அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!

க்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாடு 2022 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த மூன்றாண்டுகளில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா தலைமையிலான பார்ப்பனிய-கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராக எமது அமைப்பு தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றது; எமது அமைப்பும் விரிவடைந்தது.

இந்த மூன்றாண்டு அனுபவங்களிலிருருந்து எமது அமைப்பின் கொள்கை அறிக்கையை செழுமைப்படுத்தியும் புதிய தோழர்களை தலைமைக்குக் கொண்டுவரும் வகையிலும் எமது அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

புதிய கொள்கை அறிக்கையையும் அமைப்பு விதிகளையும் வகுத்தளித்த இந்த மாநாட்டில் எமது அமைப்பானது, மக்கள் அதிகாரக் கழகம் என்ற பெயர் மாற்றத்துடன் ஓர் அரசியல் கட்சியாக தன்னை கட்டமைப்பு மாற்றம் செய்து கொண்டு பாசிசத்திற்கெதிராக மக்களைத் திரட்டிச் செயல்பட உறுதியேற்றது. புதிய செயற்குழுவும் தலைமைக் குழுவும் இம்மாநாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது.

இம்மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மான விளக்கக் கருத்தரங்கில் பல்வேறு ஜனநாயக சக்திகள் பங்கேற்று வாழ்த்துகளை வழங்கினர்.

இம்மாநாட்டின் தீர்மானங்கள்

  1. பாசிசத்தை எதிர்கொள்வதற்கான தனிச்சிறப்பானதொரு அரசியல் கட்சியாக இந்தியாவில் “மக்கள் அதிகாரக் கழகம்” உருவாகியிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை, இந்திய உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு தெரிவித்துக் கொள்கிறது. இந்தியாவில், அரங்கேறிக் கொண்டிருக்கும் பாசிசத்தை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசம் என்று குறிப்பாக வரையறுத்து, கும்பலாட்சி மூலமாகத்தான் இந்துராஷ்டிரம் நிறுவப்பட்டு வருகிறது என்று மக்கள் அதிகாரக் கழகம் வரையறுத்திருக்கிறது.
  2. மக்கள் அதிகாரத்தின் மாவட்ட – கிளை மாநாடுகளில் கார்ப்பரேட் திட்டங்களுக்கு எதிராவும் விவசாயிகள் மற்றும் பிற உழைக்கும் மக்களின் வாழ்வாதாரங்களை பாதுகாக்கும் வகையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை இம்மாநாடு அங்கீகரிக்கிறது.
  3. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி உள்ளிட்டு உலகம் முழுவதும் பல நாடுகளில் பாசிச சக்திகள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருப்பதும், அதிகாரத்தைக் கைப்பற்றுவதை நோக்கி முன்னேறி வருவதும் ஒரு போக்காக வளர்ந்து வருகிறது. மறுபுறம், இப்பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டங்களும் அதிகரித்து வருகின்றன. இப்பாசிச சக்திகளுக்கு எதிராக உலகம் முழுவதும் வளர்ந்துவரும் மக்கள் போராட்டங்களை மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்கிறது.
  4. கடந்த ஓராண்டிற்கும் மேலாக நடந்துவரும் காசா மீதான இஸ்ரேலின் இன அழிப்புப் போர், ஜனவரி மாத போர் நிறுத்த ஒப்பந்தத்தையும் மீறி தொடர்ந்து கொண்டிருக்கிறது. இப்போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். பாலஸ்தீனத்தை முற்றிலும் ஆக்கிரமிப்பதை நோக்கமாகக் கொண்டு இன அழிப்புப் போரை நடத்தி வரும் இஸ்ரேல்-அமெரிக்கா போர்க் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். இந்திய அரசு இஸ்ரேலுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்ள வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
    மேலும், இஸ்ரேலின் கொடூரத் தாக்குதல்களை எதிர்த்து உறுதியுடன் போராடிவரும் பாலஸ்தீன மக்களுக்கும் ஹமாஸ் தலைமையிலான கூட்டமைப்புக்கும் இம்மாநாடு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.
    இஸ்ரேலில் நெதன்யாகுவின் பாசிச ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகிறது. காசா மீதான இன அழிப்புப் போருக்கு எதிராகவும், நெதன்யாகுவின் பாசிச சர்வாதிகாரப் போக்கிற்கு எதிராகவும் அதிகரித்து வரும் மக்கள் போராட்டங்களை இம்மாநாடு வரவேற்கிறது.
  5. அமெரிக்காவில் குடியுரிமை மறுக்கப்பட்டு, அமெரிக்க அரசால் அவமானப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டதைக் இம்மாநாடு கண்டிக்கிறது. அதேசமயம் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து வாய் திறக்காத மோடி அரசின் அடிமைத்தனத்தையும் இம்மாநாடு கண்டிக்கிறது.
    அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்புகளுக்கு அடிபணிந்து அமெரிக்க இறக்குமதிக்கு தாராள அனுமதியளித்து இந்திய விவசாயத்தையும் பால் உற்பத்தியாளர்களையும் மரணப் படுகுழியில் தள்ளும் பாசிச மோடி அரசுக்கு எதிராக இரண்டாவது சுதந்திரப் போரைத் தொடுக்க நாட்டு மக்களை இம்மாநாடு அறைகூவி அழைக்கிறது.
  6. ஈரானில் பெண்கள் ஹிஜாப் அணிவதற்கு எதிராகவும் பெண் சுதந்திரத்திற்காகவும் நடந்து வரும் பெண்கள் போராட்டங்களுக்கு இம்மாநாடு ஆதரவு தெரிவிக்கிறது.
  7. உலகம் முழுவதும் தேசிய இன, மொழி, நிற, மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்தாக்குதல்களுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு இம்மாநாடு ஆதரவு தெரிவிக்கிறது.
  8. இலங்கை – ஈழத்தில் தமிழ் மக்களை மீள்குடியமர்த்தப்பட வேண்டும்; இன அழிப்புப் போர்க் குற்றவாளிகளான பாசிச இராஜபக்சே கும்பல் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மக்கள் அதிகாரக் கழகம் தொடர்ந்து போராடும் என்றும் இந்த மாநாடு அறிவிக்கிறது.

(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க