மீண்டும் மாருதி தொழிலாளர்கள் போராட்டம் – நிர்வாகத்துடன் ஒன்றிய, மாநில பா.ஜ.க அரசுகள் கள்ளக் கூட்டு

தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.

2011 போராட்டத்தைத் தொடர்ந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட மாருதி சுசுகி தொழிலாளர்கள், தங்களை மறுபடியும் சங்கமாக ஒழுங்கமைத்துக் கொண்டு மீண்டும் பணியமர்த்தவும் மற்ற பிற கோரிக்கைகளுக்காகவும் 2025 ஜனவரி 1 முதல் போராடி வருகின்றனர். ஆனால் அப்போராட்டங்கள் பற்றிய செய்திகளை மைய நீரோட்ட ஊடகங்கள் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து வருகின்றன. கடந்த ஏப்ரல் 7 அன்று அரியானா மாநிலம் சோனிபட் நகரில் பேரணி ஒன்றை நடத்தினர்.

அரியானாவின் பா.ஜ.க அரசு தொழிலாளர்களின் அமைதியான பேரணிக்கு அனுமதி மறுத்ததுடன் முன்னணியாளர்கள் 25 பேரைக் கைது செய்தது. மாருதி நிர்வாகத்தின் அராஜகச் செயல்பாடுகள் தொழிலாளர்களின் தொடர் முயற்சியால் நீதிமன்றத்திலேயே அம்பலப்பட்டு வெளிச்சத்திற்கு வந்துவிட்ட நிலையில், தாமாகவே முன்வந்து தொழிலாளர்களுக்கு நீதியைப் பெற்றுத் தர வேண்டிய ஒன்றிய மாநில அரசுகள் மாருதி நிர்வாகத்திற்கு ஒத்துழைத்து வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும்.

2011 போராட்டத்தின் போது பணி நீக்கம் செய்யப்பட்ட 2,500 பேரில் 546 பேர் நிரந்தர ஊழியர்களாவர். நிர்வாகத்தின் அராஜகமான முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட13 பேர்களுக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மற்ற அனைவரும் நிரபராதிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர். 2017 ல் நீதிமன்றத்தால் நற்சான்றளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களை மீண்டும் பணியில் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை மாருதி நிர்வாகம் இன்றுவரை ஏற்கவோ நடைமுறைப்படுத்தவோ இல்லை.

மாநில பா.ஜ.க அரசின் தொழிலாளர் நலத்துறை அதற்கான எந்த முயற்சியையும் இதுவரை மேற்கொள்ளவில்லை. எனவே மாருதியின் முன்னாள் நிரந்தரத் தொழிலாளர்கள் நீதிமன்றத் தீர்ப்பின்படி தங்களை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் மற்ற பிற கோரிக்கைகளையும் முன் வைத்து மாருதி சுசுகி மஸ்தூர் சபா என்கிற பெயரில் தனி தொழிற்சங்கம் அமைத்துப் போராடி வருகின்றனர்.

அதே போன்று 2011 போராட்டத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட இதர ஒப்பந்த மற்றும் நிரந்தரமற்ற, தற்காலிகத் தொழிலாளர்களான 2000க்கும் மேற்பட்டவர்களையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்கிற கோரிக்கையுடன் மாருதி சுசுகி அஸ்தானி / தற்காலிக மஸ்தூர் சங் (Maruti Suzuki Asthani Mazdoor Sangh) என்ற தனி தொழிற்சங்கத்தை உருவாக்கிக் கொண்டு அவர்கள் தனியே போராடி வருகின்றனர்.

ஏற்கெனவே தொழிலாளர்கள் அனைவருக்குமான தொழிற்சங்கமாக இருந்த மாருதி சுசுகி தொழிலாளர் சங்கம் (Maruti Suzuki Worker’s Union) தற்போது நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டுமான தொழிற்சங்கமாக இயங்கி வருகிறது. எனினும் மற்ற இரு தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்காக தொழிற்சங்கத்தில் தனியே போராட்டக் குழு (Struggle Committee) ஒன்று அமைத்து அந்தப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.


படிக்க: மாருதி சுசுகி: புத்தாண்டில் வெடித்த தொழிலாளர் போராட்டம்


இம்மூன்று சங்கங்களுக்கும் தனித்த கோரிக்கைகள் இருப்பினும் எல்லா சங்கங்களுக்கும் மையமான பொது கோரிக்கைகளும் இருக்கின்றன.

அவை

  1. நிரந்தர தன்மை கொண்ட வேலைக்கு நிரந்தர தொழிலாளர்களை நியமிக்க வேண்டும்.
  2. அரியானாவில் சோனிபட் மாவட்டத்தில் கார்கோடா எனும் இடத்தில் புதிதாகக் கட்டியமைக்கப்பட்டிருக்கின்ற இந்தியாவின் மிகப்பெரிய கார் தொழிற்சாலை என்று அறியப்படுகின்ற மாருதி சுசுகி தொழிற்சாலையில் ஏற்கெனவே மாருதி தொழிற்சாலையின் பிற கிளைகளில் ஒப்பந்த மற்றும் நிரந்தரமற்ற தொழிலாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.
  3. சம வேலைக்கு சம ஊதியம் என்கிற கொள்கை பின்பற்றப்பட வேண்டும்.
  4. அப்ரண்டீஸ் மற்றும் பயிற்சி மாணவர்களை நேரடி உற்பத்தியில் ஈடுபடுத்துவதை உடனடியாக நிறுத்த வேண்டும்

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து தனித்தனியே போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


படிக்க: மீண்டும் மாருதி தொழிலாளர் போராட்டம்


2022 ஆம் ஆண்டில், ஆயுள் தண்டனையில் சிறை வைக்கப்பட்டிருந்த அனைத்து தொழிற்சங்க முன்னோடிகளையும் மாருதி தொழிலாளர் சங்கம் பிணையில் வெளியில் கொண்டு வந்து விட்டது. இந்த 14 ஆண்டு காலமாக தொழிலாளர்கள் எதிர்கொண்ட எல்லா வகையான பிரச்சனைகளையும் தங்களின் வர்க்க ஒற்றுமையில் உறுதியாக நின்று கடந்து வந்திருக்கின்றனர். அந்த வர்க்க ஒற்றுமை குலையாமல் மேலும் போராட்டங்களை ஒழுங்கமைக்கும் நோக்கத்துடன்தான் தனித்தனி தொழிற்சங்கங்கள் அமைத்துப் போராடி வருகின்றனர்.

மாருதி தொழிற்சாலையில் தற்போது 36 ஆயிரம் தொழிலாளர்கள் பணி புரிகின்றனர். அவர்களில் 17 சதவீதம் பேர் அதாவது ஏறக்குறைய 6,000 பேர் மட்டுமே நிரந்தர ஊழியர்களாவர். பயிற்சி மாணவர்களும் அப்ரண்டீஸ் மாணவர்களும் மட்டுமே 21 சதவீதம் அதாவது ஏறக்குறைய 7,500 பேராகும். மீதமிருக்கும் 20,000க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த தொழிலாளர்கள், நிரந்தரமற்ற தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், கேஷுவல் தொழிலாளர்கள் போன்ற வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்தவராவர்.

இவ்வாறு தொழிலாளர்களை பல வர்க்க அடுக்கினாராகப் பிரித்து வைத்து, ஒரு பிரிவுக்கு எதிராக இன்னொன்றை நிறுத்தி பிரித்தாண்டு வந்தது மாருதி தொழிற்சாலை நிர்வாகம். அதனை உணர்ந்து கொண்ட தொழிலாளர்கள் உழைக்கும் வர்க்கம் என்கிற உணர்வு பெற்று வர்க்கச் சுரண்டலுக்கு எதிராகப் போராடி வருகின்றனர். தங்களின் வர்க்க ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் பலவகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

ஜனவரி 1 ஆங்கிலப் புத்தாண்டு தினத்தில் தொடங்கிய இந்தப் போராட்டங்கள் தொடர்ந்து வளர்ந்து வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே ஏப்ரல் 7 அன்று இந்த பேரணி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொழிலாளர்களின் இலட்சியத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்ட நிர்வாகமும் அதற்குத் துணை நிற்கும் ஒன்றிய மாநில அரசுகளும் இந்த வர்க்க ஒற்றுமையைத் தகர்க்க எல்லா வகையான தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றன.

ஆனால் தொழிலாளர்களின் வர்க்க ஒற்றுமையே இறுதியில் வெல்லும் என்பது வரலாற்று உண்மையாகும். காலம் கனிந்து வருகிறது. நாட்டின் பிற எல்லா பிரிவு உழைக்கும் மக்களின் ஆற்றலையும் பயன்படுத்தி வரலாற்றின் பாதையைச் செப்பனிடுவோம், வளர்ச்சியைத் துரிதப்படுத்துவோம். மாருதி சுசுகி தொழிலாளர் போராட்டம் வெல்க!


சுந்தரம்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க