அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பின் முதலாவது மாநில மாநாடு 2022 ஜனவரி மாதத்தில் நடத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்த மூன்றாண்டுகளில், இந்திய ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி-அமித்ஷா தலைமையிலான பார்ப்பனிய-கார்ப்பரேட் பாசிசத்திற்கெதிராக எமது அமைப்பு தொடர்ச்சியாக பல போராட்டங்களை நடத்தி ஜனநாயக சக்திகளின் நம்பிக்கையைப் பெற்றது; எமது அமைப்பும் விரிவடைந்தது.
இந்த மூன்றாண்டு அனுபவங்களிலிருருந்து எமது அமைப்பின் கொள்கை அறிக்கையை செழுமைப்படுத்தியும் புதிய தோழர்களை தலைமைக்குக் கொண்டுவரும் வகையிலும் எமது அமைப்பின் இரண்டாவது மாநில மாநாடு 2025 ஏப்ரல் மாதம் 15-ஆம் தேதி அன்று மதுரையில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.
புதிய கொள்கை அறிக்கையையும் அமைப்பு விதிகளையும் வகுத்தளித்த இந்த மாநாட்டில் எமது அமைப்பானது, மக்கள் அதிகாரக் கழகம் என்ற பெயர் மாற்றத்துடன் ஓர் அரசியல் கட்சியாக தன்னை கட்டமைப்பு மாற்றம் செய்து கொண்டு பாசிசத்திற்கெதிராக மக்களைத் திரட்டிச் செயல்பட உறுதியேற்றது. புதிய செயற்குழுவும் தலைமைக் குழுவும் இம்மாநாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டது.
இம்மாநாட்டின் இறுதியில் நடைபெற்ற மாநாட்டுத் தீர்மான விளக்கக் கருத்தரங்கில் பல்வேறு ஜனநாயக சக்திகள் பங்கேற்று வாழ்த்துகளை வழங்கினர்.
இம்மாநாட்டின் தீர்மானங்கள்
9. ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என பல நாடுகளில் வேகமாக வளர்ந்து வருகிறது. இப்பாசிசக் கும்பல் வளர்ந்துவரும் இந்நாடுகளில் மதம் மற்றும் சாதி வன்முறைக் கலவரங்களும் அரங்கேறியுள்ளது. மேலும், அகண்ட பாராத கொள்கையைக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பல் தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் குரலாக இந்தியாவை முன்னிறுத்தி வருகிறது. இலங்கை, மாலத்தீவு உள்ளிட்டு அண்டை நாடுகளில் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.
எனவே, இப்பாசிசக் கும்பலை வீழ்த்துவது என்பது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள நாடுகளின் விடுதலைக்கு முதன்மை கடமையாகவும் தேவையாகவும் உள்ளது. அதேபோல் இப்பாசிச கும்பலின் வளர்ச்சி உலக முழுவதுமுள்ள உழைக்கும் மக்களுக்கும் ஓர் அச்சுறுத்தல் என்பதால், ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிசக் கும்பலை வீழ்த்துவதற்கான போராட்டத்திற்கு உலக மக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.
10. உலகம் முழுவதிலுமுள்ள அரிய கனிமங்களை கைப்பற்றுவதிலும், விண்வெளியை கைப்பற்றுவதற்கான போட்டாபோட்டியிலும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசக் கும்பல் முன்னேறி வருகிறது. அதானியின் கார்ப்பரேட் கொள்ளைக்கு எதிராக உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் அதிகரித்து வருகின்றன. ஆகவே, ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க.; அம்பானி – அதானி பாசிசக் கும்பலை வீழ்த்துவது என்பது இந்திய உழைக்கும் மக்களின் விடுதலைக்கானது என்பதுடன் உலக முழுவதிலுமுள்ள மக்களின் உரிமைகள் மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பதுடன் தொடர்புடையதாகும் என இம்மாநாடு அறிவிக்கிறது.
11. தேர்தல் ஆணையம், நீதித்துறை, நாடாளுமன்றம் போன்ற அரசுக் கட்டமைப்பு நிறுவனங்களின் மூலமாகவே, மூன்று புதிய குற்றவியல் சட்டங்கள், தொழிலாளர் சட்டத் திருத்தம், மூன்று வேளாண் சட்டங்கள், ஒரே நாடு – ஒரே தேர்தல், தொகுதி மறுவரையறை, ஜி.எஸ்.டி., தேசிய கல்விக் கொள்கை போன்ற பற்பல பாசிச நடவடிக்கைகளும் செயல்திட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆகவே, இப்பாசிசக் கும்பலை தேர்தல் பாதையின் மூலமாக அல்ல, இக்கட்டமைப்பிற்கு வெளியே மக்கள் எழுச்சியைக் கட்டியமைத்து ஒரு மாற்று அரசியல் – பொருளாதார – சமூகக் கட்டமைப்பான பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசை நிறுவுவதன் மூலம்தான் வீழ்த்த முடியும் என்று என் இம்மாநாடு அறிவிக்கிறது.
12. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கான பேரிடர் நிதி, கல்வி நிதி வழங்காமல் வஞ்சித்து வரும் ஒன்றிய மோடி அரசின் பாசிச சர்வாதிகாரப் போக்கை இம்மாநாடு கண்டிக்கிறது.
13. கொலீஜியம் முறையை ஒழித்துக்கட்டி நீதித்துறையை கைப்பற்றுவதன் மூலமாக பாசிசத்தை அரங்கேற்றத் துடிக்கிறது பாசிசக் கும்பல். இதன்மூலம், சிறுபான்மையினர் மற்றும் பெண்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல்களை சட்டப்பூர்வமாக்கப் பார்க்கிறது. அதேபோல், அரசு கட்டமைப்புகளின் அனைத்து நிலைகளிலும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் திட்டமிட்டு ஊடுருவி வருகிறது. இவ்வாறு, அரசுக் கட்டமைப்புகளில் ஊடுருவியிருக்கும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்கப் பரிவாரக் கும்பலை அகற்ற வேண்டும் என்று இம்மாநாடு அறிவிக்கின்றது.
14. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் “வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2025”-யை நிறைவேற்றியிருக்கிறது பாசிச பா.ஜ.க அரசு. நாடு முழுவதுமுள்ள பல லட்சக்கணக்கான கோடி மதிப்புள்ள வஃக்பு சொத்துக்களை கொள்ளையடித்து, அதன்மூலம் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்துவதற்காக பாசிசக் கும்பல் இச்சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இஸ்லாமிய மக்களை இரண்டாந்தர குடிமாக்களாக்கி இன அழிப்பு செய்வதே இதன் நோக்கமாகும். இச்சட்டத் திருத்தத்தை இரத்துச் செய்ய வைப்பற்கான மக்கள் போராட்டங்களைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று இம்மாநாடு அறைகூவல் விடுகிறது.
15. பொதுவெளியில் தொழுகை நடத்தத் தடை; பாங்கு ஓதத் தடை; ரமலான் விடுமுறை இரத்து; இறைச்சி உணவு விற்கவும், உண்ணவும் தடை; புல்டோசர் வைத்து வீடுகளை இடிப்பது போன்ற பாசிச நடவடிக்கைகள் மூலம் சிறுபான்மையின மக்களையும், தலித் மக்களையும் அறவே ஒழித்துக்கட்டும் இப்பாசிசக் கும்பலுக்கு எதிராக மக்கள் போராட்டங்களைக் கட்டியமைக்க வேண்டும் என்று மாநாடு அறைக்கூவல் விடுக்கிறது.
16. இந்தியா முழுவதுமுள்ள கனிம வளங்களை கொள்ளையடிப்பதற்காக பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் வனப் பாதுகாப்புச் சட்டத்திருத்தம், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் திருத்த மசோதா ஆகியவற்றை முறியடிக்க வேண்டும்; சாகர் மாலா போன்ற நாசகரத் திட்டங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.
17. மணிப்பூரில் கடந்த 2023-ஆண்டு ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் திட்டமிட்டு தொடங்கப்பட்ட கலவரம் தற்போதுவரை நீடித்து வருகிறது. இன்றுவரை இந்நாட்டின் பிரதமராக இருக்கும் மோடி மணிப்பூருக்கு செல்லவில்லை. இக்கலவரத்தில் குக்கி பழங்குடியின மக்கள் பெருமளவில் சித்தரவதைக்குள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். குக்கி பழங்குடியின பெண்கள் மீதான பாலியல் வன்முறை வெறியாட்டங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. குக்கி மக்களிடம் உள்ள மலைப்பகுதியைக் கைப்பற்றி அதன் கனிம வளங்களை அதானி-அம்பானி கும்பலுக்கு படையலிடுவதற்காக பா.ஜ.க. பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் இச்சதி நடவடிக்கைகளைக் கண்டிப்பதோடு, இப்பாசிசக் கும்பலுக்கு எதிராக குக்கி இன மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு இம்மநாடு ஆதரவளிக்கிறது.
18. “ஆப்ரேஷன் ககர்” என்ற பெயரில், 2023 டிசம்பர் முதல் தற்போதுவரை மோடி-அமித்ஷா கும்பலின் இராணுவ நடவடிக்கைகளின் மூலம் எண்ணற்ற பழங்குடியின மக்களும் மாவோயிஸ்டுகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளதை இம்மாநாடு கண்டிக்கிறது. மேலும், காடுகளிலுள்ள வளங்களை கொள்ளையடிப்பதற்காக நக்சல் அழிப்பு என்ற பெயரில், பழங்குடி மக்களை வேட்டையாடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.
19. ஊபா, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளை வேட்டையாடுவது, கால வரையறையின்றி சிறையிலடைப்பது, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்துவது; சிறையிலடைப்பது ஆகிய பாசிச நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது.
20. நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவாரக் கும்பலுக்கு எதிராகப் போராடிய களப்பணியாற்றிய கௌரி லங்கேஷ், கல்புர்கி உள்ளிட்டோர் சனாதன் சன்ஸ்தா போன்ற ரகசிய காவிக் குண்டர் படைகள் மூலம் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டனர். பேராசியர் சாய்பாபா, சமூக செயற்பாட்டாளார் ஸ்டேன் சுவாமி சமூக செயற்பாட்டாளர்கள் – அறிவுஜீவிகள் பலரும் கருப்புச் சட்டங்கள் மூலம் சிறையிலடைக்கப்பட்டு சித்தரவதை செய்யப்பட்டனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஸ்டேன் சுவாமி அரசு பயங்கரவாதத்தால் உறிஞ்சுக் குழாய் மறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இதுபோன்று பாசிச கும்பலின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஈகத்துடனும் தீரத்துடனும் போராடி, சித்தரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த போராளிகளுக்கு மக்கள் அதிகாரக் கழகம் வீரவணக்கம் செலுத்துகிறது.
(தொடரும்…)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram