விலை உயர்வுக்கு ஏற்றவாறு கூலி உயர்வு வழங்கக் கோரி திருப்பூர், கோவை விசைத்தறி நெசவாளர்கள் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் தற்போது வரை தி.மு.க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.
கடந்த காலங்களில் திருப்பூர், கோவை மாவட்டங்களில் விசைத்தறியின் சத்தம் என்பது உழைப்பின் சங்கீதமாகவே பார்க்கப்பட்டு வந்தது. நள்ளிரவு நேரத்திலும் வானொலியில் பாடல்களைக் கேட்டபடி தறிகளை இயக்கிக் கொண்டிருந்தவர்கள் தான் இந்த விசைத்தறி நெசவாளர்கள். ஆனால் பின்பு ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று, அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி போன்றவற்றிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்தனர்.
ஆனால் நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் விதமாக நூல், உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், விலைவாசி உயர்வினால் நெசவாளர்களுக்கு கீழ் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்திக் கொடுக்க வேண்டியுள்ளது. இது தற்போது நெசவாளர்களுக்கு கழுத்திற்குக் கீழ் தொங்கும் கத்தியாக மாறியுள்ளது. இதனால் தற்போது பகல் நேரத்திலேயே பெரும்பாலான விசைத்தறிக் கூடங்கள் செயல்படாமல் பூச்சிகள் கூடுகட்டும் அளவிற்கு விசைத்தறி நெசவாளர்களின் நிலைமை மோசமாகியுள்ளது.
எனவே, தங்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்காக மின் கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு, உதிரிப்பாகங்களின் உயர்வு போன்றவற்றிற்கு ஏற்ப கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி தொழிலாளர்கள் 15 மாதங்களாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜவுளி உற்பத்தியாளர்களுடன் 16 முறை பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டுள்ளது. சோமனூர், தெக்கலூர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் ஆர்ப்பாட்டங்களையும் நடத்தியுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து 150 கிராமங்களில் 10.ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத்தறிக் கூடங்களில் கறுப்புக் கொடி ஏற்றுதல், மாவட்ட ஆட்சியர்களுடனான பேச்சுவார்த்தை என பல்வேறு போராட்டங்களை நடத்தியும் ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலி உயர்வு வழங்க மறுத்து வருகின்றனர்.
படிக்க: கோவை, திருப்பூர் விசைத்தறியாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் வெல்லட்டும்!
இந்நிலையில் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்கள் சங்க கூட்டமைப்பின் முடிவின்படி கடந்த மார்ச் 19 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டத்தினால் 2.5 லட்சம் தறிகளை நம்பி வேலை செய்யும் 5 லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழ்நாடு முதல்வர், மாவட்ட நிர்வாகங்களின் கவனத்தை ஈர்க்க கருமத்தம்பட்டி நகரில் கடந்த ஏப்ரல் 11-15 தேதி வரை உண்ணாவிரதப் போராட்டத்தையும் நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 15 ஆம் தேதி அன்று கோவை மற்றும் திருப்பூர் புறநகர்ப் பகுதிகளான சோமனூர், சாமளாபுரம், காரணம்பேட்டை, கருமத்தம்பட்டி, தெக்கலூர், அவிநாசி, கண்ணம்பாளையம், புதுப்பாளையம், பெருமாநல்லூர் ஆகிய பகுதிகளில் முழு கடையடைப்புக்கு வியாபாரிகள் சங்கங்கள் மற்றும் விசைத்தறியாளர் சங்க கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்தன.
அறிவிப்பின்படி (15.04.2025) அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அப்பகுதிகளில் செயல்பட்டு வருகின்ற மருந்தகங்களைத் தவிர்த்து அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு கடையடைப்பு போராட்டத்தினையும் நடத்தியுள்ளனர். இவ்விவகாரத்தில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தலையிட்டு, முத்தரப்பு பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமெனவும், விசைத்தறித் தொழிலைப் பாதுகாக்க வேண்டுமெனவும் விசைத்தறி நெசவாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பண்பாட்டுத் தொழில்களில் நெசவுத் தொழிலுக்கும் முக்கிய பங்குண்டு. எனவே, நெசவுத் தொழிலையும், நெசவாளர்களையும் பாதுகாப்பதற்கு அனைத்துவகை தொழிலாளர்களும் நெசவாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். அதன் மூலமே தி.மு.க அரசுக்கு அழுத்தம் கொடுத்து நெசவாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும். அதுவே அவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றும்.
ஆசாத்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram