17.04.2025

சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்:
களப்போராட்டங்களே தீர்வு தரும்!

2023-ஆம் ஆண்டு திருநெல்வேலி நாங்குநேரியைச் சேர்ந்த சின்னதுரை என்ற பள்ளி மாணவன், நன்றாகப் படித்த ஒரு காரணத்திற்காக சாதிவெறிப்பிடித்த சக மாணவர்களால் வெட்டப்பட்டார்.

இவ்வழக்கின் விசாரணை நடந்துகொண்டிருக்கும் போதே நேற்று (15 ஏப்ரல்) மீண்டும் ஐந்து பேர் கொண்ட சாதிவெறி கும்பலால் சின்னதுரை தாக்கப்பட்டிருக்கிறார். முதன்முறை வெட்டப்பட்ட வழக்கு விசாரணையில் சின்னதுரை சாட்சியம் அளித்த பின் இத்தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பதும், முதன்முறை வெட்டப்பட்ட அதே கையில் மீண்டும் தாக்கப்பட்டிருப்பதும் தமிழ்நாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சின்னதுரை முதன்முறை வெட்டப்பட்டபோது, பள்ளிகளில் சாதிய வன்முறைகளைத் தடுப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி சந்துரு குழுவின் பரிந்துரைகளை தி.மு.க. அரசு இன்றுவரை நடைமுறைப்படுத்தவில்லை. இதனால் சின்னதுரை போன்று பல தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் சாதியத் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் இன்று சின்னதுரையே மீண்டும் தாக்கப்பட்டிருக்கிறார்.

மேலும், தமிழ்நாட்டில் நடந்து வருகின்ற சாதிய படுகொலைகள், சாதிய தாக்குதல்களுக்குப் பின்னணியில் ஆதிக்கச் சாதி சங்கங்களும் ஆர்.எஸ்.எஸ். கும்பலும் இருக்கின்றன.  இது தெரிந்தும் அவற்றைத் தடை செய்யாமல், குறைந்தபட்ச நடவடிக்கை கூட எடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்துக் கொண்டிருக்கிறது தி.மு.க. அரசு. இதன் விளைவாகவே இன்று மீண்டும் சின்னதுரை தக்கப்பட்டிருக்கிறார். சின்னதுரை மீதான இந்த சாதியத் தாக்குதலுக்கு தி.மு.க. அரசே பொறுப்பு!

ஆனால், துளியளவும் நேர்மையுணர்ச்சி இன்றி “சின்னதுரையை வெட்டியது ஒரு பிக்பாக்கெட் கும்பல். அவரிடம் காசு இல்லை என்பதால் அவரை வெட்டியுள்ளது” என்று தமிழ்நாடு போலீசு டி.ஐ.ஜி. தெரிவித்துள்ளார். இது பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை தி.மு.க. அரசிற்கு இல்லை என்பதையும் பிரச்சினைகளை மூடி மறைக்க வேண்டும் என்பது மட்டுமே அதன் நோக்கம் என்பதையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது.

மேலும், சின்னதுரைக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் நண்பர்களைப் பார்த்துவிட்டு வருகிறேன் என்று போலீசிடம் சொல்லிவிட்டுச் சென்றதாகவும் போலீசு குறிப்பிட்டுள்ளது. சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காததை மறைப்பதற்காக சின்னதுரை மீது குற்றம் சொல்வது; பிக் பாக்கெட் என்று கதை சொல்வது போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இரண்டு நாட்களுக்கு முன்பு இதே திருநெல்வேலியில் எட்டாம் வகுப்பு படிக்கும் இஸ்லாமிய மாணவன் வெட்டப்பட்ட விவகாரத்தில் ‘பென்சில் கதை’ சொன்ன போலீசு இன்று சின்னதுரைக்கு ‘பிக்பாக்கெட் கதை’ சொல்கிறது. தமிழ்நாட்டில் தீர்ப்பு எழுதுவது நீதிமன்றங்களா? போலீசுதுறையா? தமிழ்நாட்டில் நடக்கும் ஒவ்வொரு சாதியத் தாக்குதல்களின் போதும், எந்தவித முறையான விசாரணையுமின்றி, உடனடியாக ஒரு மொண்ணையான காரணத்தைக் கூறி தமிழ்நாடு போலீசு மூலம் அவ்விவகாரத்தை மூடி மறைக்கிறது தி.மு.க. அரசு. இந்த போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

இவை அனைத்தையும் காட்டிலும் சின்னதுரையை இழிவுபடுத்தும் வேலைகள் தீவிரமாக நடந்துகொண்டிருக்கின்றன. முன்னதாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கபடி போட்டியில் வென்றதற்காக தேவேந்திரராஜா வெட்டப்பட்டபோது ‘இது காதல் விவகாரத்தினால் நடந்த தாக்குதல்’ என அவரை இழிவுபடுத்தும் வேலைகள் நடந்தன. தற்போது சின்னதுரை அவமானப்படுத்தப்படுகிறார். தலித் மக்கள் மீதான சாதியத் தாக்குதல்களின் போது அவர்களை போலீசு அவமானப்படுத்துவதும், குறிப்பாக தென்மாவட்ட போலீசு இந்நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாக்காத – குற்றவாளி ஆக்குகின்ற, குற்றவாளிகளைப் பாதுகாக்கின்ற தி.மு.க. அரசை நம்பி பயனில்லை. மாணவர்களாகிய நாம்தான் சாதிவெறியர்களுக்கு எதிராகவும் ஆதிக்கச் சாதி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்யக் கோரியும் களத்தில் இறங்கிப் போராட வேண்டும்.

தமிழ்நாடு அரசே,

  1. சின்னதுரையை வெட்டிய சாதிவெறியர்கள் மீது உடனே நடவடிக்கை எடு!
  2. சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்கு! வழக்கு விசாரணையை முறையாக நடத்து!
  3. நீதிபதி சந்துரு குழு அறிக்கையை உடனே நடைமுறைப்படுத்து!
  4. சாதிவெறி சங்கங்கள் – ஆர்.எஸ்.எஸ்-ஐ தடை செய்!


மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க