வகுமார், தோழர் முருகானந்தம், தோழர் ரவி, தோழர் வினோத், தோழர் மாறன் மற்றும் தோழர் தமிழ்வேந்தன் ஆகிய 16 பேர் கொண்ட மாநில செயற்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
மாநில செயற்குழுவில் இருந்து கழகப் பொதுச் செயலாளராக தோழர் வெற்றிவேல் செழியன், கழக இணைச் செயலாளராக தோழர். குருசாமி, கழக அமைப்புச் செயலாளராக தோழர். சாந்தகுமார், கழகப் பொருளாளராக தோழர். அமிர்தா, கழக அமைப்பு இணைச்செயலாளராக தோழர் வினோத், கழக இணைச் செயலாளராக தோழர் ரவி, கழக இணைச் செயலாளராக தோழர் தமிழ் வேந்தன், கழக இணைச் செயலாளராக தோழர் மாறன் மற்றும் கழக செய்தி தொடர்பாளராக தோழர் மருது ஆகிய ஒன்பது பேர் கொண்ட தலைமை குழுவும் தேர்வு செய்யப்பட்டது.
மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் 40 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இறுதியாக மக்கள் அதிகாரக் கழகத்தின் பொதுச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் ஏற்புரையாற்றினார். கழக இணைச்செயலாளர் தோழர் மாறன் நன்றியுரையாற்றினார். பாட்டாளி வர்க்க சர்வதேச கீதத்துடன் மாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
தோழமையுடன்
தோழர் வெற்றிவேல் செழியன்,
பொதுச் செயலாளர்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram