இராம நவமி: பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியான திரிணாமுல் காங்கிரசு

மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

டந்த ஏப்ரல் 6 அன்று மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ராமநவமி ஊர்வலங்கள் நமக்கு எதை உணர்த்துகின்றன?

ஒரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி சங்கப் பரிவார கும்பல் இந்துமதப் பண்டிகைகளை, கலவரம் செய்வதற்கான முகாந்திரமாகப் பயன்படுத்தி வருவதும், அதன் மூலம் மக்களிடம் மதவெறியைக் கிளப்பி அரசியல் ரீதியாக அறுவடை செய்வதற்கு வெறிபிடித்துத் திரிவதும் நாம் அறிந்ததே.

இந்த ஆண்டின் இராமநவமியையும் இந்த நோக்கத்தில்தான் பாசிச கும்பல் கையாண்டது. குறிப்பாக, மேற்கு வங்கத்தை மையமான நிகழ்ச்சி நிரலுக்கான களமாகப் பயன்படுத்திக் கொண்டது. வரவிருக்கும் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலை மையப்படுத்தி இந்நிகழ்ச்சி நிரல் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

மேற்கு வங்கத்தின் பல பகுதிகளில் காவிக் கும்பலால் பேரணிகள் நடத்தப்பட்டன. பி.ஜே.பி தலைவர் சுவேந்து அதிகாரி, நந்திகிராமில் உள்ள சோனாச்சுராவில் உள்ள கோயில் தளத்திற்குச் சென்று புதிதாக இராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.

ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி சார்பாக, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப கட்டிடத்தில் ராமநவமி நிகழ்வுகள் அரங்கேற்றப்பட்டன. முற்போக்கு மாணவர்கள் அமைப்புகளின் “ஆசாத் காஷ்மீர்” உள்ளிட்ட முழக்கங்கள் அடங்கிய சுவரெழுத்துகள், பதாகைகளை வேண்டுமென்றே மறைத்தனர். பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்திருந்த போதிலும் இந்நிகழ்வு நடந்தது என்பது முக்கியமானது. இந்நிகழ்வில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் சங்கி பேராசிரியர்களும், முன்னாள் துணைவேந்தர் புத்ததேவ் சாவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பல்வேறு இடங்களில் தடைகளை மீறி பேரணிகள் நடத்தப்பட்டன. கொல்கத்தாவில் மட்டும் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் பேரணிகள் நடத்தப்பட்டன. “இராமநவமி ஊர்வலங்களைத் தொந்தரவு செய்யும் எந்தவொரு முயற்சியையும் பொறுத்துக் கொள்ள மாட்டோம்” என்று பகிரங்கமாக மிரட்டினார், மாநில பா.ஜ.க தலைவர் சுகந்தா மஜூம்தார். ஆர்.எஸ்.எஸ், விஹெச்பி, இந்து ஜாக்ரன் மஞ்ச் உள்ளிட்ட காவிக் கும்பல்களும் பேரணிக்கு ஆட்களைத் திரட்டின.


படிக்க: ‘இராம நவமி’யை கலவர நாளாக மாற்றும் சங்கப் பரிவார கும்பல்


பாசிச கும்பல், தனது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப இந்நிகழ்வை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டது. அதேசமயம், ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசும் மிகப்பெரிய அளவில் ராமநவமி கொண்டாட்டங்களை முன்னெடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஜோராசங்கோவைச் சேர்ந்த திரிணாமுல் காங்கிரசு எம்.எல்.ஏ விவேக் குப்தா, புர்ராபஜாரின் ராஜாகத்ராவில் உள்ள அனுமன் கோவிலிலிருந்து சி.ஆர்.அவென்யூவில் உள்ள ராம் மந்திர் வரையிலான மிகப்பெரிய பேரணி ஒன்றை வழிநடத்தினார்.

இந்த வருடத்தின் பேரணிகள் அமைதியாக நடந்ததாக, மேற்கு வங்க போலீசு கூறுகிறது. உண்மையில் இந்துத்துவ பாசிச கும்பலின் மிரட்டலுக்கு போலீசு பணிந்திருக்கிறது என்பதுதான் உண்மை. உண்மையான நிலவரங்கள் வெளியில் போகாத வண்ணம் ’கோடி’ (Godi) மீடியாக்கள் பார்த்துக் கொண்டன என்றுதான் சொல்ல வேண்டும். மேற்கு வங்க மரபிற்கும், இராமநவமிக்கும் எந்த ஒரு வரலாற்றுத் தொடர்பும் இல்லையென்றபோதும், பாசிச கும்பல் தனது அரசியல் நோக்கத்தை ஈடேற்றும் வகையில் இராம நவமி கொண்டாட்டங்களை மக்களிடம் திணித்து, மேற்கு வங்கத்தில் நடத்தி முடித்துள்ளது என்பதுதான் நிதர்சனம்.

கலவரத்தைத் தூண்டும் வகையில் பேசும் பி.ஜே.பி தலைவர்களைக் கைது செய்து சிறையில் அடைக்கத் துப்பற்றுக் கிடந்தது, மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரசு அரசு. மேற்கு வங்கத்தின் துர்க்கையை வழிபடும் மரபிற்கும், அதன் மதச்சார்பற்ற தன்மைக்கும் எந்தத் தொடர்பும் இல்லாத இராமநவமி பேரணிகளைத் தடை செய்வதற்குப் பதிலாக, இந்துத்துவ கும்பலின் நிகழ்ச்சி நிரலுக்குப் பலியாகியிருக்கிறது திரிணாமுல் காங்கிரசு கட்சி.

பாசிச கும்பலை வீழ்த்துவதற்கு ஏற்ப, மாற்றுக் கொள்கை, மாற்றுத் திட்டங்களை முன்வைக்காமல் திரிணாமுல் காங்கிரஸ் இருப்பதென்பது கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம். இதுபோன்ற செயல்பாடுகள் 2026 மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில், பாசிச பா.ஜ.க கும்பல் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்வதாக அமையும் என்பதே உண்மை.

பி.ஜே.பி-யை எதிர்க்கின்ற கட்சிகள் அனைவரும் சிந்திக்க வேண்டிய இடமும் இதுவே.


லெபா ராடிக்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க