அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க

கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!

எல்லா கட்சிகளையும் பாஜக தான் பின்னிருந்தும், உடனிருந்தும் ஆட்டுவித்துக் கொண்டிருக்கிறது…!

பாருங்கள், கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!

தமிழக மக்கள் நலன் சார்ந்து போராட எவ்வளவோ விவகாரங்கள் உயிர்ப்போடு இருக்கின்றன;

நீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்தலாம்.

மேக்கேதாட்டு அணைக்கு எதிராக போராட்டம் நடத்தலாம்.

இந்தி திணிப்புக்கு எதிராக போராட்டம் நடத்தலாம்!

ஆளு நரின் அட்ராசிட்டிக்கு எதிராக போராட்டம் நடத்தலாம்.

தமிழகத்திற்கு போதுமான நிதியை ஒதுக்க போராட்டம் நடத்தலாம்.

வக்பு மசோதாவுக்கு எதிராக போராட்டம் நடத்தலாம்!

திமுக உங்கள் எதிரி என்கிறீர்கள்! திமுக அரசின் ஊழல்களை சொல்லி போராட்டம் நடத்தலாம்!

இது போல மக்கள் நலன் சார்ந்த விவகாரங்களுக்காக அதிமுகவிற்கு ஏன் போராடத் தோன்றவில்லை.?

அதையெல்லாம் விட்டுவிட்டு, இந்து மதத்திற்கு எதிரான பொன்முடி பேசியதற்கு எதிராக போராட்டமா?

இதைப் பேசவும், போராடவும் பாஜகவும் இந்து இயக்கங்களும் தான் உள்ளார்களே- பொன்முடிக்கு எதிராக ஒரு கண்டண அறிக்கையே போதுமானதே!

பொன்முடியை என்ன செய்ய வேண்டும் என்பதை பாஜகவே பார்த்துக் கொள்ளும்.

ஏனென்றால், தனக்கு பிடிக்காதவர்களை திமுகவில் கீழிறக்கம் செய்ய வைக்க பாஜகவுக்கு தெரியாதா என்ன?

நிர்மலா சீதாராமனுக்கும் எதிராகவும் ,ஜக்கி வாசுதேவிற்கு எதிராகவும் சிம்மக் குரல் கொடுத்த சிங்கார மதுரையின் மைந்தன் பி.டி.ஆர் நிலை என்னானது?

பாஜகவின் இந்துத்துவாவை பாய்ந்து,பாய்ந்து சட்டசபையில் வெளுத்து வாங்கிய மனோ தங்கராஜ் பின்னுக்கு தள்ளப்பட்டாரே!

பாஜகவின் மதவாத நோக்கங்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வந்த தர்மபுரி எம்.பி செந்தில் குமாருக்கு அடுத்து போட்டியிடும் வாய்ப்பே மறுக்கப்பட்டதே.

ஏற்கனவே ஆளுநர் ரவியை கடுமையாக எதிர்த்ததில் தான் பொன்முடிக்கு உயர் கல்வித் துறை பறிக்கப்பட்டது.

பாஜகவை கொள்கை ரீதியாக வெளுத்து வாங்கும் ஆ.ராஜா நிலை அந்தக் கட்சியில் தற்போது என்ன..?

அந்த வகையில் பொன்முடியிடமிருந்து அமைச்சர் பதவியை பறிக்கும் பொலிடிகல் இன்ஜினியரிங்.. என்னவென்று பாஜகவிற்கு நன்றாகவே தெரியும்.

இன்னொரு பக்கம் அதிமுக – பாஜக கூட்டணி பற்றி விமர்சிக்காமல் திமுக எதிர்ப்பையே பிரதானமாக்கி அறிக்கை விட்டுள்ளார் விஜய்!

தமிழகத்தை பொறுத்த வரை அதிமுக தலைமையை பாஜகவே ஏற்றுக் கொண்ட நிலையில், அதிமுகவை ஏதோ களத்திலேயே இல்லாத அளவுக்கு அலட்சியம் காட்டி, திமுகவையும், பாஜகவையும் எதிர்ப்பதே தன் நோக்கம் என்கிறார் விஜய்.

தமிழகத்தை திமுக – அதிமுக என்ற நிலையில் இருந்து, திமுக – பாஜக என்ற போலரைசேஷனுக்கு மாற்றுவது தான் பாஜகவின் இலக்கும். இதை நடைமுறைப்படுத்தவே விஜய்யும் தூண்டப்பட்டுள்ளார் எனத் தோன்றுகிறது.

ஏற்கனவே திமுக எதிர்ப்பு என்ற ஒற்றை அஜந்தாவைத் தான் சீமானும் செய்யத் தூண்டப்பட்டுள்ளார்!

யார், யாருக்கு நண்பர்

யார், யாருக்கு உண்மையான எதிரி

என உணரமுடியாத அளவுக்கு சூதும், வாதுமாக உள்ளது தற்போதைய அரசியல் களம்!

ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா!

அதிகாரமெனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணா!


முகநூலில்: சாவித்திரி கண்ணன்

disclaimerசமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram


விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க