சின்னதுரைகளும், ரஹ்மத்துல்லாஹ்-களும் வெட்டப்படுவதைத் தடுப்பது எப்படி?

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

2023 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு படித்த தலித் மாணவர் சின்னதுரையை அவருடன் படித்த இரண்டு தேவர் சாதி மாணவர்கள் வீட்டிற்குள் புகுந்து அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த சின்னதுரை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தார்.

தமிழ்நாடெங்கும் ஜனநாயக சக்திகள் இதைக் கண்டித்து போராட்டங்கள் நடத்தினர்‌. தமிழ்நாடு அரசு நேரடியாகத் தலையிட்டு சின்னதுரைக்கு சிகிச்சை மற்றும் போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது.

ஆனால் தற்போது மீண்டும் சின்னதுரை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது‌. இதன் மூலம் தாக்குதல் நடத்தியவர்கள் சொல்ல வருவது என்ன?

சின்னதுரை மீதான இத்தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக உள்ளது. சின்னதுரையின் இன்ஸ்டாகிராம் முகவரி கண்டுபிடிக்கப்பட்டு, நண்பன் வேடத்தில் நுழைந்து நட்பை வளர்த்து தங்கை திருமணப் பத்திரிக்கை கொடுக்க என வரவழைத்து ஒரு கும்பல் தாக்கியுள்ளது. இப்படி வரவழைத்து சின்னதுரையைத் தாக்கியது ஏன்? இதன் மூலம் இந்த கும்பல் சொல்ல வருவது என்ன? யாரை அச்சமூட்ட இந்த தாக்குதல் நடத்தப்பட்டது?

வட மாநிலங்களில் தொடர்ச்சியாக இந்துத்துவ கும்பல் இஸ்லாமியர்கள் மீது கொலைவெறித் தாக்குதலைத் தொடுத்து தன்னை வெல்ல முடியாத ஒரு பாசிச சக்தியாக இஸ்லாமியர்கள் மத்தியில் பதிய வைக்க முயற்சி செய்கிறது. அதேபோல் தென்மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி இந்துத்துவ கும்பல் ஆதிக்கச் சாதி சங்கங்களைத் தூண்டிவிட்டு அதன் மூலம் தலித் மக்கள் மீதான தாக்குதலை அதிகரித்து கால் பதிக்க முயல்கிறது. இந்த வகையில் ஆதிக்கத்தை எதிர்க்கும் தலித் மக்களுக்கும், ஜனநாயக சக்திகளுக்கும் எச்சரிக்கை விடுக்கிறது. உளவியல் ரீதியாக வீழ்த்துவதற்கு முயல்கிறது.

“முந்தைய சாதித் தாக்குதலுக்கும், தற்போதைய தாக்குதலுக்கும் சம்பந்தமில்லை. இது தனி விவகாரம்” என போலீசு துணை ஆணையர் சந்தோஷ் கூறுகிறார்.

சின்னதுரையின் மீது முந்தைய தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்ட போது தேவர் சாதி சங்கங்கள், இது சாதிப் பிரச்சினை கிடையாது, தனிப்பட்ட மாணவர்களுக்கு இடையிலான மோதல் என சித்தரிக்க முயன்றன. தி.மு.க அரசோ, தலித் மக்கள் மீதான ஆதிக்கச் சாதி வெறியர்களின் தாக்குதல் என்ற அடிப்படையிலிருந்து இந்தப் பிரச்சினையை அணுகவில்லை.

நீதிபதி சந்துரு தலைமையில் ஒருநபர் ஆணையத்தை நியமித்து அந்த அறிக்கையைக் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆன சூழ்நிலையிலும் நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டுள்ளது‌.

இந்த காலகட்டத்தில் தலித் மாணவர்கள் மீது மட்டுமல்ல, தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறி தாக்குதல்களும் மூர்க்கமாகியுள்ளன. தி.மு.க அரசு, பள்ளியிலிருந்து இந்த நடவடிக்கையைத் தொடங்கியிருந்தால் அது ஒரு ஆக்கப்பூர்வமான ஆரம்பமாக இருந்திருக்கும். ஜனநாயக சக்திகள் மற்றும் மக்களின் எண்ணமும் இதுவாகவே இருக்க, தி.மு.க அரசோ நீதிபதி சந்துரு பரிந்துரைகளை அமல்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை.

தி.மு.க அரசு இதை அமல்படுத்துவது என்பது சந்தேகமே. இதை அமல்படுத்த வேண்டுமானால் முதலில் தென்மாவட்டங்களில் சாதியத் தாக்குதல் இருப்பதாக அது ஒப்புக் கொள்ள வேண்டும். தி.மு.க அரசை ஒப்புக் கொள்ள வைக்கவே இங்கு மிகப் பெரிய போராட்டத்தை நடத்த வேண்டியிருக்கிறது என்பதே எதார்த்தம்.

தேவேந்திர ராஜா தாக்கப்பட்ட போது தி.மு.க-வின் கனிமொழி, அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் ஆகிய எவரும் மருத்துவமனையில் வந்து பார்க்கவில்லை. இதைக் கண்டித்து ஒரு அறிக்கை கூட கொடுக்கவில்லை‌. இப்பகுதியைச் சேர்ந்த சபாநாயகர் அப்பாவு ஒரு படி மேலே சென்று தென்மாவட்டங்களில் சாதியத் தாக்குதலே இல்லை என்று அறிக்கை அளித்தார். ஊடகங்களும் பரபரப்பான செய்தியோடு தம் கடமையை முடித்துக் கொள்கின்றன. இதன் மூலம் ஆளும் வர்க்கத்திற்கு துணை போகின்றன.

தற்போது ரஹ்மத்துல்லாஹ் என்கிற 8 ஆம் வகுப்பு மாணவன் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட போதும் தி.மு.க-வின் பார்வை மாறவில்லை‌. மௌனம் கலையவில்லை.

தொடர்ந்து இந்த தாக்குதலுக்கு பலியாவது தலித் மக்களாகவும், தாக்குதல் தொடுப்பது தேவர் சாதியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

இதன் பின்னணியில் தேவர் சாதி சங்கங்களும், அவர்களின் பின்னால் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலும் உள்ளது.


படிக்க: எட்டாம் வகுப்பு மாணவன் மீதான தாக்குதல்: சாதிவெறி போதையின் உச்சம்!


தலித் மக்கள் பாதிக்கப்படுவதோடு, ‘ஆதிக்க சாதியைச்’ சேர்ந்த மாணவர்கள் கையில் அரிவாளைக் கொடுத்து, இளம் குற்றவாளிகளாக்கி அவர்களது எதிர்காலத்தை இருட்டில் தள்ளுகின்றன ஆதிக்கச் சாதி வெறி சங்கங்கள். இந்த ஆதிக்கச் சாதி வெறி சங்கங்களை எதிர்த்து அந்த ‘சாதியைச்’ சேர்ந்த உழைக்கும் மக்கள் ஓரணியில் திரண்டு இவர்களை முறியடிக்க வேண்டும்.

மறுபுறம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பல்கள், ஆதிக்கச் சாதி சங்கங்கள், அதிகார வர்க்கம், தி.மு.க ஆகிய அனைவரும் ஒரே குரலில் பேசுகிறார்கள். தலித் மக்கள் மீதான ஆதிக்க சாதிவெறித் தாக்குதல் நடைபெறுகிறது என்பதை மூடி மறைக்கிறார்கள்.

சமூகநீதி பேசும் தி.மு.க, ஆர்.எஸ்.எஸ்-இன் பாசிசத் தாக்குதலைத் தடுக்காமல் வேடிக்கை பார்க்கிறது.

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து களத்தில் இறங்க வேண்டிய முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம்.

ரஹ்மத்துல்லாஹ் வெட்டப்பட்ட போது தடுக்கச் சென்ற ஒரு ஆசிரியையும் தாக்கப்பட்டுள்ளார். மாணவர்கள் மத்தியில் சாதியின் பெயரில் உயிர்ப்பலி ஏற்படாமல் தடுக்க வேண்டுமானால் ஆசிரியர் சமூகமும் மேற்கண்ட கோரிக்கைகளுடன் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும். பெற்றோர்களிடம் இதை வலியுறுத்தி ஒன்றிணைய வேண்டும்.

நீதிபதி சந்துரு அறிக்கையை நடைமுறைப்படுத்துவது போன்ற குறைந்தபட்ச‌ சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குக் கூட அரசாங்கத்தை நிர்ப்பந்திக்கும் வகையிலான போராட்டங்களை மக்கள் முன்னெடுக்க வேண்டியுள்ளது.

மக்களிடத்தில் சாதிவெறியைத் தூண்டிவிடும் அனைத்து ஆதிக்கச் சாதி சங்கங்களையும் அதன் பின்னால் செயல்பட்டுவரும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க காவிக் கும்பலையும் தடை செய்ய வேண்டும் என்ற முழக்கத்துடன் வீரியமிக்க போராட்டங்களை அனைத்து தரப்பு மக்களும் ஒன்றிணைந்து கட்டியமைக்கும் போது மட்டும் தான் சாதிவெறித் தாக்குதல்கள் தடுத்து நிறுத்தப்படும்.

மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் முற்போக்கு, ஜனநாயக சக்திகள், உழைக்கும் மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு களத்தில் இறங்கி உறுதியுடன் போராடுவது ஒன்றே சாதிவெறித் தாக்குதல்களைத் தடுப்பதற்கு ஒரே தீர்வாகும்!

இனியும் தாமதிக்காமல் உடனடியாக களம் காண்போம்! சாதி ஆதிக்கத்தை வேரறுப்போம்!


பதிவு
மக்கள் அதிகாரக் கழகம்,
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டம்.
93853 53605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க