கோவையில் மாணவி தற்கொலை: கல்லூரி நிர்வாகமே குற்றவாளி!

அனுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணங்களை திட்டமிட்டே கல்லூரி நிர்வாகமும், போலீசும் இணைந்து திசை திருப்பி மூடி மறைக்கிறார்கள் என கல்லூரி மாணவர்களும், அனுப்பிரியாவின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அனுப்பிரியா (19) என்ற மாணவி கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் (Hindustan Health and Science) பாரா மெடிக்கல் கல்லூரியில் சுவாச சிகிச்சைத் துறையில் (B.Sc., Respiratory Care Technology) முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார்.

15/04/2025 அன்று அனுப்பிரியா மருத்துவமனைக்கு பயிற்சிக்காக சென்றுள்ளார் (அவரது பணி நேரம் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை). அதே மருத்துவமனையில் வேறு கல்லுரியை சேர்ந்த மாணவி பிசியோதெரபி பிரிவில் பயிற்சியில் (internship) ஈடுபட்டு வந்துள்ளார். அந்த மாணவியின் கை பையிலிருந்த 1500 ரூபாய் காணாமல் போயுள்ளது.

ரம்யா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) 1500 ரூபாய் காணாமல் போன விசயத்தை கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். உடனே ஆசிரியர்கள் சி.சி.டி.வி கேமராவை ஆய்வு செய்துள்ளனர். அப்போது பிசியோதெரபி பிரிவு அறையின் அருகே அனுப்பிரியா மற்றும் பிசியோதெரபி பிரிவில் பயிற்சியில் இருந்த மற்றொரு மாணவரும் பேசிக்கொண்டிருப்பது சி.சி.டி.வி-யில் பதிவாகியுள்ளது.

உடனே அனுப்பிரியா மற்றும் மற்றொரு மாணவர் ஆகிய இருவரையும் முதல்வர் அறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ரூ.1500 பணம் காணாமல் போன விவகாரத்தைப் பற்றிப் பேசாமல் கல்லூரி முதல்வர் மணிமொழி, பயிற்சி மேற்பார்வையாளர் மற்றும் பிற வகுப்பு ஆசிரியர்கள் ஆகிய அனைவரும் ”நீங்கள் ஏன் தனியாக இருந்தீர்கள்? என்ன செய்தீர்கள்? காதல் செய்கிறீர்களா? எதற்குப் படிக்க வர்றீங்க? உங்கள் வீட்டிற்கு போன் செய்து பெற்றோர்களிடம் கூறிவிடுவோம், உங்கள் மீது போலீசில் புகார் அளித்துவிடுவோம், நீங்கள் இனி கல்லூரியில் படிக்க முடியாது” என மிரட்டியும் அவமானப் படுத்தும் வகையிலும் அனுப்பிரியாவின் நடத்தையை பற்றி தரக்குறைவாகப் பேசியுள்ளனர்.

கிட்டத்தட்ட நான்கு மணி நேரமாக (2.30 to 6.30) அநாகரிகமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்‌. நான் உண்மையாகவே பணத்தை திருடவில்லை; தயவு செய்து எங்கள் பெற்றோர்களிடம் எங்களை பற்றி தவராக கூற வேண்டாம் என அனுப்பிரியா கெஞ்சியுள்ளார். அதனை மீறியும் அனுப்பிரியாவின் பெற்றோருக்கு போன் செய்து தங்கள் மகள் வேறொரு மாணவியின் பர்சில் இருந்த ரூ. 1500 பணத்தை திருடி விட்டதாக கூறியுள்ளனர். அதன் பிறகு ”இனி இதுபோன்று தவறு செய்யமாட்டேன்” என மன்னிப்பு கடிதம் எழுதிக்கொடுக்குமாறு கூறி மிரட்டி எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பியுள்ளனர்.


படிக்க: கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!


அதன் பின்பு வெளியே வந்த அனுப்பிரியா செய்யாத குற்றத்தை செய்ததாக திருட்டுப் பழி சுமத்தி மனதை நோகடிக்கும் வகையில் டார்ச்சர் செய்ததில் மிகுந்த மனஉளைச்சல் ஏற்பட்டதன் காரணமாக மாலை 6.30 மணிக்கு மருத்துவமனையின் நான்காவது மாடியில் இருந்து கீழே குதித்ததில் உள் இரத்த நாளங்கள் வெடித்து (internal bleeding) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார் அனுப்பிரியா.

இறந்துபோன அனுப்பிரியாவின் உடலுக்கு இதய நுரையீரல் புத்துயிர் (CPR- Cardio Pulmonary Pesuscitation) கொடுப்பதாகவும், இரத்தம் (Blood) ஏற்றுவதாகவும் கூறி மூன்று மணி நேரமாக நாடகமாடியுள்ளது கல்லுரி நிர்வாகம். மாணவி இறந்துவிட்டார் என்பது வெளியில் மாணவர்களுக்கு தெரிந்தால் பிரச்சினை பெரிதாகிவிடும் என்பதால் யாருக்கும் தெரியாமல் திருட்டுத்தனமாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பிறகு அனுப்பிரியாவின் பெற்றோருக்கு, “மாடியிலிருந்து கீழே விழுந்ததில் உங்கள் மகளுக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது. நீங்கள் உடனடியாக கல்லூரிக்கு கிளம்பி வாருங்கள்” என பொய்யான தகவல்களை கூறி வரவழைத்துள்ளனர்.பிறகு அனுப்பிரியா இறந்ததை 6 மணிநேரத்திற்குப் பிறகே அவர்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர்.

விசாரணையின்போது அனுப்பிரியாவுடன் இருந்த மாணவரை இரவோடு இரவாக கல்லூரி மாணவர்களுக்கு தெரியாமல் அவரது சொந்த ஊருக்கு அனுப்பிவைத்துவிட்டு கல்லூரிக்கு ஒரு வாரம் விடுமுறை என அனைத்து மாணவர்களும் வாட்ஸ்ஆப்பில் தகவல் அனுப்பியுள்ளனர். பிறகு கல்லூரி முதல்வர் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் தொலைபேசியும் சுவிட்ச்ஆஃப் செய்துள்ளனர்.

அடுத்தநாள் 16/04/2025 அன்று செய்தியாளர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் மணிமொழி, எந்தவிதமான தெளிவான விளக்கமும் கூறவில்லை. கல்லூரி முதல்வர் மணிமொழி 4 மணிநேரமாக அனுப்பிரியாவை விசாரணை செய்துவிட்டு அந்த மாணவியின் முகமே மறந்து விட்டது என்றும் அனுப்பிரியா தற்கொலைக்கு வேறேதோ காரணம் இருப்பதாகவும் பொறுப்பற்ற முறையில் முன்னுக்குப்பின் முரணாகப் பேசியுள்ளார்.


படிக்க: அம்பேத்கர் பல்கலைக்கழகம்: துணைவேந்தரின் சங்கித்தனத்தைக் கேள்விகேட்ட மாணவி இடைநீக்கம்!


அதே கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவ மாணவிகள் கூறுகையில், “பொதுவாகவே கல்லூரியில் மாணவ மாணவிகள் பேச்க்கொண்டாலே ஏன் அவன்கூட ஓடிப் போகப்போறியா? இரண்டு பேரும் தனியா என்ன பேசிட்டு இருந்தீங்க? என மிகவும் அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவார்கள். கல்லூரி முதல்வர் மணிமொழி கூறுவதுபோல் இறந்த மாணவி அனுப்பிரியாவிடம் சாதாரணமாக விசாரணை செய்திருக்க மாட்டார்கள். விசாரணை என்ற பெயரில் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டி மனஉளைச்சலை ஏற்றபடுத்தியிருப்பார்கள். அதனால்தான் அனுப்பிரியா இந்த விபரீதமான முடிவை எடுத்திருப்பாள்” என ஆதங்கத்துடன் கூறுகின்றனர். “ஆசியர்கள் மீது தவறு இல்லை என்றால் ஏன் ஒரு ஆசிரியர் கூட கல்லூரிக்கு வரவில்லை; சரியான பதிலளிக்கவில்லை? அனுப்பிரியா திருடப்பட்டதாக கூறப்படும் 1500 ரூபாய் பணத்தை 10 மடங்காக நாங்கள் கொடுக்கிறோம். எங்கள் தோழி அனுப்பியாவின் உயிரை கல்லூரி நிர்வாகத்தால் மீட்டுக்கொடுக்க முடியுமா? மொத்த கல்லூரி நிர்வாகமே சரியில்லை” என குமுறுகின்றனர் மாணவர்கள்.

அனுப்பிரியா தற்கொலை செய்துகொண்டதற்கான உண்மையான காரணங்களை திட்டமிட்டே கல்லூரி நிர்வாகமும், போலீசும் இணைந்து திசை திருப்பி மூடி மறைக்கிறார்கள் என கல்லூரி மாணவர்களும், அனுப்பிரியாவின் குடும்பத்தினரும் குற்றம் சாட்டுகின்றனர்.

அனுப்பிரியாவின் (தற்)கொலைக்கு காரணமான கல்லூரி முதல்வர் மணிமொழியை கைது செய்ய வேண்டும்; உமா, லாவண்யா ஆகிய இரு ஆசிரியர்களையும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை எழுத்துப் பூர்வமாக எழுதி 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பம் இட்டு கோவை பீளமேடு போலீசிடம் மனு அளித்துள்ளனர். மேலும் கோவை அரசு மருத்துவமனை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அனுப்பிரியா இறப்பு சம்பவத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டபோது பதிவான சி.சி.டி.வி காட்சிகள் எங்கே? ஏன் அந்தக் காட்சியை வெளியிடவில்லை? கல்லூரி முதல்வர் உட்பட ஒரு ஆசிரியர்க்கூட ஏன் முறையாக பதிலளிக்காமல் ஓடி ஒழிகிறார்கள் என பல்வேறு கேள்விகள் எழுகின்றது. விசாரணையின்போது அனுப்பிரிவின் உடனிருந்த மாணவரின் தொலைபேசி உரையாடலை (Audio) கேட்டுக்கும்போதும்

இந்த விவகாரத்தைத் தொகுத்து பார்க்கும்பொழுதும் மாணவியின் மரணத்திற்கு கல்லூரி நிர்வாகமே முதன்மைக் காரணம் என அப்பட்டமாக தெரிகிறது.

இரத்தம் சிந்தி உழைத்து, பல இலட்சங்களைக் கொட்டி தங்கள் குழந்தைகளை எப்பாடுபட்டாவது முன்னேற்றிவிடவேண்டும் என்ற எண்ணத்துடன் தனியார் கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார்கள் பெற்றோர்கள். ஆனால் தனியார் கல்லூரி நிர்வாகங்களோ, இலட்சஇலட்சமாக பணத்தைப் பிடுங்கிக் கொண்டு, மாணவர்களின் இயல்பான நடவடிக்கைகளைக் கூட குற்றம் சாட்டி அடக்குமுறைகளை ஏவுவது, அநாகரிகமான வார்த்தைகளால் திட்டுவது, உளவியல் ரீதியாக சித்திரவதை செய்வது (mental torture), கல்லூரியில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மூடிமறைப்பது, பொய்யான தகவல்களை பெற்றோர்ளுக்கு தெரிவிப்பது என்பதைதான் தொடர்ந்து செய்து வருகின்றன.

அரசு அதிகார வர்க்கமோ இந்தகைய தனியார் கல்வி நிறுவனங்களின் குற்றங்களை தடுக்க முனையாமல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆதரவாகவுமே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

தங்களை யாரும் கேள்வி கேட்க முடியாது, எதுவும் செய்ய முடியாது என்ற திமிரில் மேலும் மேலும் மாணவர்களை ஒடுக்கி, மாஃபியாக்கள் போல செயல்படுகின்றன இத்தகைய தனியார் கல்வி நிறுவனங்கள்.

தனியார் பள்ளி, கல்லூரிகளில் நடைபெறும் பெரும்பாலான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைப்பதில்லை. மாணவி அனுப்பியா மரணத்திற்கும் நீதி கிடைக்கப்போவதும்மில்லை. இதற்கு சமீபத்திய உதாரணம் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி படுகொலை நிகழ்வும், அதன் பிறகு அரசும், அதிகார வர்க்கமும் நடந்து கொண்ட விதமும்தான்.

ஆகவே அனுப்பிரியா மரணத்திற்கு காரணமான கல்லூரி முதல்வர் மனிமொழி மற்றும் இதில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்ளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்; அவர்களது உரிமையை ரத்து செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட ஹிந்துஸ்தான் ஹெல்த் அண்ட் சயின்ஸ் பாரா மெடிக்கல் கல்லூரி நிர்வாகம் இறந்த மாணவி அனுப்பியாவின் குடுமத்தினருக்கு ஒரு கோடி இழப்பீடு வழங்க வேண்டும்.

இத்தகைய கல்வி மாஃபியா கும்பலை உருவாக்கும் கல்வி தனியார்மயத்தை முற்றாக ஒழித்துக்கட்ட மாணவர்கள், பெற்றோர்கள், உழைக்கும் மக்கள் என அனைவரும் ஒன்றுபட்ட போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே நம்முன் இருக்கும் வழியாகும்.


யாழன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க