நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரோஸ்மேரி பள்ளியில் படிக்கும் ரஹ்மத்துல்லாஹ் என்ற எட்டாம் வகுப்பு மாணவனை அதே வகுப்பில் படிக்கும் மறவர் சமூகத்தைச் சார்ந்த இசக்கிமுத்து என்ற மாணவன் 15/04/2025 அன்று பள்ளியில் வைத்து அரிவாளால் வெட்டியுள்ளான்.
பென்சில் யாருடையது என்கிற பிரச்சினை கடந்த ஒரு மாத காலமாக இருவருக்குள்ளும் இருந்து வந்துள்ளதாகவும் அதனால் இந்த சம்பவம் நடந்துள்ளதாகவும் போலீஸ் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. தன்னுடைய புத்தகப்பையில் அரிவாளை மறைத்து வைத்திருந்த இசக்கிமுத்து ரஹ்மத்துல்லாவை எதிர்பாராத தருணத்தில் பின்னால் இருந்து தலையில் வெட்டியிருக்கிறான். தலை மட்டுமல்லாது கைகளிலும் வெட்டுப்பட்டுள்ளது. இதைத் தடுக்க வந்த ஆசிரியரையும் மாணவன் இசக்கிமுத்து வெட்டியுள்ளான். இச்சம்பவத்தில் தானே போலீசில் இசக்கிமுத்து சரணடைந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் இதன் உண்மைத் தன்மை நிரூபிக்கப்பட்டதாக இல்லை. வெட்டுப்பட்ட ரஹ்மத்துல்லாஹ் மற்றும் ஆசிரியை இருவரும் ஜெயராஜ் அன்னபாக்கியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொடூரச் சம்பவத்தை மக்கள் அதிகாரக் கழகம், திருநெல்வேலி-தூத்துக்குடி மாவட்டம் வன்மையாகக் கண்டிக்கிறது!
சென்ற மாதம் மாணவன் தேவேந்திரராஜா சாதிவெறியால் வெட்டப்பட்டது, அதற்கு முன் மாணவன் சின்னதுரை மீது சாதி வெறி தாக்குதல் நடத்தப்பட்டது ஆகியவை பெற்றோர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்த சூழலில் தற்போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஏற்கெனவே நெல்லை டவுண் சாஃப்டர் பள்ளியில் இதே மாதிரியான ஒரு சம்பவம் நடைபெற்ற சூழலில் பள்ளி மாணவர்களின் புத்தகப் பைகளைச் சோதித்து உள்ளே அனுமதிக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. அதையும் மீறி இச்சம்பவம் நடந்துள்ளது. இச்சம்பவம் சிறுவர்களுக்கு இடையிலான தகராற்றினால் ஏற்பட்டதல்ல. இந்த தாக்குதல் சம்பவம் ஆதிக்கச் சாதி மனப்பான்மையிலிருந்தே நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது நிச்சயம்.
படிக்க: நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்
சமீப காலமாக மாணவர்களிடையே நடந்துவரும் சாதி, மதத் தாக்குதல்கள் பண்பளவில் மாற்றம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது. 8 ஆம் வகுப்பு படிக்கும் 13 வயதே ஆன மாணவன் சாதாரண பென்சில் சம்பவத்திற்காக சக மாணவனை வெட்ட வேண்டும் என நினைப்பதும், புத்தகப் பையில் அரிவாளை மறைத்து எடுத்துச் செல்ல திட்டமிடுவதும், பள்ளியில் சக மாணவனை வெட்டுவதும் சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடியவை அல்ல.
ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆண்ட பரம்பரை சாதி வெறியூட்டப்படுகிறது. அதன் விளைவாகத் தான், பென்சில் என்றல்ல, எந்த ஒரு பிரச்சனை ஆயினும் “தன்னையே எதிர்க்கும் அளவிற்கு எதிராளிக்கு தைரியம் வந்துவிட்டதா?” என்ற ஆதிக்கச் சாதிவெறியிலிருந்து சிறு பிரச்சனைகளுக்குக் கூட கொலைவெறித் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
நெல்லையில் 2020 – 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் 285 சாதியப் படுகொலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக 60 சிறுவர்கள் உட்பட 145 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 392 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்கிற தகவலும் வெளியாகி உள்ளது.
இந்த சம்பவங்கள் அனைத்திலும் ஈடுபட்டவர்கள் 17 முதல் 25 வயதுடையவர்கள் என்பதே நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட இசக்கிமுத்துவுக்கு வயது 13 தான் என்பது இன்னும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சாதி, மதவெறி கண்ணோட்டம் அதன் அபாயத்தை நமக்கு உணர்த்துவதோடு அதனை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய தருணம் இது என்பதையும் உணர்த்துகிறது.
தமிழக அரசே!
-
- தென்மாவட்டங்களில் சாதிப் பிரச்சனையில்லை என்ற பாசாங்குத்தனத்தை தூக்கியெறிந்து அதன் உண்மைத்தன்மையைக் கண்டறிந்து தக்க நடவடிக்கை எடு!
- இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட சிறுவன் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்தவர்களைத் தண்டிக்க வேண்டும்.
- மாணவர்களிடம் நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளியிடப்பட்ட, நீதிபதி சந்துரு அவர்களின் பரிந்துரைகளை உடனடியாக தமிழ்நாடு முழுவதுமுள்ள பள்ளிகளில் நடைமுறைப்படுத்திடு!
- மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சாதிவெறியூட்டி வரும் ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தடை செய்!
- சாதி, மத ரீதியாக மக்களைப் பிளவுபடுத்தத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலைத் தடை செய்!
இந்த சம்பவத்திற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் இணைந்து குரல்கொடுப்போம். பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாகக் களத்தில் நிற்போம்.
பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்டம்.
93853 53605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram