ஏப்ரல் 3 – பெருங்காமநல்லூர் படுகொலை என்பது குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக போராடிய பிரமலைக் கள்ளர் சாதி மக்களை பிரிட்டிஷ் அரசு சுட்டுக் கொன்ற நிகழ்வைக் குறிப்பதாகும். தென்னக ஜாலியன் வாலாபாக் என்று குறிப்பிடப்படும் இந்நிகழ்வில் மாயாக்காள் என்ற பெண் உட்பட 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர்.
குற்றப்பரம்பரைச் சட்டம் என்பது, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியின்போது, குறிப்பிட்ட சாதிகளுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒரு சட்டம். முதன்முதலில், இந்தச் சட்டம் வங்காளத்தில், 1871 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ம் தேதி நிறைவேற்றப்பட்டது. சென்னை மாகாணத்தில் 1911 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இயற்றப்பட்ட நாளிலிருந்து பல சட்டத்திருத்தங்களுக்கு உள்ளாகி, இறுதியாக 1924 ஆம் ஆண்டு இந்தியா முழுவதும் ஒரே சட்டமாக அமல்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரிட்டிஷ் அரசு, இந்தியா முழுவதும் உள்ள 213 சாதிகளைக் குற்றப் பரம்பரைச் சட்டத்தின் கீழ் கொண்டு வந்தது.
இந்தச் சட்டத்தின்படி, மாவட்ட ஆட்சித் தலைவர் எந்தவொரு சாதியையும் ‘குற்றப்பரம்பரை’ என அறிவிக்கலாம். அதை நீதிமன்றம் கேள்வி கேட்க முடியாது. ஒரு சாதியில் பிறந்தவர்கள் அனைவரும் பிறவிக் குற்றவாளிகள் என்றது அச்சட்டம். தமிழ்நாட்டில் 89 சாதிகளை குற்றப்பரம்பரைச் சட்டப் பட்டியலில் இணைத்தனர். பட்டியலில் இருந்த சாதியில் பிறந்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தங்கள் பெயர், முகவரி மற்றும் கைரேகையை போலீஸ் நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும். இரவில் ஆண்கள் யாரும் தங்கள் வீட்டில் தூங்கக் கூடாது. போலீசின் கண்காணிப்பில் பொது மந்தை அல்லது போலீஸ் நிலையத்தில்தான் தூங்க வேண்டும். வயதானவர்கள், புதிதாகத் திருமணமானவர்களுக்குக் கூட விதிவிலக்கு கிடையாது.
பக்கத்து ஊருக்குச் செல்வதாக இருந்தாலும் அனுமதி பெற வேண்டும். இந்த விதிகளை மீறினால், 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை கிடைக்கும். கட்டுப்பாட்டு எல்லைக்கு வெளியே வந்தால், ஊர்த் தலையாரி கூட அவரைக் கைது செய்யலாம். சந்தேகப்படும்படி நடந்து கொண்டால் கூட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கும். காலையில் சூரியன் உதித்ததிலிருந்து மாலையில் சூரியன் மறையும் வரை அவர்கள் தம் வீட்டிலிருந்து வேறு எங்காவது போக வேண்டுமானால், கிராமத் தலைவரால் வழங்கப்படும் ராதாரி சீட்டு எனும் அனுமதிச் சீட்டைப் பெற வேண்டும்.
படிக்க: குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா – 2022 : பாசிசத்தை நோக்கிய அடுத்த அடி!
அப்போதைய மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி இந்தப் பட்டியலின் கீழ் கள்ளர்கள் பதிவு செய்யப்படுவதைத் தொடங்கி வைத்தார். அப்போது கள்ளர் சாதியினரின் மக்கள் தொகை 60,000 பேராக இருந்தும், 3000 பேர் மட்டுமே பதிவு செய்தனர். மேலும் ஆயிரம் பேர் மட்டுமே பதிவு செய்வதற்கு வந்துள்ளனர் என்பதை அறிந்த அதிகாரிகள் ஆத்திரம் கொண்டனர்.
அதிகாரிகள் இந்தச் சட்டத்தை பிரமலைக் கள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் நடைமுறைப்படுத்தும் பொருட்டு, பெருங்காமநல்லூருக்கு வந்தனர். ஆனால், மக்கள் அடிபணிய மறுத்தனர்.
மார்ச் 2, 1920 அன்று, போலீசின் கைரேகைப்பதிவு அதிகாரிகளுடன் முகாமிடத் தொடங்கினர். ஊர்த் தலைவர்களும், பெரியவர்களும், “கள்ளர்கள் விவசாயிகள்; காட்டுமிராண்டிகள் அல்ல. எனவே, நீங்கள் சொல்வதை ஏற்றுக் கொள்ள மாட்டோம்” என்று கூறி, மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.
பெருங்காமநல்லூர் மக்கள் 1920 ஏப்ரல் 2,3 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்குப் பதிவு செய்வதற்காக தனித்துணை ஆட்சியர் முன் வர வேண்டும் என மதுரை மாவட்ட உரிமையியல் நீதிபதி மார்ச் 29, 1920 அன்று உத்தரவிட்டார். இந்நிலையில் ஏப்ரல் 1, 1920 அன்று பெருங்காமநல்லூர் ஊர்க்கோயிலில் கூடிய மக்கள், இத்தீர்ப்புக்கு அடிபணியாமல் அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துப் போராடுவது என முடிவு செய்தனர்.
மக்களின் தலைவர்களுக்கும் போலீசுக்கும் வருவாய்த்துறையினருக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அது பயனற்றுப் போகவே, மக்கள் போராட்டக்களம் புகுந்தனர். போலீசின் துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவர்களில் 16 பேரின் உடல்களை ஒரு கட்டை வண்டியில் ஏற்றி, உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள ஆற்றங்கரையில் ஒரே குழியில் புதைத்தனர்.
இந்தத் துப்பாக்கிச் சூட்டின் போது போராடிய மக்களுக்கு குடிநீர் எடுத்துக் கொடுத்து உதவியதற்காக மாயாக்காள் என்ற பெண்ணை போலீசு துப்பாக்கியின் கத்தியினால் குத்திக் கொலை செய்தது. சுமார் 200 பேருக்கும் மேற்பட்டவர்களைப் பிடித்து, சங்கிலிகளால் விலங்கிட்டு ஆடு மாடுகளைப் போல் நடைப்பயணமாக 20 கி.மீ தொலைவிலுள்ள திருமங்கலம் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போலீசு அதிகாரிகள் மக்களிடையே சாதி மோதல்களைத் தூண்டிவிடவும் பல்வேறு வகைகளில் முயன்றனர்.
படிக்க: டங்ஸ்டன் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்தின் வெற்றியை கொண்டாடுவோம்!
அத்தருணத்தில் கைரேகை சட்டத்துக்கு எதிராகப் போராடும் மக்களுக்கு, சிறைப்பட்ட மக்களுக்கு ஆதரவாக வழக்கறிஞர் ஜார்ஜ் ஜோசப் என்பவர் குரல் கொடுத்து வந்தார். சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையும் பெற்றுத் தந்தார். மக்களைப் போராட்டங்களத்திலும் ஒருங்கிணைத்தார். ஜோசப் என்ற பெயர் வாயில் நுழையாததால், மக்கள் அவரை ரோஜாப்பூ என்று அழைத்தனர். இன்றும் அவர் பெருங்காமநல்லூர் மக்களால் பெரிதும் போற்றப்படுகிறார். இன்று வரை குழந்தைகளுக்கு ரோசாப்பூ என்று பெயர் சூட்டும் வழக்கம் அம்மக்களிடம் இருந்து வருகிறது.
பின்னாளில் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்கள், உ.முத்துராமலிங்கம் ஆகியோரும் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தனர். பலகட்டப் போராட்டங்களுக்குப் பின் அச்சட்டத்தை மக்கள் தகர்த்தெறிந்தார்கள்.
இக்குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து எவ்வித முயற்சியையும் அன்றைய இராசாசி அரசாங்கம் முன்னெடுக்கவில்லை. அன்றைய காங்கிரஸ் பார்ப்பனியத் தலைமையும் இந்திய அளவில் எந்த முன்னெடுப்பையும் எடுக்கவில்லை என்பதையே வரலாறு கூறுகிறது.
அன்று, உழைக்கும் மக்களின் மீதான இத்தகைய பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காங்கிரசில் இருந்த பார்ப்பனக் கும்பல்தான், பார்ப்பனியம்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி என்ற மக்கள் விரோத பாசிச சக்திகளின் பின்னணியாக, சித்தாந்தமாக இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நாம் நினைவில் இருத்திக் கொள்ள வேண்டும்.
அன்று, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடி உயிர்நீத்தனர் பெருங்காமநல்லூர் ஈகிகள். இன்றோ, தங்களின் வாழ்க்கையை அழிக்க எத்தனிக்கும் பார்ப்பன, பனியா கார்ப்பரேட்டுகளின் சுரண்டலை எதிர்த்து, ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலின் சதிகளை எதிர்த்து, வீரம் செறிந்த டங்ஸ்டன் எதிர்ப்புப் போராட்டத்தை நடத்தி தங்களின் உரிமைகளை நிலைநாட்டியுள்ளனர் மதுரை மண்ணின் மக்கள்.
ஆம், ஏகாதிபத்திய, பார்ப்பனிய அடக்குமுறைகளுக்கு எதிராக வீறுகொண்டெழுந்து, தங்கள் இன்னுயிரை ஈந்து, உரிமைகளை நிலைநாட்டிய தீரர்களின், ஈகியர்களின் வரலாற்றுத் தொடர்ச்சிதான் நாம். அவர்களின் வழியில் பாசிசத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னகர்த்துவோம்.
தமிழன்பன்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram